Sunday, July 27, 2008

கேவி மகாதேவன் தந்த தேவாரம் முதல் பாட்டு - தோடுடைய செவியன்!

சீர்காழி அப்படின்னா இப்ப எல்லாருக்கும் நினைவுக்கு வருவது நம்ம கம்பீர கான மணி சீர்காழி கோவிந்தராஜன்! அப்பறம் அவர் புதல்வர் சீர்காழி சிவசிதம்பரம்!
ஆனால் சீர்காழி என்னும் ஊர், இவர்களுக்கு மட்டும் தான் பிறப்பிடமா? இவர்கள் இசைக்கு மட்டும் தான் பிறப்பிடமா?

சீர்காழி = அது தேவாரத்துக்கே பிறப்பிடம்! தேவாரத் தமிழிசைக்கே பிறப்பிடம்!
ஞானப்பால் சுரந்த இடம்! ஞானத்தமிழ் பரந்த இடம்! பரந்து விரிந்த இடம்!!
சைவமும் வைணவமும் ஒற்றுமையுடன் கொடி கட்டிப் பறந்த இடமும் கூட!
சம்பந்தப் பெருமானும், திருமங்கை ஆழ்வாரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, கட்டி அணைத்துக் கொண்ட இடம் என்றும் வைணவ நூற்கள் சொல்லுகின்றன! திருமங்கை ஆழ்வார் பிறந்தது சீர்காழி ஊருக்கு வெளியே உள்ள திருவாலி என்னும் ஊரில் தான்!
தமிழிசை மூவர் - அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, மூவரும் சீர்காழியில் தங்கித் தான் இசை வளர்த்தனர்!

பிரம்மாபுரம் என்னும் சீகாழி மேவிய அந்த முதல் தேவாரப் பாட்டை இன்று சிவன் பாட்டில் பார்ப்போமா? எல்லாரும் ஓரளவு அறிந்த பாட்டு தான்! - தோடுடைய செவியன்!

ஞானக் குழந்தை என்னும் படத்தில், சுசீலாம்மா பாட, கேவி மகாதேவன் இசை அமைத்தார்!
இந்தப் பாட்டுக்கு சம்பந்தர் இட்ட ராகம், தூய தமிழ்ப் பண் = நட்டபாடை என்று பெயர்! கோவில்களில் ஓதுவா மூர்த்திகள் இந்தப் பண்ணில் தான் ஓதுவார்கள்! சினிமாவிற்காக, கொஞ்சம் ஜனரஞ்சகமாக, கேவி மகாதேவன் ட்யூன் போட்டாரு!
நம் நண்பர் ஜிரா, இதை youtube-இல் ஏற்றிக் கொடுத்தாரு!



சிவபாத இருதயர் கோயில் குளத்துக்கு, தினப்படிக் கடன்களுக்குச் செல்கிறார்.
அம்மா பகவதியார் பரிந்துரைக்க, குழந்தையையும் கூட்டிச் செல்கிறார். குளக்கரையில் குழந்தையை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டுத் தான் மட்டும் சூரிய வணக்கத்துக்கு மூழ்குகிறார்!
திடீரென்று அப்பாவைக் காணாமல் குழந்தை அம்மே, அப்பே என்று அரற்றுகிறது!
குமரக் குழந்தை தானே தமிழிசை வளர்க்க சம்பந்தக் குழந்தையாய் வந்துள்ளது? அதான் சம்பந்தம் தேடி அரற்றுகிறது!

மலைநாடன் ஐயா சீர்காழிப் பயணத்தின் போது எடுத்து அனுப்பிய படம்


குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் வந்திருக்க வேண்டிய அம்மாவும் அப்பாவும், குரலைக் கேட்ட மாத்திரத்தில் தான் வருகிறார்கள்! அப்பன் அன்னையைப் பார்க்க, அன்னை அப்பனைப் பார்க்க...
அன்னை ஜகன்மாதா-உலகன்னை அல்லவா?
அவள் முலைப்பால் அனைவருக்கும் சொந்தம் அல்லவா?
பாலூட்டி மறைகிறாள் அன்னை!
கண்ணில் இப்போது நீர் போய் விட்டது! வாயிலோ பால் ஒட்டி விட்டது!

குளித்து வந்த அப்பா, நெளித்து வருகிறார்!
ச்சே யார் வீட்டுக் குழந்தைக்கு யார் பால் ஊட்டுவது?
அவர் பிரம்பெடுக்க, இது பிரம்மாபுரம் மேவிய அம்மை அப்பனைக் காட்டுகிறது!
அன்று தந்தைக்கு உபதேசம் சொன்ன குழந்தை, இன்று தந்தைக்குப் பாட்டு எடுத்துப் பாடுகிறது! தோளில் குழந்தையைச் சுமந்து கொண்டாடுகிறார் தந்தை! தமிழிசைக்கு முதல் கொண்டாட்டம் அது!

பாட்டை ஓதுவா மூர்த்திகள் குரலில் இங்கு கேளுங்கள்! நட்டபாடைப் பண்ணில்! (நன்றி: shaivam.org)
thodudaiya_chevian...


தோடுடைய செவியன் விடையேறி ஓர்
தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என்
உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து
ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே!

இதாங்க எளிமையான பொருள்! (விரிவான பொருள் கீழே)
தோட்டினைச் செவியில் அணிந்தவன், காளை மாட்டில் ஏறி உலா வருபவன்,
தூய வெண்ணிற பிறைச் சந்திரனைச் சூடியவன்,
இடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன், என் உள்ளம் கவர் கள்வன்!
இதழ்களை உடைய தாமரை மலர் மேல் உள்ளான் = பிரம்மன்! அவன் முன்பொரு நாள் பணிந்து ஏத்த, அவனுக்கு அருள் செய்த சிவபெருமான்!
பெருமை மிக்க பிரம்மாபுரம் என்னும் சீர்காழியில் மேவிய ஈசன் அவனே தான்!


ஆனால் தேவாரத்துக்கே பாயிரமான பாட்டில், ஆயிரம் பொருள் ஒளிந்திருக்கு! கொஞ்சம் அசை போடலாம் வாங்க!

சீர்காழிப் பதியின் மேல் மொத்தம் 71 பதிகங்கள்! சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரூமே பாடி உள்ளார்கள்! மூன்று நிலைகள் உள்ள கோயில் சீர்காழி! பூம்புகாருக்குப் பக்கம்! தில்லைக்கும் அருகில் தான்!
* முதல் நிலையில் பிரம்மபுரீஸ்வரர் - லிங்க ரூபத்தில்!
* இரண்டாம் நிலையில் பெரியநாயகன்-பெரியநாயகி இருவரும் ஒரு தோணியில் இருக்காங்க! பிரளயத்தின் போது 64 கலைகளையும் ஒரு தோணியில் ஏற்றிக் காத்தவர் ஆதலால் தோணியப்பர்!
* அதே நிலையில் சட்டநாதர் என்னும் இன்னொரு உருவம்! (பைரவ மூர்த்தி)

தோடுடைய செவியன் = பால் கொடுத்தது யாரு-ன்னு தானே கேள்வி! அப்போ அன்னையைக் காட்டாமல் ஏன் தோடுடைய செவியன்-ன்னு அப்பனைக் காட்டணும் குழந்தை? யோசித்துப் பார்த்தீங்களா?
தோடுடைய செவி யாருக்கு? அன்னைக்கு!
கடுக்கண் உடைய செவி யாருக்கு? அப்பனுக்கு!
சம்பந்தக் குழந்தை அன்னையின் சம்பந்தத்தைத் தான் முதலில் சொல்கிறது!
இறைவனுக்கு ஒரு குழை சங்கம்! ஒரு குழை தங்கம்! தங்கத் தோடு தொங்கும் காது எது?
வாம பாகம் என்னும் இடப் பாகம், அவள் பாகம் அல்லவா? அங்கு தான் தங்கத் தோடு மின்னுது! அவனுக்கோ வெறும் சங்குக் கடுக்கண் தான்! அதான் தோடு உடைய செவியன்(ள்) என்று அன்னையையே குறிக்கிறது குழந்தை!

சரி! அது ஏன் செவியைப் பாடணும்? வித்தியாசாமா இருக்கே! இறைவனின் கருணைக் கண்களைப் பாடினால் கூட ஓக்கே! அது என்ன செவி?
ஹிஹி...குழந்தையைக் "கண்டா" ஓடி வந்தார்கள்? அதன் அழுகுரல் "கேட்டு" அல்லவோ ஓடி வந்தார்கள்! அவர்கள் செவி தானே அவர்களை குழந்தையிடம் இட்டு வந்தது!
அதான், செவிச் செல்வத்தோடு துவங்குகிறது தேவாரம்!
செல்வத்-தோடுடன், தோடு என்று துவங்குகிறது தேவாரம்!
:)

விடையேறி = நந்திகேசன் மேல் ஏறிய ஈசன்! எருதின் மேல் ஏறியவன் சிவபெருமான்! விடை ஏறி நம் வாழ்வுக்கு விடை தருபவன்!

ஓர் தூவெண் மதி சூடி = பிறைச் சந்திரனுக்கு களங்கம் இல்லை! அதனால் தூ வெண் மதி!
மதியை வைத்து குதர்க்கமும் செய்யலாம்! கும்பிடவும் செய்யலாம்! கும்பிட்டால், குதர்க்கம் ஒழிந்து, நமக்கும் தூ வெண் மதி கிடைக்கும்!

காடுடைய சுடலைப் பொடிபூசி = இடுகாட்டுச் சாம்பல் பூசுபவன் ஈசன்! அழித்தல் தொழில் கொண்டவன் அல்லவா? ஆணவம் அழிந்த பின் மிஞ்சுவது சாம்பல் தானே! அவனே பூசிக் கொள்வதால், திருநீற்றின் பெருமை சொல்லி மாளாது!

என் உள்ளம் கவர் கள்வன் = உடலை மண் கவர்ந்தால், உள்ளம் என்னும் ஆன்மாவை ஈசன் கவர்ந்து கொள்கிறான்!
கவர்கிறான் என்று கூடத் தெரியாதவாறு கவர்வதால், கள்வன் என்று செல்லமாகச் சொல்கிறது சம்பந்தக் குழந்தை!

"கள்வன்" என்று முதல் பாட்டிலேயே திட்டுகிறது! பின்னாளில் "பித்தா" என்று முதல் பாட்டிலேயே இன்னொருவரும் திட்டப் போகிறார்! யாருங்க அவரு? சொல்லுங்க பார்ப்போம்!
இப்படிக் கள்வனை நால்வருமே கிட்டத்தட்டத் திட்டித் தான் எழுதுகிறார்கள் முதல் பாட்டில்!:)
நால்வர் திட்டும் என்னென்ன என்று யாராவது சொல்லுங்களேன்!

ஏடுடைய மலரான் = கையில் ஏடு கொண்டு, தாமரை ஏட்டில் தவழ்பவன் பிரம்மன்!
முனை நான் பணிந்து = அவன் முன்னை நாளில் பணிந்து ஏத்த
ஏத்த அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய = பெருமை மிக்க பிரம்மாபுரம் என்னும் சீர்காழியில் மேவும்
பெம்மான் இவன் அன்றே! = பெருமான் இவன் தான்!
அந்தப் பெருமானே, பால் - தந்த பெருமான்,
சொந்த பெருமான், குரல் கேட்டு - வந்த பெருமான்!


தேவார நல்லிசைப் பாடல்களோடு ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமையும்) சந்திப்போம்!
பாடல் ஓதிக் கிடைக்கவில்லை என்றால், அடியேனே பாடி இடுகிறேன்!

சிவ சிவ!
திருச்சிற்றம்பலம்!