
அச்சுதம் கேசவம் ராம நாராயணம் என்று தொடங்கும் அச்யுதாஷ்டகத்தின் பொருள்
எழுதலாம் என்று இன்று இணையத்தில் கொஞ்சம் துழாவிக் கொண்டிருந்தேன். அப்போது சந்த வசந்தத்தில்
இந்த பாடல் கிடைத்தது. முனைவர். அனந்த் எழுதியிருக்கிறார். மனதைக் கவர்ந்ததால் இங்கே இடுகிறேன்.
அந்தமோ டாதியில் லாததோர் வத்துவாய்
விந்தையாய்த் தோன்றிடும் வித்தகா! நர்த்தனம்
தந்திமித் தாமெனத் தில்லையில் ஆடுவாய்
வந்தெனை ஆட்கொள வாய்ப்புமிங் குள்ளதோ? (1)
நிர்மலன் நிர்ப்பயன் நிர்க்குணன் என்பதாய்
வர்ணனைக் கெட்டிடா மாமறை நாயகா!
கர்மமோ யோகமோ ஞானமோ கற்றிலாத்
துர்ச்சனன் மூடனேன் தோத்திரம் செய்யுமோ? (2)
குற்றமே செய்வதைக் கொள்கையாய்க் கொண்டநான்
பற்றுதற் காகுமோ பங்கயத் தாளினை?
கற்றவர் போற்றிடும் சிற்பரா நற்றவா
எற்குமே கிட்டுமோ ஈடிலா இன்னருள்? (3)
புல்லியர் செய்பிழை போற்றிடா நல்லவன்
தில்லையில் உள்ளதாய்ச் செம்மையோர் பன்முறை
சொல்லுதல் கேட்டுனைத் தோத்திரம் செய்குவேன்
ஒல்லையென் தொல்வினை ஓட்டுதல் உன்கடன் (4)
ஏற்றிடும் ஐயனென் றெண்ணியே உன்புகழ்
போற்றிநான் சார்ந்துளேன் பொற்கழல் நீழலில்;
கூற்றினை அன்றுநீ கொன்றவா! இன்றுநான்
தோற்கிலோ உன்னையே தூற்றுவார் யாவரும்! (5)
பிஞ்சிளம் சந்திரன் செஞ்சடை சூடுவோய்
நஞ்சினை உண்ணுவோய் நர்த்தனம் ஆடுவோய்
தஞ்சமாய்ச் சார்ந்தவர் தம்வினை சாடுவோய்
அஞ்சலென் றெண்னையும் ஆதரித் தாளுவாய் (6)
விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர் தம்மகக்
கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும்
நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ!
என்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே (7)
கூத்திடும் நாத!உன் கோதிலா நாட்டியம்
பார்த்திடும் அன்பரைப் பார்த்துநான் உய்குவேன்
மூத்துநான் வீழ்கையில் முந்தியே வந்தெனைக்
காத்துநீ ஆளுவாய் காலனின் காலனே! (8) அனந்த்
17-10-2009