Sunday, August 10, 2008

சுந்தரர் தேவாரம்: நண்பனை மறந்தாயோ? பொன்னியின் செல்வனில் எங்கே வருகிறது?

ஒருத்தர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, திடீரென்று சென்னை வருகிறார்! வேலை மிகுதி! சென்னையில் இருக்கும் தன் ஆருயிர் நண்பனைக் கூப்பிடக் கூட முடியவில்லை! ஆனால் சென்னை நண்பருக்கோ ஞான மூக்கு இருக்கு! :)
நண்பன் நம்ம ஊருக்குத் தான் வந்துள்ளான் என்பதை எப்படியோ ஞான மூக்கில் மோப்பம் பிடித்து விட்டார்! உடனே என்ன செய்வார், சொல்லுங்க?

"டேய், எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களோ?" என்று கெஞ்சலாம் - இது ஒரு வழி!
நண்பன் வீட்டுக்குப் போயி "பளார்" என்று கன்னத்தில் கொஞ்சலாம் - இது இன்னொரு வழி! :)
ஆனால் சங்கரன் அன்று ஏனோ கொஞ்சவில்லை! கெஞ்சிக் கொண்டு இருந்தான்!
எந்த சங்கரனா? ஹிஹி! தஞ்சை மாவட்டம், திருமழபாடி என்னும் ஊரில் குடியிருக்கும் ஒரு சங்கரன் தான்!
ஈசனுக்கே தோழன், அந்தரங்க விஷயங்களைக் கூட ஈசனிடம் பேசக் கூடிய பக்தர்! அடிச்சுக்குவாங்க, அணைச்சிக்குவாங்க!
இப்படி எல்லாம் நட்பு கொள்ளக் கூடிய தம்பிரான் தோழர்கள் = சிவபெருமானும்-சுந்தர மூர்த்தியும்!

சுந்தரர் அப்போது கொள்ளிடக் கரையின் சிவத் தலங்களை எல்லாம் தரிசிக்கப் பயணம் மேற்கொண்டு இருந்தார். திருவையாறு மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்கள்.
அன்று இரவு திருவாலம்பொழில் என்னும் ஊரில் ராத்தங்கல் (நைட் ஸ்டே)! அடுத்த நாள் கொள்ளிடக் கரையைக் கடந்து போக வேண்டும்! சுந்தரருக்கு ராத்தூக்கம் வரவே இல்லை!



நள்ளிரவில் திடீர் என்று ஒரு குரல்! கெஞ்சு குரல்!
"சுந்தரா, என்னை மறந்தனையோ? மழபாடிக்கு வர மறந்தனையோ??"

சுந்தரர் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார். உடன் வந்த பக்தர்கள் குழாம் எல்லாம் என்னவோ ஏதோ என்று விழித்துக் கொண்டனர்.
"இங்கே மழபாடி என்று ஏதாச்சும் ஊர் இருக்கா?" - ஊர் மக்களிடம் சுந்தரர் வினவுகிறார். மக்கள் திருமழபாடியில் உள்ள வயிரத்தூண் நாதரைப் பற்றிச் சொல்கிறார்கள்!

ச்சே நண்பனையா மறந்தோம்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது! பொழுது பொல பொலவென்று புலர்கின்றது...நண்பனைக் காண ஓடோடிச் செல்கிறார் சுந்தரர்!

"டேய், உன்னை மறப்பேனாடா? என்ன பேச்சு பேசற நீயி? வைரத்தூண்-னு உனக்குப் பேரு! உன் வைராக்கியமும் வைரம் போலவே தான் இருக்கு!
என் மேலே கோபம்-ன்னா, இந்தா, நாலு அறை அறைஞ்சிரு! அதுக்காகப் பேசாம எல்லாம் இருக்காதே!
ஒரு முறை என்னை நேருக்கு நேராத் தான் பாரேன்! அப்புறம் தெரியும் உன் வீம்பு எல்லாம்!
உன்னை அல்லால் வேறு யாரைடா நினைக்கப் போகிறேன்? அன்னே உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?"

திருச்சிற்றம்பலம்!
Sundarar_Thevaram_...

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!

திருச்சிற்றம்பலம்!

இதாங்க எளிமையான பொருள்:
பொன் போல் சிவப்பா இருக்கும் என் சிவப்பா!
புலிதோலை இடையில் கட்டிக்கிட்டு இருக்காய்! உன் தலையில் உள்ள சடாமுடியில், கொன்றைப் பூ மின்னுகிறது!
வாராது வந்த நட்பின் மாமணியே! மழபாடியில் குடியிருக்கும் மாணிக்கமே!
உன்னை அல்லாமல் வேறு யாரை நினைக்கப் போகிறேன்? எந்நாளும் என் மனத்துக்கினிய நண்பன் நீ தான்! நீ தான்!



சரி, புதிருக்கு வருவோம்!
1. பொன்னார் மேனியனே என்ற பாடல், கல்கியின் பொன்னியின் செல்வனில், பல இடங்களில் வரும்! எந்தக் கதாபாத்திரத்தின் அறிமுகப் படலத்தில் இந்தப் பாடல் வருகிறது?

2. இந்த "மழபாடி மறந்தனையோ" கதையும் பொன்னியின் செல்வனில் வரும். யார் யாருக்குச் சொல்வாங்க? எந்தக் கட்டத்தில்?

திருமழபாடியை ஒரு ரவுண்டு வரலாமா?
பாடி என்றால் தங்குமிடம்; பாசறை!
கங்கபாடி-ன்னு ஊரு இருக்குல்ல? அதே போல், மழபாடி = மழவர்கள் தங்கும் பாடி! காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று! திருவையாற்றுக்கு அருகில்!
இறைவன்: வயிரத் தூண் நாதர், வஜ்ர ஸ்தம்ப ஈஸ்வரர் இறைவி: அழகம்மை
நந்திகேஸ்வரர் திருமணம் நிகழ்ந்த தலம்! சுயசை என்னும் நங்கை நல்லாளுக்கும் நந்தியம்பெருமானுக்கும் இன்றும் பங்குனி மாதம் திருமண விழா எடுப்பிக்கிறார்கள்!

பாடலுக்கு நன்றி: பாலராஜன் கீதா (பாகீ இன்னும் சில தலங்களுக்கு தேவாரப் பாடல் ஒலிப்பத்திகளை அனுப்பியுள்ளார்) ; சில படங்களுக்கு நன்றி: சதீஷ் குமார்


திருமழபாடி ஆலயம்

பதிகத்தைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?

நண்பன் நம்மிடம் கோபித்துக் கொண்டால் முதலில் என்ன செய்வோம்?
மன்னிச்சோக்கோ என்று முதலில் கெஞ்சல்!
சூடு தணிந்தவுடன், அவனையே கலாய்த்து சிறு கொஞ்சல்!
அதே தான் இங்கும் நடக்கிறது!

அன்னே......உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?
அன்னே = அன்னையே, அம்மா, அம்மே!
சில நெருங்கிய நண்பர்கள் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது பார்த்திருக்கலாம்; "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்றும் பேசிக்குவாங்க! நண்பன் எப்படி அம்மா ஆக முடியும்? ஆக முடியுமா?

வீட்டுல அன்னிக்கி சங்கரா மீன் வறுவல்; மதியம் சாப்பிட்டாச்சி; இன்னும் ரெண்டு மூனு துண்டு தான் பாக்கி இருக்கு! அப்பாவுக்கு ஒரு துண்டை வைத்த அம்மா, தனக்கு மட்டும் படக்கென்று மோர் ஊத்திக்கறாங்க!
அட, என்னாம்மா-ன்னு கேட்டா, ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லுறாங்க! அப்படியே ரெண்டு மீன் துண்டையும் பையனுக்கு வச்சிடறாங்க! நீ ஒன்னு வச்சிக்கோம்மா-ன்னு சொன்னா, அடடா நான் மோர் ஊத்திக்கிட்டேனே! சரி, நீயே சாப்பிடுப்பா-ன்னு ஒரு பொய் நாடகம்! இதே மாதிரி நாடகங்கள் சில நெருங்கிய நட்பிலும் உண்டு! :)

அம்மாவிடம் ஆயிரம் சண்டை போட்டாலும், திரும்பியும் போயி அங்கேயே தான் நிற்போம்! பேசிக்க மாட்டோம், ஆனால் ஏதோ ஒரு இழை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்!
நாம தப்பே செஞ்சாலும் கூட, அம்மா மட்டும் நம் பக்கம் தான் இருக்கணும் என்கிற ஒரு கண்மூடித்தனமான எண்ணம்! இது போல சில நட்பும் உண்டு!
இவர்கள் தான் "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்று பேசிக் கொள்பவர்கள் :)

சுந்தரர்-ஈசன் நட்பும் அப்படித் தான்! ஈசனையே பொய் சாட்சி சொல்ல அழைப்பார்! அதான் அன்னே! அம்மா! என்று நண்பனை விளிக்கிறார்!
டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே, உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே!


ஓதுவா மூர்த்திகள், தேவாரம் இசைக்கிறார்கள்!

பொன்+ஆர்+மேனியனே = ஆர்-ன்னா அழகு!
சிவபிரான் தகதக என்று காய்ச்சின பொன் நிறத்தைக் கொண்டவன்! செம்பொன் மேனி என்பார்கள்! அதாச்சும் சிவப்பாகவும் இருக்கும், பொன் போலவும் இருக்கும்!

காய்ச்சின பொன்னை எப்படி வேண்டுமானாலும் உருக்கி விடலாம்! எந்த வடிவத்திலும் தட்டி நகை செய்து விடலாம்!
அதே போல் சிவபிரானைத் தவத்தால் உருக்கி விடலாம்! வரப் பிரசாதி! பக்த கோலாகலன்! தவத்தில் சோதனைகள் கொடுத்தாலும், உருகி விடுவதில் எளியன்! வரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து விடுவான்!

அதனால் தான் அசுரர்கள் சிவபிரானை நோக்கியே பெரும்பாலும் தவம் இருப்பார்கள்! மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது! :)

புலித்தோலை அரைக்கு அசைத்து = அரை என்றால் இடை, இடுப்பு
(அரை-ஞாண் கயிறு-ன்னு சொல்றோம்-ல! எத்தினி பேரு இந்தக் காலத்திலும் அரைஞாண் கயிறு கட்டிக்கிட்டு இருக்கீங்க? கையைத் தூக்குங்க! :)

புலித்தோலை இடையில் அசைத்துக் கொண்டு உள்ளான்! ஒழுங்கா மடிப்பு எல்லாம் வச்சிக் கட்டினா, அதுக்குப் பேரு கட்டுதல்! ஆனால் இங்கோ பரபரவென்று புலித்தோலை ஒரு இழுத்து இழுத்து இருக்கான்; அம்புட்டு தான்! அதனால் அசைத்து என்கிறார்!

கர்மங்களைச் செய்தாலே போதும்; இறைவனைத் தனியாகப் பணிய எல்லாம் தேவையில்லை என்ற கொள்கை உடையவர்கள் கர்ம மீமாம்சை ரிஷிகள்!
தாருகா வனத்தில் அவர்கள் சிவபெருமானை எதிர்த்து ஆபிசார ஹோமம் என்ற ஒன்றினைச் செய்கிறார்கள்! அப்போது ஏவி விடப்பட்டவை தான் புலி, மான் போன்றன! புலியைக் கொன்று அதன் தோலை அரைக்கு அசைத்துள்ளான் ஈசன்!
மின்னார் செஞ்சடை மேல், மிளிர் கொன்றை அணிந்தவனே =
செம்மையாக இழுத்துக் கட்டப்பட்ட ஜடாமுடி! அது மின்னுகிறது! எதனால்? சந்திர மெளலி அல்லவா? கறையில்லாப் பிறையால் மின்னுகிறது! அதான் மின்னார் செஞ்சடை!

சடையின் மேல் கொன்றை மலர் சூடி உள்ளான்! கொன்றை மலர் ஈசனுக்கு மிகவும் உகந்த மலர்! மஞ்சள் நிறத்தில் அதுவும் தததக-ன்னு மின்னும்!
தாழம்பூ அவனுக்கு ஆகவே ஆகாது! கொன்றையோ அவனை விட்டுப் போகவே போகாது!
கொன்றை பற்றி யோகன் அய்யா இட்ட சிறு பதிவு இங்கே!

மன்னே, மாமணியே, மழபாடி உள் மாணிக்கமே =
மன்னுதல் = நிலைத்து இருத்தல்! மன்னும் இமயமலை என்பார்களே, அது மாதிரி!
மற்ற செல்வங்கள் எல்லாம் செல்வம், செல்வம், செல்வோம்...என்று சென்று விடும்!
ஆனால் சிவச்செல்வம் எப்போதும் மன்னி நிற்கும்!

விபூதி என்பதற்கே செல்வம் என்று தான் பொருள்!
நித்ய விபூதி என்று வைணவமும் விபூதியைப் பேசும்! அது போல, நட்புச் செல்வமும் என்றும் நிலைத்து இருக்க வேண்டித் தான் மன்னே என்கிறார்!

டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே! உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?


உயிர் நண்பர்கள் யாரேனும் பிரிந்து இருந்தால், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ, இந்தத் தோழமைத் திருப்பதிகத்தை அடியேன் வாசித்து அர்ப்பணிக்கிறேன்!

அடுத்த திங்கட்கிழமை, ஒரு வாசகத்துக்கும் உருகாதவர்கள், திருவாசகத்துக்கு உருகப் போறோம்! அதுக்கு முன்னாடி பொன்னியின் செல்வன் புதிருக்குப் பதில் சொல்லுங்க மக்கா! :)

29 comments:

Kavinaya said...

முதல்ல மறந்துட வேண்டியது; அப்புறம் இப்படி ஒரு கூடை பனிக்கட்டியை கைலைநாதன் தலை மேலேயே வைக்க வேண்டியது. என்ன (எழிலான) நியாயமோ இது? (நீங்க எந்த நண்பர்கிட்ட சொல்லாம போனீங்க?)

பொன்னியின் செல்வன் இவ்வளவு துல்லியமால்லாம் நினைவில்லை. பொரட்டிப் பார்க்க நேரமும் இல்ல. பார்க்கலாம் யாராவது வந்து சொல்லுவாங்கதானே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
Anonymous said...

Enna sir, kazhta maaga ketkirirgile ?? :( :)

1. Senthan amuthan

2. The great Aazhvaarkadiyan

Am I right?

krishnan

Anonymous said...

சிவபெருமான் மனசுல சுந்தரருக்கு மட்டும் ஒரு சிறப்பான இடம் உண்டு. சுந்தரர் குருபூசை செய்து பிறந்தவராம் என் மறுபாதி. மாமியார் இன்னி வரைக்கும் விடாம சுந்தரர் குருபூசை செய்யறாங்க

குமரன் (Kumaran) said...

பாடல் பாடியவர் மிக மிக அருமையாகப் பாடியிருக்கிறார் இரவிசங்கர். அதிகாலையில் எழுந்தவுடன் பாடலைக் கேட்க மிக மிக இனிமையாக இருந்தது. இன்று முழுவதும் இந்தப் பாடல் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
முதல்ல மறந்துட வேண்டியது; அப்புறம் இப்படி ஒரு கூடை பனிக்கட்டியை கைலைநாதன் தலை மேலேயே வைக்க வேண்டியது//

அதானே!

//நீங்க எந்த நண்பர்கிட்ட சொல்லாம போனீங்க?//

ஒரு நெருங்கிய பதிவர் தான்! :)))

பொ.செ. பதிலை ஒருத்தர் சரியாச் சொல்லி இருக்காரு, பாருங்கக்கா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
Enna sir, kazhta maaga ketkirirgile ?? :( :)

1. Senthan amuthan//

கிருஷ்ணன்-உங்கள் விடை சரியே!

//2. The great Aazhvaarkadiyan

Am I right?//

உம்...சரி தான்! ஆழ்வார்க்கடியானுக்கு இந்தக் கதையை யார் சொல்லுவாங்க?

குமரன் (Kumaran) said...

சிறு விளக்கம், பிரித்து மேயும் விளக்கம், நடுவில் கதைகள் என்று நன்றாகத் தான் இருக்கிறது இரவிசங்கர். நன்றி நன்றி.

குமரன் (Kumaran) said...

பிறைக்கு கரையில்லையா கறையில்லையா? சிறு எழுத்துப்பிழை என்று நினைக்கிறேன். :-) இப்படி நிறைய பிழை விடாதீர்கள். ஆபிசாரம் வந்துவிடும். :-)

குமரன் (Kumaran) said...

பாடலின் ஒலிப்பதிவை அனுப்பிய பாலராஜன் கீதாவிற்கு மிக்க நன்றி. மீண்டும் மீண்டும் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன குமரன்....
நட்புப் பதிகத்தில் மிகவும் ஒன்றி விட்டீர்கள் போல! :)

பாடல் மிக அருமையா வந்திருக்கு! பாலராஜன் சாருக்குத் தான் நன்றி சொல்லோணும்! பாடலைப் பாடியது தருமபுரம் ஆதீன ஓதுவார்-ன்னு நினைக்கிறேன். பெயரைக் கேட்டுச் சொல்கிறேன்!

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பாடல், பதிவு.....

கே.ஆர்.எஸ், மவுலி அப்படிங்கறத, மெளலி அப்படின்னு மாத்தினா என் கண்ணுக்கு இன்னும் சிறப்பான பதிவா தெரியும்... :-)

ஏதேது ஆபிசாரம் குமரனையும் பாதிச்சுருக்கு போல :-)....

மெளலி (மதுரையம்பதி) said...

ஏனுங்க கே.ஆர்.எஸ், போஸ்ட் போட்டா மெயில் ஏதாச்சும் அனுப்ப கூடாதா?...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இன்று முழுவதும் இந்தப் பாடல் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்//

இங்கும் இதே நிலைமை தான் குமரன்!
ஆபீஸ் வந்த பிறகும் ஹம் பண்ணிக்கிட்டே இருக்கேன்! :)

மாலையில் வீட்டுக்குப் போயி பாடிவிட்டு, பதிவில் சேர்க்கலாம்-னு இருக்கேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
மவுலியை மாத்தியாச்சி! இப்போ சூடண்டி!
அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)

BTW,
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை-ன்னு மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் மவுலி-ன்னு வரும்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஏனுங்க கே.ஆர்.எஸ், போஸ்ட் போட்டா மெயில் ஏதாச்சும் அனுப்ப கூடாதா?...//

இன்னிக்கி ராவோட ராவா, கந்தர் அலங்காரம் வேற இருக்கு! அதான் ஒரே மெயிலா அனுப்பலாம்னு இருந்தேன்!
Birthday Hangoverன்னு உண்மை எல்லாம் சொல்ல மாட்டோமே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சின்ன அம்மிணி said...
சிவபெருமான் மனசுல சுந்தரருக்கு மட்டும் ஒரு சிறப்பான இடம் உண்டு//

ஆமாம்-கா!
இந்த மாசம் தான் சுந்தரர்-பரவை நாச்சியார் திருமணம் கூட! கோயில் உற்சவம் உண்டு! என்னிக்கு-ன்னு தெரியலை!

//சுந்தரர் குருபூசை செய்து பிறந்தவராம் என் மறுபாதி. மாமியார் இன்னி வரைக்கும் விடாம சுந்தரர் குருபூசை செய்யறாங்க//

வாவ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
பிறைக்கு கரையில்லையா கறையில்லையா?//

கறை தான்!
கவனக் குறை தான்!
மாத்திட்டேன் குமரன்! :)

//இப்படி நிறைய பிழை விடாதீர்கள். ஆபிசாரம் வந்துவிடும். :-)//

ஆபிசாரம் எல்லாம் கருத்துக்குத் தான்! எழுத்துக்கு இல்ல!
சங்கரன் என்கிற பேரு இருக்குல்ல! எல்லாம் பேர் ராசி! ஹா ஹா ஹா!

மெளலி (மதுரையம்பதி) said...

//Birthday Hangoverன்னு உண்மை எல்லாம் சொல்ல மாட்டோமே! :)//

இத தனியா வேற சொல்லணுமாக்கும், அதான் போன் பேசறபோதே கவனிச்சேனே !!! :)

ambi said...

//மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது!//

அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)))

நல்ல விளக்கம். திருசிற்றம்பலம். :)

Sathis Kumar said...

பாடலைக் கேட்டேன், மெய்மறந்தேன்.. அருமையான வரிகள், அருமையான கானம், மிக்க நன்றி.. :)

Shobha said...

சதிஷ் PS yahoo group - ல் இந்த கேள்வி இன்று கேட்டிருக்கிறார். இங்கு வந்து பார்த்தால் ஏன் என்று புரிகிறது. :) எனக்கு மிகவும் பிடித்த தேவாரம், பிடித்த தலம்.
அழகான பதிவு.
ஷோபா

Geetha Sambasivam said...

மெயிலைப் பார்த்ததும் ஏதோ புதுப் பதிவாக்கும்னு நினைச்சேன், இது படிச்சாச்சே?? முன்னால் பதிவுக்கு, இன்னும் 2 பின்னூட்டம் கொடுத்திருந்தேன், நிறுத்தி வச்சிருக்கீங்களோ??? தெரியலை! :))))))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
//மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது!//

அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)))//

ஆமாப்பா ஆமாம்!
உன் ஐட்டம் உன் கண்ணுக்கு கரீட்டாப் பட்டுருச்சில்ல? ஹா ஹா ஹா! :))

நல்ல பின்னூட்டம். திருசிற்றம்பலம். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சதீசு குமார் said...
பாடலைக் கேட்டேன், மெய்மறந்தேன்.. அருமையான வரிகள், அருமையான கானம், மிக்க நன்றி.. :)//

வாங்க சதீசு! நீங்க தானே பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் இட்டது!
நீங்களாச்சும் புதிருக்குப் பதில் சொல்லக் கூடாதா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Shobha said...
சதிஷ் PS yahoo group - ல் இந்த கேள்வி இன்று கேட்டிருக்கிறார். இங்கு வந்து பார்த்தால் ஏன் என்று புரிகிறது. :)//

ஷோபாக்கா...சதீஷைக் கலாய்க்கறீங்க போல இருக்கே!புதிருக்குப் பதில் சொல்லுங்க! :)

//எனக்கு மிகவும் பிடித்த தேவாரம், பிடித்த தலம்.
அழகான பதிவு.//

நன்றிக்கா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
முன்னால் பதிவுக்கு, இன்னும் 2 பின்னூட்டம் கொடுத்திருந்தேன், நிறுத்தி வச்சிருக்கீங்களோ??? தெரியலை! :))))))))))))))//

ஆகா..
நிறுத்தி வைப்பதா? தலைவியின் ஆணையை நிறுத்தி வைக்கவும் முடியுமோ? :)
ஒரு பின்னூட்டமும் முன்னூட்டமும் வரலியே கீதாம்மா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
//மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது!//

அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)))//

Ambi,
You having said this, bcoz of repercussion else where, It has now fallen on me to offer this explanation.

இங்கே ஈசனை உயர்வாகத் தான் பேசியுள்ளேன். வரப்ரசாதி, பக்த கோலாகலன் என்று! வரங் கொடுப்பதில் அவர் கருணாமூர்த்தி என்று சொல்வதால், அவர் கண்மூடித்தனமான வரங்கள் கொடுத்து விடுவதாக நீங்கள் அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது!

ஜல்லிகளைச் சற்று நேரம் நிறுத்தி விட்டுச் சிந்தியுங்கள்! இல்லை தேடிப் பாருங்கள்!
தவங்கள் யாரை நோக்கி அதிகம் செய்யப்பட்டதாக புராணங்களும் நூற்களும் சொல்கின்றன?

பிரம்மனும், ஈசனும்!
பிரம்மன் தவத்துக்குக் கட்டுப்பட்டவர்!
ஈசன் கட்டுப்படாதவர்! இருப்பினும் அவர் பக்த கோலாகலன்!

சரி, இப்போது எத்தனை பேர் பெருமாளை நோக்கிச் சொந்த வரங்களுக்காகத் தவம் இருந்தார்கள் என்று கணக்கு எடுங்கள்! விரல் விட்டு எண்ணி விடலாம்!
துருவன், பிரகலாதன், மார்க்கண்டேய மகரிஷி...இன்னும் சிலர்! அவ்வளவு தான்!

அசுரர்களை விடுங்கள்! தேவர்கள் கூட இவரைத் தவம் செய்வது கிடையாது! ஏன்? மேற் சொன்ன காரணம் தான்!

இவர் ஈசனைப் போல் அளவிடற்கரிய கருணைக் கோலாகலம் செய்ய மாட்டார் என்பதே!
இதை அடியேன் சொல்லவில்லை! ஆண்டாள் சொல்கிறாள்! யாம் வந்த காரியம் "ஆராய்ந்து அருளேலோ" ரெம்பாவாய்!

ஜல்லிகள் ஓக்கே தான் சுவைக்கும் விளையாட்டிற்கும்!
ஆனால், சில சமயங்களில் கொஞ்சம் ஜல்லியை நிறுத்தி விட்டு, எதற்குச் சொல்லப்பட்டிருக்கு என்று நிசமாலுமே தேடினால், விளக்கமும் தெளிவும் கிடைக்கும்!

Anonymous said...

அருமையா இருக்கு :)