Monday, October 20, 2008

தேவாரம்: தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!

இன்றைய சூழ்நிலையில், ஈழத்தில் வாழும் நம் சகோதர சகோதரிகளை அலைகழிக்கும் அல்லல்கள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.
ஈழ மக்களின் அமைதிக்கு உடன்பாடில்லாத எந்தவொரு செய்கைக்கும் பாரத தேசம் துணை செய்யாது என்று வாயால் சொல்லக் கூட இம்புட்டு தயக்கமா? இத்தனை அரசியலா? ஈழ அரசியல்/படையியல் ஒரு விநோதம் என்றால், இந்திய அரசியலும் எந்த வகையிலும் சளைத்தது இல்லை போலும்.

பக்தி இலக்கியங்களிலும் பெளத்த அரசியலை, அதுவும் ஈழத்து பெளத்த அரசியலைச் சிலர் கிழி-கிழின்னு கிழிச்சிருக்காங்க! :) யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நம்ம சிறு பிள்ளை, ஆளுடைய பிள்ளை, நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் தான்! "புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், அவர்கள் எத்தராகி நின்று உண்பவர், அவர்கள் பேச்சைக் கேட்காதீங்க" என்று சீறுகிறார்!

சிவன் பாட்டு வலைப்பூவில், தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று ஈழத்து தேவாரங்கள்...

நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், ஈழ நாட்டிலும் உண்டு! இரண்டே இரண்டு அழகிய தலங்கள்!
1. மாதோட்டம்-திருக்கேதீஸ்வரம்
2. திருக்கோண மலை

பாடியவர்களும் இரண்டே இரண்டு பேர் தான்!
1. ஞான சம்பந்தர்
2. சுந்தர மூர்த்தி நாயனார்

இவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கு ஈசனைச் சேவித்துப் பாடினார்களா, இல்லை இராமேஸ்வரம் திருக்கரையில் இருந்தவாறே தொழுது ஏத்தினார்களா என்பது குறித்து சைவ நூல்களில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஈழத்துத் தேவாரங்கள், ஈழம் போலவே அத்துணை அழகு! பார்க்கலாம் வாரீயளா?



நான் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியதே கதிர்காமமும், கோணேஸ்வரமும், கேதீஸ்வரமும் தான்.

திருச்செந்தூரைத் தானே அலைவாய் என்கிறோம்?
ஆனால் உண்மையில் ஒரு மலையையே அலைத்து அலைத்துத் தாலாட்டும் இயற்கை அழகு, திரிகோணமலைக்கு உண்டு. படங்களில் பார்க்கும் போதே சொக்கிப் போவீர்கள்.
காபி அண்ணாச்சி சொல்லி இருக்காரு, என்னை அங்கிட்டு அழைத்துப் போகிறேன்-ன்னு. ரிஷான் ஷெரீப்பும் சொல்லி இருக்கார். பார்க்கலாம். ஈழத்துக்கு ஒரு சிறு விடிவு காலமாச்சும் தோன்றி, இறைவன் திருவுள்ளம் கனிய, பாலாவிக் கரையில் கேதீஸ்வரரையும், கதிர்காமத்து முருகனையும் அடியேன் கண்ணாரக் கண்டு சேவிக்க வேண்டும்!

திருக்கேதீஸ்வரம் என்னும் திருக்கேதீச்சரம், மன்னாருக்கு அருகே பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. மாதோட்டத்துக்கு அருகில்.

கேதீச்சரத்துக்குக் காசிக்கு இணையான சிறப்பு! சிவ பெருமானுக்குக் காவடி எடுப்பது இங்கு மட்டுமே! தீர்த்தக் காவடி!
சிவலிங்கத்துக்கு நாமே திருமுழுக்காட்ட (அபிஷேகம்) முடியும்!
எப்படிக் காசியில் கங்கை நீரை முகந்து உலகநாதரை முழுக்காட்டலாமோ, அதே போல் பாலாவியில் நீர் முகந்து, தீர்த்தக் காவடி எடுத்து, கேதீஸ்வரருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யலாம்!

படத்துக்கு நன்றி: சிவத்தமிழோன் ஐயா; அவரின் திருக்கேதீஸ்வரம் பதிவு இங்கே!

இறைவன் = கேதீசுவரர். இறைவி = கெளரியம்மை.
சம்பந்தர் பதிகம் ஒன்று. அதில் பதினோரு பாடல்கள்! சுந்தரர் பதிகம் ஒன்று. அதில் பத்து பாடல்கள்! ஆக மொத்தம் இருபத்தியோரு பாடல்கள்!

தீபாவளிக்கு மறுநாள் கேதார-கெளரி விரதம் என்று எங்கள் ஊர் வாழைப்பந்தல் பக்கமும், இன்னும் வடார்க்காடு முழுதும், அதிரசம் சுட்டு, நோன்பு எடுப்பார்கள். இந்தக் கெளரி-கேதார தம்பதிகளைத் தான் இருத்தி நோன்பெடுக்கும் வழக்கம்!

எப்படி ராகு தோஷங்களுக்கு கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் அருகில் உள்ள திருநாகேஸ்வரமோ, அதே போல் கேது தோஷங்களுக்கு, திருக்கேதீஸ்வரம்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆறுமுக நாவலர் அவர்களின் முயற்சியில், தமிழர்கள் பலரை ஒன்று திரட்டி, ஆலயம் மீண்டும் செப்பனிடப்பட்டது!
போரில், இலங்கை அரசின் சிங்களப் படைகள் கோயிலைக் கையில் எடுத்துக் கொண்ட பின், மீண்டும் வழிபாடுகள் நின்று போயின. கோயிலும் நாசமடைந்து இருந்தது!
தமிழர்கள் மீட்புக் குழுவினரின் முயற்சியால், இப்போது ஓரளவுக்கேனும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் படைகள் இன்னும் முழுமையாக அங்கிருந்து வெளியேறவில்லை போலும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த இடத்துக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் மரியாதை கூடவா இல்லை ஒரு அரசுக்கு? :((



சரி, தேவாரத்தைப் பார்க்கலாமா?
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!

- சம்பந்தர்

மேலோட்டமான பொருள்:
புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சில சமணர் ஏமாற்று வேலையும் செய்கிறார்கள். அவர்கள் நின்று கொண்டே உண்பவர்கள். அவர்கள் பேச்சை யாரும் கேட்கவே கேட்காதீர்கள்!
மத யானையைத் தோலுரித்துப் போர்த்தியவர் ஈசன். அவர் மாதோட்ட நகரிலே, பாலாவியின் கரையில் கேதீச்சுரத்தில் அருள் செய்கின்றார். அங்கு சென்று அடையுங்கள்!

என்ன பெளத்தர் மீதும், சமணர் மீதும், சின்னப் பிள்ளையான சம்பந்தர் இப்படி வார்த்தையைக் கொட்டுகிறாரே-ன்னு தோனும்! ஆனால் அந்தக் காலகட்டத்துக்குச் சென்று வந்தால் தான் சற்றே உண்மை புலப்படும்.

அரசாங்கத்தைக் கைக்குள்ளே போட்டுக் கொண்டு, சமயம் வளர்க்காமல், சமயம் பார்த்து சமயம் வளர்க்கும் வித்தையில் பெளத்தர்கள் மித மிஞ்சினார்கள்.
அரசு அலுவல்களில் நேரடி ஈடுபாடு. மக்கள் பிரச்சனைகளில் குளறுபடிகள்.
இவர்கள் துறந்தவர்களின் கடமைகளைச் செய்வதால், அதையே அரசாணை மூலமாக அனைவரும் செய்ய வேண்டும் என்ற கட்டளைகள் சரி வருமா? அதான் ஒரு கட்டத்தில் இவ்வளவு வெறுப்பு தலை தூக்கியது!

பாலகுமாரனின் உடையார் நாவலில், இராஜராஜனின் மகள் சந்திரமல்லிலையை, மருத்துவம் செய்கிறேன் பேர்வழி என்று, நாகைப் புத்த விகாரத்தில் மூளைச் சலவை செய்து, அரசியல் காய்களை எப்படியெல்லாம் நகர்த்தினார்கள்-னு வரும். அது போல ராஜரீக விஷயங்களில் ஏற்பட்ட பல கசப்புகள் தான் சம்பந்தரை இப்படிப் பேச வைத்தது போலும்!

மகான் புத்தரை வெறுத்தாரில்லை! சமயங்களுக்குள் என்றைக்கும் பிணக்கு இருந்ததுமில்லை! சமயத்தைப் பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் மக்களின் அடாவடிகளால் தான் சமயப் பிரச்சனைகளே தலைதூக்குகின்றன!
இறைவன் தங்களைக் காப்பாற்றும் நிலை போய், மானிட ஜென்மங்கள் தாங்களே, தங்கள் தங்கள் இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மடமையால் தோன்றுவது தான் இத்தனை அடாவடிகளும்!

சுந்தரமூர்த்தியும் திருக்கேதீஸ்வரத்தைப் பாடுகிறார். ஆனால் சம்பந்தர் காலத்தில் இருந்தது போல் இவ்வளவு பெளத்த வெறுப்பு அவர் காலத்தில் இல்லாமல் போனது! நல்லது தான்!
இதோ சுந்தரரின் ஈழத்து தேவாரம்!

மூவர் என இருவர் என
முக் கண்ணுடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில்
மாதோட்ட நன் னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில்
பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருக்
கேதீச்சரத் தானே!


மேலோட்டமான பொருள்:
முத்தொழில் என்றாலும் அதில் நீ உள்ளாய்! இரு தெய்வங்கள் என்றாலும் அதில் நீ உள்ளாய்! முக்கண்ணப்பா!
மாம்பழங்கள் தூங்கும் சோலைகள் நிறைய உள்ள மாதோட்டம்!
அங்கு பாவங்களைப் போக்க வல்ல நெறியாளர்கள் பல பேர் பயில்கிறார்கள், புழங்குகிறார்கள்.
பாலாவியின் கரை மேல் இருக்கும் தேவரே! என்னை ஆட்கொள்வீர் கேதீஸ்வரா!

மாவின் கனி தூங்கும் பொழில் = மாதோட்டத்தில் மாம்பழங்கள் பிரபலமா என்ன?

சரி, அது எப்படி மாம்பழம் தூங்கும்?
நல்ல தூக்கத்தில் அசைவே இருக்காது. அடித்து போட்டது போல் தூங்குவார்கள்.
மாதோட்ட மாம்பழங்கள் ஒவ்வொன்னும் பெரிது பெரிதாகப் பழுத்து இருக்கு! அதனால் காற்றில் ஆடக் கூட முடியாமல், அப்படியே அசைவில்லாமல் தொங்குகின்றனவாம்.
அதான் மாவின் கனி தூங்கும் பொழில் (சோலை) என்றார் சுந்தரமூர்த்தி நாயனார்!


அடுத்து என் உள்ளம் கவர்ந்த கோணேஸ்வரம்; திரு கோணமலை, திரிந்து திரிகோணமலை ஆனது. கடலோர மலையில் உள்ள அழகான ஆலயம்!

திருகோணமலை வடகிழக்கு மாகாணத்தின் தலைநகர். கிழக்குக் கரைத் துறைமுகம். தட்சிண கைலாசம்-தென் கயிலாயம் எனவும் சிறப்பு உண்டு!
இறைவர் = கோணேசுவரர். இறைவி = மாதுமையாள்.

சுடுநீர்ச் சுனைகள் உள்ள தலம். ஆலயத்தின் தீர்த்தமான மகாபலி கங்கை, குகையில் சுரந்து, மலையைப் பிரதிட்சணமாகச் சுற்றி, கடலில் விழுகிறது.
மகாபலி கங்கை திருகோணேஸ்வரத்திலும், மாணிக்க கங்கை திருக்கேதீஸ்வரத்திலும், காவிரிக் கங்கை கதிர்காமத்திலும் பாய்கிறது.

ஈசனின் ஆணையின் பேரில், கயிலை போன்ற மாதிரி மலையை, நான்முகன் உருவாக்கித் தர, அங்கு ஈசன் குடி கொண்டான்! வாயு, ஆதிசேடன் மேல் கொண்ட பொறாமையில், இம்மலைகளை அபகரிக்க...ஈசன் தண்டித்து, திருத்தி அருளினார். மும்மலைகளை காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை என்று மூவிடங்களில் வைக்கச் சொன்னார் என்பது தல வரலாறு! இதனால் இது தட்சிண கைலாசம் ஆனது!

இராவணன் வணங்கிய ஈசனும் திருகோணமலை ஈசன் தான்!
தன் தாயாருக்குப் பூசை செய்ய ஒரு சிவலிங்கம் தேவைப்பட்ட போது, கயிலையில் இருந்தே நேரடியாக உங்களுக்கு எடுத்துத் தருகிறேன் என்று ஆணவம் பொங்கப் பேசினான்.
தவத்தால் கயிலை லிங்கம் பெறாது, பலத்தால் பெற்று விடலாம் என்று இறுமாந்தான்.

நந்தியம்பெருமானைக் குரங்கே என்று எள்ளி நகையாடி குரங்கால் நகர் அழியச் சாபம் பெற்றான். அப்போதும் பணியாது, பலத்தால் மலையைத் தூக்க எண்ணிய போது தான், ஈசன் தன் கால் சுண்டு விரலால் அவனை செருக்கைச் சற்றே அடக்கினார். சிவலிங்கமும் கொடுத்து அனுப்பினார். அப்போதும் கர்வம் விட்டபாடில்லை!

அந்த லிங்கத்தை வைத்து, மற்ற சிவாலயங்களை எல்லாம் திருகோணமலைக்குக் கீழ்ப்படிய வைக்க எண்ணினான். விநாயகப் பெருமான் சற்றே விளையாட, அது பாரதத்தில் திருக் கோகர்ணத்திலேயே தங்கி விட்டது! பெயர்த்து எடுக்க முடியாமல் வெறுங்கையுடன் இலங்கை திரும்பினான்.

பின்னர் அன்னையின் அறிவுறுத்தல் பேரில், சாட்டை சொடுக்கி, சிவாலயம் அமைக்க முடியாது என்று உணர்ந்து வேண்ட, ஈசன் அவனுக்கு மூன்று லிங்கங்களைக் கொடுத்து அருளினார். திருகோண மலையின் மூன்று கோணங்களிலும் நிறுவிட, இராவணன் நிறுவிய சிவலிங்கங்கள் ஆனது!

இதோ சம்பந்தர் திருகோணமலையைப் பாடும் தேவாரம்:
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த, கோண மாமலை அமர்ந்தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான், கருத்துடை ஞான சம்பந்தன்
உற்ற செந்தமிழார் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல் வினை அடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

மேலோட்டமான பொருள்:
குற்றம் இல்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஊர். ஒலிக்கும் கடல் சூழ்ந்த ஊர். கோணேஸ்வரம் என்னும் இந்தத் திருக்கோணமலை. அங்கு அமர்ந்துள்ள சிவ பெருமானை, கற்ற ஞானமும், கேள்வி ஞானமும் கொண்ட இருவருமே வந்து வணங்குகிறார்கள்.

அவர்களின் தலைவனான காழியர் கோன் ஞானசம்பந்தன் என்னும் நான், செந்தமிழில் பதிகம் பாடினேன். கோணமலை என்பது செந்தமிழ் மலை! அந்த மலை மீதான இப்பதிகத்தை உரைப்பவர், கேட்பவர் என்று அத்தனை பேரும் உயர்வு காண்பார்கள்! அவர்களுடைய சுற்றமும் நலம் பெறும்! தொல் வினை நீங்கப் பெறுவர். பொலிவுடன் விளங்குவார்கள்!

கேதீஸ்வரர்-கெளரி அம்மை

சம்பந்தர் நற்றமிழால் பதிந்த இந்த பதிகம் பொய்யாகாமல், ஈழத்தில் பொலிவு தோன்றும் நாள் எந்நாளோ?

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா என்பதால்....
இலங்கைக்கும் இறைவா போற்றி!

சிவோஹம்!
திருச்சிற்றம்பலம்!



இந்த ஆலயங்களுக்கு நான் நேரில் சென்றதில்லை. சென்றவர்கள் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கேன். தேவாரம் படித்துள்ளேன். அவ்வளவே! அதனால் ரசித்துச் சொல்ல முடியுமா என்ற தயக்கம்.
உடனே பல விவரணங்களையும், படங்களையும் இந்தப் பதிவுக்காகத் தந்துதவினாள் என் தோழி! தமிழ்நாட்டு மருமகள் ஆகும் சதாயினி நடேசபெருமானுக்கு என் நன்றி! :)