Friday, April 29, 2011

திருஅங்க மாலை
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வெண்டறை பொய்கையும் போன்றது
ஈசன் எந்தன் இணையடி நீழலே!


என்று பாடிய அப்பர் பெருமான்

சித்திரை சதயம் தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் குருபூசை நாள். மூவரும் ஒவ்வொரு விதமாக இறைவனைப் பாடினர் அம்மையின் ஞானப்பால் உண்டதாலும் குழந்தை என்பதாலும் ஆளுடையபிள்ளை இறைவனை கொஞ்சு தமிழில் பாடினார். ஆதி காலத்தில் ஜைனராக இருந்து பின் இறைவனால் சூளை நோய் தீர்க்கப்பட்டதால் அப்பர் பெருமான் கெஞ்சு தமிழில் பாடினார். எம்பெருமான் தோழர் என்பதால் சுந்தரர் மிஞ்சு தமிழில் பாடினார். மூவரும் இறைவனை அடைய மூன்று வழிகளை காட்டினர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கோவில் கோவிலாக சென்று உழவாரப்பணி செய்த அப்பர் காட்டியது சரியை மார்க்கம். உழவாரப் படையைத் (புல்,பூண்டு நீக்கும் ஆயுதம்) தாங்கி, இறைத்தொண்டும் திருநாவுக்கரசர் செய்ததால் அவருடைய பாடல்கள் திருக்கோயில் தொண்டினையும், மனிதநேயத்தினையும் வலியுறுத்துவதாக உள்ளன. இவர் தாச மார்க்கத்தால் இறைவனை அடையலாம் என்று காட்டினார். திருஞானசம்பந்தர் கிரியை மார்க்கத்தையும் சுந்தரர் யோக மார்க்கத்தையும் உணர்த்தினர்.


கற்றிணைப் பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே!

என்று நமச்சிவாய என்னும் மந்திரத்தால் தண்ணீரில் மூழ்கும் கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்து வந்து கரை சேர்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள்

சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல்.
கொல்ல ஏவப்பட்ட யானையை அடக்கியது.
கட்டப்பெற்ற கல்லையே தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்து உயிர்பெற்றது.
திருநல்லூரில் இறைவனின் திருவடியைச் சூடிக்கொண்டது.
பாம்பு தீண்டப்பெற்ற அப்பூதியின் மகனின் விடத்தை நீக்கியது.
திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது.
திருமறைக்காட்டில் திருக்கோயில் கதவைத் திறக்கச் செய்தது.
பழையாறையில் உண்ணாநோன்பு இருந்து கடவுட்காட்சி பெற்றது.
இறுதியில் திருப்புகலூரில் இறைவனோடு இரண்டறக் கலந்தது.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று இறுமாப்புடன் முழங்கிய இவர், எம்பெருமானை எட்டு போற்றித்தாண்டகங்களால் பாடி மகிழ்ந்தவர் எனவே இவர் "தாண்டகவேந்தர்" என்று அழைக்கப்பட்டார். அவரது குரு பூசை நாளில் அவரது திருவங்கமாலை பதிகத்தைக் காணலாமா? அன்பர்களே.

தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.

( தலையே! நீ சிவபெருமானை வணங்கு , அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து , பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.)

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும்பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.

( கண்களே! பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.)

மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.

( மூக்கே! நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக! அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை , கௌரி, பார்வதி, உமையம்மை, மலைமகளின் மணாளன்)

வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்,

(வாயே! மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக)

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்

(நெஞ்சமே! சடைமுடியை உடையவனும்,குற்றமற்றவனும், மலைமங்கையின் துணைவருமான ஈசனை நினைத்தபடி இரு.)

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

(கரங்களே! நாகங்களை இடுப்பில் அணிந்திருக்கும் நாதனின் மேல் மலர்களைத் தூவி அவரை வணங்குங்கள்)

ஆக்கையாற் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையாற் பயன் என்?

(சிவபெருமான் வாழ்கின்ற ஆலயங்களை வலம்வந்து பூக்களைப் பறித்து அவரைப் போற்றாத உடலை வைத்துக் கொண்டு என்ன பயன்?)

கால்களாற் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்?

( கடல் நஞ்சையுண்டு கண்டம் கறுத்தவரான சிவபெருமானின் உறைகின்ற அழகான திருக்கோயில்களை அதிலும் குறிப்பாக கோகர்ண ஆலயத்தை வலம் வராத கால்களால் என்ன பயன்?)

உற்றார் ஆருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ.

( திருக்குற்றாலத்தில் நடனமாடும் ஆனந்த கூத்தன் சிவபெருமானைத் தவிர உயிர் பிரியும் தருணத்தில் நம்மோடு இருக்கவல்ல உற்றார் வேறு யார்.?)

இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ.

( இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.)

தேடிக்கண்டு கொண்டேன் - திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.

(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.)

தமிழ் கூறும் நல் உலகில் இதற்கு முன்னர் எந்தப் புலவரும் காட்டிடாத ஒப்பற்ற வழி முறைகளை கூறும் அப்பரின் திருவங்கமாலை அவரை அடையாளம் காட்டும் ஒரு அற்புத பதிகம். தலையில் தொடங்கி கண் செவி, வாய்,நெஞ்சு, கைகள், கால்கள் என்று இறைவன் கொடுத்த இந்த உடலின் அனைத்துப் பாகங்களும் எம்பெருமானின் தொண்டி செய்வதற்கே என்று பாடிய அப்பர் பெருமானின் இந்த அற்புத பதிகத்தை படித்து இன்புறுங்கள் அன்பர்களே.


20 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நமச்சிவாய வாழ்க கைலாஷி அவர்களே,

அருமையான ஒரு வலைத்தளத்தை இன்று கண்னுற்று மகிழ்ந்தோம்,

சரி ஒரு வேண்டுகோள் ...

தங்களது தளத்தை தினமும் பார்வையிடுவதற்காக தங்கள் தளத்தில் FEED BURNER EMAIL SUBSCRIPTION ஐ சேர்த்தால் உதவியாக இருக்குமே ?

நன்றி,,

வாய்ப்பிருக்கும்போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய சிவயசிவ - விற்கு வாருங்கள்

http://sivaayasivaa.blogspot.com

Kailashi said...

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!

மிக்க நன்றி சிவ. சி. மா. ஜானகிராமன் அவர்களே.

தங்கள் வலைத் தளத்தை பார்வையிட்டேன் மிகவும் அருமையாக உள்ளது. இன்னும் வருவேன்.

FEED BURNER EMAIL இனைக்கின்றேன்.

அடியேனுடைய மற்ற வலைத்தளங்களையும் தரிசியுங்கள்.
http://kailashi.blogspot.com
http://natarajarblogspot.com

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் கைலாஷி அவர்களே,

தங்களுடைய வலைத்தளங்களில்

http://natarajarblogspot.com

ஓபன் ஆகமாட்டேன் என்கிறதே ?

பரிசோதியுங்கள் ..

கைலாஷி - பிளாகரை தரிசித்தேன். மிக மிக அருமை - திருவருள் எம்மையும் திருக்கயிலாயத்தை தரிசிக்கச் செய்யட்டும் ..

நன்றி

குமரன் (Kumaran) said...

திருவங்கமாலை மிகவும் எளிமையாகவும் இருக்கிறது. உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அப்பரின் குருபூசைக்குப் பந்தலில் உடனே பதிவிட இயலவில்லை! அதை இங்கே தீர்த்து வைத்த கைலாஷி ஐயாவுக்கு நன்றி!

எனக்குச் சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்த பாடலும் கூட! அதுவும் நெஞ்சே நீ நினையாய் என்று வரும் கட்டம்!

//தமிழ் கூறும் நல் உலகில் இதற்கு முன்னர் எந்தப் புலவரும் காட்டிடாத ஒப்பற்ற வழி முறைகளை கூறும் அப்பரின் திருவங்கமாலை//

திரு அங்க மாலை என்பது தான் பின்னாளில் "கவசம்" என்று பக்திப் பாடலாக ஆனது! பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க, என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க என்றெல்லாம் உடலின் பாகங்களைச் சொல்லிப் பாடும் முறைக்கு முதலில் வித்திட்டவரே அப்பர் பெருமான் தான்!

அப்பர் பாடல்கள் பக்தி இலக்கியத்திக்குள் சென்று விட்டதால், அவர் செய்த பல தமிழ்த் தொண்டுகள் வெளியில் வராமலேயே போய்விட்டன!
தாண்டகம் என்னும் பாவில் பாடுவது, அங்க மாலை என்னும் உடற் பா, முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன் என்று சைவத்தில் நாயகி பாவனை என்றெல்லாம் சாதித்துக் காட்டியவர் அப்பர் பெருமான்!

திருநாவுக்கு அரசரான அப்பர் பெருமான் திருவடிகளே சரணம்!

ANGOOR said...

ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி
அன்புடன்
வேல்தர்மா
ஜெர்மனி

தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
முகவரி:
http://www.devarathirumurai.wordpress.com

http://www.devarathirumurai.blogspot.com

தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.

அப்பாவி தங்கமணி said...

ஊரில் இருந்த நாட்களில் கேட்ட பஜனை பாடல்களை தொகுத்து படித்தது போன்ற உணர்வு... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

கண்டறியாதன கண்டேன்!! தங்கள் திருஅங்க மாலை" விள்க்கம் அற்புதம்.

நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_24.html///


தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..

Kailashi said...

மிக்க நன்றி குமரன்

Kailashi said...

//http://natarajarblogspot.com //

http://natarajar.blogspot.com என்பது சரி.

முற்றுப்புள்ளி இல்லை என்று நினைக்கின்றேன்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜானகிராமன்.

Kailashi said...

//அப்பர் பாடல்கள் பக்தி இலக்கியத்திக்குள் சென்று விட்டதால், அவர் செய்த பல தமிழ்த் தொண்டுகள் வெளியில் வராமலேயே போய்விட்டன!
தாண்டகம் என்னும் பாவில் பாடுவது, அங்க மாலை என்னும் உடற் பா, முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன் என்று சைவத்தில் நாயகி பாவனை என்றெல்லாம் சாதித்துக் காட்டியவர் அப்பர் பெருமான்! //

எம்பெருமானை கெஞ்சிப்பாடிய அப்பர் பெருமான் போற்றித்தாம்டகளுக்கும் முன்னோடி KRS ஐயா.

Kailashi said...

வருகைக்கும் அருமையான திருமுறை வலைத்தளங்களை காட்டிக்கொடுத்ததற்கும் மிக்க நன்றி ANGOOR

Kailashi said...

வாருங்கள் அப்பாவி தங்கமணி, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Kailashi said...

//மாலை வணக்கம்.வலைச்சரத்தில் விடிவெள்ளியாக மலர்ந்த தேன்துளிகளை சமர்ப்பிக்கின்றேன்.//

//திருஅங்க மாலை >> Contributors: தி. ரா. ச.(T.R.C.), குமரன் (Kumaran), Kailashi ஒருபோதும் தவ்றவிடுவதில்லை.//

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

Kailashi said...

ஜானிகிராமன், குமரன், KRS,ANGOOR,அப்பாவி தங்கமணி,இராஜராஜேஸ்வரி.

தாங்கள் எல்லாம் பின்னூட்டம் இட்டும் வந்து கவனிக்கவில்லை , தற்போதுதான் பார்த்தேன் மன்னிக்கவும்.

Anonymous said...

ஐயா ,''தலையே நீ வணங்காய்'' என்ற பாடலின் பொருள்:

தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.

''பலி கொள்பவர்'' என்ற அர்த்தத்தில் பாடப்பட்டதல்ல.

Mohan Prabhu said...

you missed one part in our human body and one more..!!!

sevikaal kenmingalo! sivan,emerai, sembavala eripol meanipiran,thiram epothum,sevikaal kenmingalo,

irumanthirupangalo?-esan palgant tennappatu sirumaannethi than sevadi keel sendru, angu irumanthiupangalo.

Usha said...

Nandru

podhuvan sengai said...

நாள்தோறும் நான் பாடும் பாடல்