Gabcast! MadhaviPanthal #61
எடுப்பு:
இமயம் செல்ல வேண்டும்-அதற்கு
சமயம் வந்திடுமா?
தொடுப்பு:
உமையவள் நாதனை உண்மைப் பரம் பொருளை
இமைப் பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே
(இமயம்)
முடிப்பு:
ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே
ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே
நேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித் துடித்திடுமே - எனவே
(இமயம்)
ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே
- என்னும் போது, ஒன்றன் பின் ஒன்றாய், ஆசை வலை கட்டுவதைக் கண் முன்னே கொண்டு வராங்க இல்லையா?
ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே = இறைவன் நாமத்தை வெறுமனே சொல்லாது, "இசைந்து" சொல்லணும்! மனத்தால் "இசைந்து" சொல்லும் போது தான், இசையாகிறது அல்லவா? ஆடி ஆடி அகம் கரைந்து, "இசை" பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி என்பதே அந்த "இசைந்து"!
இன்று சிவராத்திரி நன்னாளில் "இசைந்து" சொல்லுவோமா? இதோ ஓதுவார் சொல்லித் தர கூடவே ஓதிக் கொண்டே படியுங்கள்!
Thevaram_Appar_Cho... |
ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!
அப்பர் சுவாமிகளின் நமச்சிவாயத் திருப்பதிகம்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச் சிவாயவே.
வேத வாசகம் என்னும் சொல்லுக்குப் பொருளாக உள்ளவன்! சோதி வடிவானவன்!
அவன் பொன்னடிகளை, மனதால் பொருந்திக் கையால் தொழும் போது,
கல் தூணில் பூட்டி, என்னைக் கடலில் போட்டாலும்
நல்ல துணையாய் வருவது, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச் சிவாயவே
பூக்களுக்குச் சிறப்பு, பொங்கி விரியும் தாமரை!
பசுக்களுக்குச் சிறப்பு, சிவபூசைக்கு பஞ்ச கவ்வியம் தருதல்! (பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்ற சாணம்)
அரசனுக்குச் சிறப்பு, கோல் வளையாமல் ஆட்சி புரிதல்!
நாவுக்குச் சிறப்பு, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே!
வீட்டின் விளக்காய் புற இருளும் போக்கும்! அக இருளும் போக்கும்!
சொல்லின் விளக்காய், ஐந்தெழுத்தின் விளக்கமாய், ஆன்ம சோதியுள் திகழும்!
பல ஆன்மாக்களின் அக விளக்கு! அதைப் பலரும் அவரவர் அகத்தில் காண்பார்கள்!
அதுவே நல் விளக்கு! நமசிவாய விளக்கு! நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!
இனிய சிவராத்திரி வாழ்த்துக்கள்!
இந்தச் சிவன் இரவில், ஈழச் சீவன் நிம்மதியை, உளமார வேண்டிடுவோம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!!
3 comments:
ஷையக்காவின் பாடல் இனிமையாக இருக்கு. பதிவிற்கு நன்றி கண்ணா. திருச்சிற்றம்பலம்.
ன் பாடலை இங்கு இட்டு என்னை சிறப்பித்தமைக்கு நன்றி ரவி..பாராட்டிய கவிநயாவிற்கும் நன்றி
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
திருவரங்கப்பிரியா அக்கா பாடிய பாடலும் மற்ற பாடல்களும் அருமை. நன்றிகள்.
Post a Comment