Tuesday, November 11, 2008

ஓம் நமசிவாய மங்களம்

மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெரும் கருணையினால் அவரை அவர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலாய மலையில் சென்று தரிசித்து வரும் பேறு கிட்டியது. அப்போது சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்திற்க்கும் அதன் மூலமாக அந்த ஆண்டவனுக்கும் மங்களம் பாடும் விதமாக அமைந்த பாடல். (ஹிந்தியில் அமைந்திருந்தாலும் யாவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்).



திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய

பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும் சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில் முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின் நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ் பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய் அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை, கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல் வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும், முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில் திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம் தீர்க்கும் மந்திரம்.

கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம். சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம். இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால் கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம்.


சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம் வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது. கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும் இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன் சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது.
ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம் அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில் ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு, திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால் என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால் ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால் ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால் மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம், நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால் சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது.

இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும் அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல் செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம். ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும். ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும், 18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால் அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால் வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால் ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63 கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72 கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81 கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90 கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99 கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர் மோட்சம் அடைவர்.

இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும், கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம் ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில் செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம் லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப் போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால் மோக்ஷம் கிட்டும்.



திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .




காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)


நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)


நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தருவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)


கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி தேடியப் பண்பராய்
யாரும் காண்பதரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

நமச்சிவாயப்பதிகத்திற்க்குப்பின் ஓம் மங்களம் பாடல் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.




Get this widget | Track details | eSnips Social DNA



இனி பாடல் வரிகள் தமிழில்

ஓம் மங்களம் ஓங்கார மங்களம்

ஓம் நமசிவாய மங்களம்


மங்களம் நகார மங்களம்

நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)


மங்களம் மகார மங்களம்

மஹா தேவ தயா சிந்து ஈச மங்களம் (ஓம்)


சி மங்களம் சிவாய மங்களம்

சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)


மங்களம் வகார மங்களம்

வாத பேத ரஹ’த் பர பிரம்ம மங்களம் (ஓம்)


மங்களம் யகார மங்களம்

யதா தத்வ பரிக்ஞான வேத மங்களம் (ஓம்)


8 comments:

Kavinaya said...

ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையை அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். இந்த மங்களம் பாடலை நான் சிறு வயதில் அடிக்கடி பாடியிருக்கிறேன். நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்.

S.Muruganandam said...

அடியேனே அழைத்து esnip மூலம் பாடலை மேலேற்றி விட்டேன் என்று கூறலாம் என்று பதிவைத்திறந்த போது தங்கள் பின்னூட்டம் கண்டேன், மிக்க நன்றிகள்.

ஓம் நமசிவாய,
ஓம் நமசிவாய,
ஓம் நமசிவாய,
ஓம் நமசிவாய,
ஓம் நமசிவாய.

குமரன் (Kumaran) said...

திருவைந்தெழுத்தின் பெருமையை மிக விரிவாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. மங்களம் பாடலை இப்போது தான் முதன்முறையாகக் கேட்கிறேன். மிகவும் இனிமையாக இருக்கிறது.

நன்றி.

S.Muruganandam said...

எப்போது கேட்டாலும் எப்படிக்கேட்டாலும் இனிமைதானே ஓம் நமசிவாய மங்களம்.

savita bhaphi said...

very power soungs

krishnar said...

போதன் போதன கண்ணனும்... என்னும் தேவாரத்தில் பல இடங்களில் நேடிய பண்பராய் எனவுள்ளது. தே/நேடிய எது சரி?திரும்பத்திரும்ப பாடல்களைப் பதிவு செய்கின்றார்களே ஒழிய, கருத்தை/பொருளையத் தருபவர்கள் இல்லை."பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்ற சிவபுராண வரிகள் கவனிக்கத் தக்கது.

Arunagiri said...

Iyya,
Iynthezuthu manthirathin mikimayai
eaduthu uraithamikku mikka nandri

Ungal sivappani thodarattum.
nandrikal pala

Arunagiri said...

Iyya,
Iynthezuthu Manthiraththin
perumayayum Athanai ucharippathal
kidaikkum nanmay kalaiyum thelivaga eaduthuraithamayikku nandri.
Thadarattum ungal aanmeegappani