Monday, November 17, 2008

பெண் ஒருத்தி பாடிய தேவாரம்! - Iconographic Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட மிக நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! நல்லடியார்கள்! தொண்டில் சிறந்தவர்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற பின்புலம் ஏதும் இல்லாமல் ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!
கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ, இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று கலங்கிய ஒரு சாதாரண வீட்டுப் பெண்மணி இவள்!
கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(



மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


அவன் யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு அவள் பேரே புனிதவதி!
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது! கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதவதி தான் புனிதள் ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(

தில்லைச் சிற்றம்பலத்து இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ? ஆனால் இன்றும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! :(

புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...
அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....

பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?

ஆண்டாளின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன், புனிதவதியின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்!
வைணவ இலக்கியத்தின் மொழி, சாதி, பெண்மை, சமூகம் என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!



நாம் அம்மையாரிடம் வருவோம்!
யம்மா புனிதவதி, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை!
தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதலில் பிரபலப்படுத்திவர்களில் அம்மையாரும் ஒரு முன்னோடி!

Iconographic Poetry என்று பின்னாளில் ஆங்கிலக் கவிஞர்கள்/ சிந்தனையாளர்களான D.H. Lawrence, Sigmund Freud முதலானோர் பிரபலப்படுத்தினர்.
ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்! என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர்! சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் அம்மையாரின் நூல்கள், நூல் அமைப்பு கருதி, பதினோராம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!
திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன!
அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை!
ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது
என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயானத் திருக்கோல நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், யாரேனும் அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்! ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!



சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? அன்பர்கள் யாரேனும் சொல்லுங்கள்!
அந்தப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்! அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்; மதி=நிலவு/அறிவு;
அரா=அரவு (பாம்பு)

திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்.
திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
இந்தப் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது!
மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்! ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! இந்தியாவில் மட்டும் தானா இது? பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
இரண்டுமே ஒரே தோற்றம் கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி என்றும் தெரியும்!
இருந்தாலும், இது பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது மதி என்று "ஒன்றாகத்" தேறாது!
மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் மனதின் கீழான இச்சை, மேலான நெறி என்றும் ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


(*** கார்த்திகைச் சோமவாரச் சிறப்புப் பதிவு ***
திரட்டிக்கு அனுப்ப முடியவில்லை! அதனால் பந்தலில் பதிக்கிறேன்!)

Tuesday, November 11, 2008

ஓம் நமசிவாய மங்களம்

மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெரும் கருணையினால் அவரை அவர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலாய மலையில் சென்று தரிசித்து வரும் பேறு கிட்டியது. அப்போது சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்திற்க்கும் அதன் மூலமாக அந்த ஆண்டவனுக்கும் மங்களம் பாடும் விதமாக அமைந்த பாடல். (ஹிந்தியில் அமைந்திருந்தாலும் யாவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்).



திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய

பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும் சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில் முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின் நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ் பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய் அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை, கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல் வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும், முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில் திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம் தீர்க்கும் மந்திரம்.

கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம். சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம். இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால் கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம்.


சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம் வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது. கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும் இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன் சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது.
ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம் அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில் ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு, திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால் என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால் ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால் ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால் மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம், நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால் சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது.

இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும் அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல் செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம். ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும். ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும், 18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால் அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால் வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால் ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63 கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72 கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81 கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90 கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99 கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர் மோட்சம் அடைவர்.

இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும், கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம் ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில் செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம் லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப் போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால் மோக்ஷம் கிட்டும்.



திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .




காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)


நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)


நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தருவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)


கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி தேடியப் பண்பராய்
யாரும் காண்பதரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

நமச்சிவாயப்பதிகத்திற்க்குப்பின் ஓம் மங்களம் பாடல் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.




Get this widget | Track details | eSnips Social DNA



இனி பாடல் வரிகள் தமிழில்

ஓம் மங்களம் ஓங்கார மங்களம்

ஓம் நமசிவாய மங்களம்


மங்களம் நகார மங்களம்

நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)


மங்களம் மகார மங்களம்

மஹா தேவ தயா சிந்து ஈச மங்களம் (ஓம்)


சி மங்களம் சிவாய மங்களம்

சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)


மங்களம் வகார மங்களம்

வாத பேத ரஹ’த் பர பிரம்ம மங்களம் (ஓம்)


மங்களம் யகார மங்களம்

யதா தத்வ பரிக்ஞான வேத மங்களம் (ஓம்)