வீட்டுல தங்கமணி வெளியூர் போயிருக்காங்களா? அப்போ நான் மட்டும் தனியா இதைச் செய்யக் கூடாதா? அட, என்னை விட்டுவிட்டு இப்போ தம்பியும் அவன் மனைவியையும் மனையில் உட்காரச் சொல்றாங்களே! என்னாங்க இது அநியாயமா இருக்கு? :)
சென்ற பதிவில் சம்பந்தரின் முதல் பாட்டைப் பார்த்தோம். இன்று அப்பரின் (கிட்டத்தட்ட) இறுதிப் பாட்டை, அவர் உறுதிப் பாட்டைப் பார்ப்போம், வாங்க!
அப்பர் சுவாமிகள் தொண்டில் பழுத்த சைவர்!
வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்! திருநாவுக்கரசர், அப்பர், வாகீசர், தருமசேனர் (சமணர் தந்தது) போன்ற பல பெயர்கள் அவருக்கு!
தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு!
அவருக்கு முன்பே காரைக்கால் அம்மையார் பட்ட கஷ்டங்கள், பாவம் தெரியலையா என்ன?
சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்!
கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை!
அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!
இந்தக் காலத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை-ன்னு பல பேர் செல்கிறார்கள்; அவர்களைக் கேட்டால் முதலில் சொல்லுவது, "எக்காரணம் கொண்டும் தனியாகச் செல்லாதீர்கள்" என்பது தான்! - இத்தனைக்கும் பேருந்து, ஹெலிகாப்டர், உணவு கட்டித் தர ஆட்கள், ராணுவம் என்று சகல வசதிகள் இருக்கும் போதே நிலைமை இப்படி! ஆனால் அந்தக் காலத்தில் அப்பரின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!
பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும்
கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும்,
மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும்,
உடம்பு அடங்கவும், ஊன் கெடவும்,
சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்....
என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!
பாவம்! நால்வரில், நாவுக்கரசர் மட்டுமே உடலால் அதிகம் வருந்த வேண்டி இருந்தது! மற்ற மூவருக்கும் இப்படி இல்லை! இது குறித்து அடியேன் பல முறை யோசித்தது உண்டு!
வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் காளவாய், விஷம் இட்டது, ஆனை இடறியது, கடலில் போட்டது....பின்பு உழவாரப் பணி என்று ஆரம்பம் தொட்டே இவருக்கு மட்டும் இப்படி உடலால் பாடுபடுதல் ராசியானது போலும்!
கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்!
அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்!
அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவனாய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டான்!
"மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்!" - நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை!
"அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!"
"அப்பர் என்ற அடியேனின் பெயர், என் அப்பனை அல்லால், உமக்கு எப்படித் தெரியும்?"
வாக்கு ஈசரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் சிவபெருமான்! சிக்கெனப் பிடித்தேன் அல்லவா? சிக்கினான் சிவன்!
"அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா?
இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்!"
திருவையாற்றில், அப்பர் குளம்
அப்பர் மான சரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன! உடல் சிவ மங்களமாய் மின்னியது!வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்!
காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின!
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!
காந்தாரம் என்னும் அழகிய தமிழ்ப் பண்ணில் இந்தப் பாட்டு! அடியேன் குரலில் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)
Gabcast! MadhaviPanthal #41
இதாங்க எளிமையான பொருள்:
தலையில் கங்கை, தலையில் பிறை, தலையில் கண்ணி என்னும் தலைமாலை!
இவனை இமவான் புதல்வியான பார்வதியோடு அடியேன் பாடினேன்!
கால் சுவடே படாமல் எப்படி இங்கு வந்தேன்? ஆகா, இது திருவையாறு என்னும் தலம் அல்லவா!
பூவும், நீரும் சுமந்து கொண்டு கோயிலுக்குச் செல்கிறார்கள் அடியார்கள்! அவர்கள் முன் புக, அடியேன் பின் புகுவேன்!
காதல் செய்யும் பிறவிகள் எல்லாம் இணை இணையாய், ஜோடி ஜோடியாய் வருகின்றனவே!
அதோ...இறுதியில்...பிடியும், களிறுமாய் (பெண் யானையும, ஆண் யானையுமாய்) அசைந்து அசைந்து...ஈஸ்வரியும், ஈசனும்!
கண்டாலும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றையும் இதோ காண்கிறேனே!
கண்டேன் அவர் திருப்பாதம்!!!
மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க,
நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க,
நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க,
மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்...அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!
பாடலைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? :)
மாதர், பிறை, கண்ணி = மூன்றையும் தலையில் காண்கிறார் முதலில்!
திருப்பாதம் காண்கிறார் முடிவில்! கேசாதி பாத சேவை என்பார்கள்! முடி-அடி சேவை!
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி =
கண்ணி என்பது ஒரு விதமான மாலை தொடுப்பு! ஒத்தை ஒத்தையாத் தான் கட்டுவாங்க! வீட்டில் அம்மாவோ இல்லை மனைவியோ தொடுக்கும் போது பார்க்கலாம்!
(இப்பல்லாம் யாராச்சும் பூ தொடுக்கறாங்களாப்பா? இல்லை flower gripping techniques-ன்னு அதுக்கும் online tutoring இருக்கா? :))
பொதுவாகப், பூவை ரெண்டு ரெண்டா தான் எடுத்துத் தொடுப்பாய்ங்க! ஒரு காம்பு, இன்னொரு காம்பின் மேல் படும்! வாழை நார் இரண்டையும் கட்ட, பூக்கள் வெளியில் இரு பக்கமும் துருத்திக் கிட்டு நிக்கும்! பூ இரு பக்கமும் இருந்தால் தான் மாலைக்கு அழகு!
ஆனால் கண்ணியில் அப்படி இல்லை! ஒரு பக்கம் மட்டும் காம்பு சேரும்படி கட்டுவாங்க! அதனால் பொதுவா கண்ணியைத் தலைக்கு மட்டுமே சூடுவார்கள்! பராபரக்-கண்ணி, கண்ணி-நுண்-சிறுத்தாம்பு எல்லாம் கண்ணி என்று வரும் தமிழ் நூல்கள்!
கண்ணி, மாலை, தொங்கல், தொடையல் எல்லாம் விதம் விதமான மாலை அமைப்புகள்!
இன்னிக்கி சூடிக் கொடுத்தாள் ஆண்டாளின் பிறந்த நாள்! திரு-ஆடிப் பூரம்! கோதையின் நாள் அதுவுமா, மாலை விளக்கம் தானா வந்திரிச்சி பாருங்க! பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு! :)
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன் =
போது=அரும்பு மலர்! முழுக்க விரியாத மலர்! அதாச்சும் வண்டின் எச்சில் படும் முன்னரே மலரைப் பறிப்பது தான் பூசைக்கு வழக்கம்! அரும்பாகவே மாலை தொடுத்து விடுவார்கள்! சார்த்தும் போது, அது அழகாய் மலர்ந்து இருக்கும்!
ஈசனுக்கு அரும்பும், அபிடேக நீரும் கொண்டு செல்கின்றார்கள் அடியவர்கள்! அடியவர் முன் புக, அடியேன் பின் புகுவேன்! இது தான் பக்திக்கு அடிப்படை! தன்னையும், தன் டாம்பீகத்தையும் முன்னிறுத்திப் புகுவது இறைவனுக்குப் பிடிக்காத ஒன்று! ஏன்? இங்கே!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது =
வட கயிலை அடிவாரத்தில் இருந்து, கால் சுவடே படாமல், இதோ திருவையாற்றுக்கு வந்தாகி விட்டது!
திருவையாறு மிகப் பழமையான சிவத்தலம்!
இறைவன்: பஞ்ச-நதீஸ்வரர் = ஐயாறப்பர்!
இறைவி: தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி!
திருவையாறு மொத்தம் ஐந்து ஆறுகள் பாயும் தலம்! = காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு!
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் இசை ஆறும் இப்போது பாய்கிறது அல்லவா? ஐயாறு, ஆறாறு ஆகி விட்டது! :)
திருவையாறு, அறம் வளர்த்த நாயகி-ஐயாறப்பர் ஆலயம்
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!=களிறு=ஆண் யானை=களித்திருப்பதால் களிறு!
பிடி=பெண் யானை=களிறைத் தன் பிடியில் பிடித்து வைத்திருப்பதால் பிடி! :)
இப்படி இறைவனே காதல் மயமாகத் தான் காட்சி அளிக்கின்றான்! சிவ-சக்தி தத்துவமாய் நிற்பதால் தான் சிருஷ்டி-சங்கார ரகசியங்கள்!
சக்தி இல்லையேல் சிவம் என்னும் பதமே இல்லை! அன்னை இல்லையேல் அப்பன் என்னும் பதமே இல்லை!
மான், மயில், கிளி, அன்னம், மனிதர், என்று ஜோடி ஜோடியாக வருவதைப் பார்க்கிறார் அப்பர்! இறுதியில் பிடியோடு, களிறுமாய், அம்மையும் அப்பனும் ஜோடியாகவே வருகிறார்கள்!
பதிவின் முதல் பத்தியில் கேட்ட கேள்விக்கு, //சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்!// இப்போது விடை சொல்லப்போவதில்லை! அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!:)
கண்டேன் அவர் திருப்பாதம்! = முக்தி நிலையில் இருந்த அப்பருக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியுதாம்? மோட்சத்தைத் தருவது எது? ஒன்றே ஒன்று தானே! எம்பெருமானின் திருவடி! = கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!! = கண்டாலும் அறிய முடியாதது எது?
அதான் கண்டாச்சே! கண்டால், அறிந்த மாதிரி தானே-ன்னு கேட்டா, இல்லை! கண்டாலும் அறிவுக்கு எட்டாது! அன்புக்கு ஒட்டும்!
கண்டு, அறியாதன "கண்டேன்"-ன்னு தான் சொல்லுறார்! கண்டு, அறியாதன "அறிந்தேன்"-ன்னு சொல்லலை பாருங்க!
திருவடிகள் அறிவுக்கு எட்டுமா? ...அன்புக்கு ஒட்டுமா?
கண்டு அறியாதன "கண்டேன்"! அவ்வளவு தான்! நாடினேன்! நாடி நான், "கண்டேன்", "கண்டு" கொண்டேன்! சிவ சிவ! திருச்சிற்றம்பலம்!!
(அடுத்த திங்கட்கிழமை, சுந்தர நண்பனின் தேவாரத்தைப் பார்ப்போமா?....)
64 comments:
நல்ல விளக்கங்கள், அருமை.
பாடலை இங்கே கேட்கலாம்.
திருவையாறு பதிகத்தின் பாடலுக்கு அருமையான விளக்கம். நன்றி KRS.
//ஜீவா (Jeeva Venkataraman) said...
நல்ல விளக்கங்கள், அருமை.
பாடலை இங்கே கேட்கலாம்//
இதெல்லாம் ஒத்துக்க முடியாது ஜீவா! ஒத்துக்க முடியாது!
ஒழுங்கா, பதில் சொல்லுங்க!
சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்! இல்லீன்னா, "sorry, you are disqualified"- தான்! ஏன்??
அருமை அண்ணா!
பிரிச்சி மேய்ந்ததில் நிறைய தெரிந்துக்கொண்டேன்!
தொடரட்டும்!
நாங்கள் தொடர்கிறோம் உங்களை :)
இறைவன் இன்னொண்ணும் இங்கே நமக்கு உணர்த்தறார் போல இருக்கு. என்னைக்காண கயிலாயம் தான் வரணும்னு இல்லை. எல்லா உயிர்களிலும் நான் இருக்கேன் அப்படீன்னு உணர்த்தறாரோ!!!
அடுத்தது அழகரா!! மீளா அடிமைதான் எனக்கு ரொம்ப பிடித்தது
// Kailashi said...
திருவையாறு பதிகத்தின் பாடலுக்கு அருமையான விளக்கம். நன்றி KRS.//
நன்றி கைலாஷி ஐயா!
தம்பதி சமேதரா ஏன் வழிபாடு-என்பதை நீங்களும் கொஞ்சம் விளக்கி உதவுங்களேன்!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
பாடலை இங்கே கேட்கலாம்//
ஏன் ஜீவா
அடியேன் பாடினது சரி இல்லியா? :)
ஆகா...விஜய் சிவா தானே பாடி இருக்காரு! பைரவி தானே? சூப்பர்!
ஓதுவார்கள், கொஞ்சம் கிராமத்து இஷ்டைலில் ஓதுவாங்க! காந்தாரப் பண்! மத்தபடி அதே மாதிரி தான் இருக்கு!
//ஆயில்யன் said...
அருமை அண்ணா!//
என்னாது? அண்ணாவா?
அட்லாஸ் சிங்கமே! அடியேன் பொடியேன்! பையன்!
//பிரிச்சி மேய்ந்ததில் நிறைய தெரிந்துக்கொண்டேன்!//
அப்ப இனி பிரிச்சியே மேஞ்சிருவோம்! ஆயில்ஸ் அண்ணாச்சியே சொல்லிப்புட்டாரு!
அழகான பாடலுக்கு அருமையான விளக்கம். பாடல் உங்க குரல்ல இருந்தாலும் இனிமையாகவே இருக்கு :)) (ச்ச்சும்மா.. கோச்சுக்காதீங்க :)
நான் நல்லா பூ தொடுப்பேனே. எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலை. ஆமா.. தொடையல்னா என்ன?
மத்தபடி உங்க கேள்விக்கு என் சார்பா என் தம்பிஸ் யாரேனும் (உங்களையும் சேர்த்துதான்) பதில் சொல்வாங்க :)
இந்தப் பாடலை அப்படியே அழகான சிற்பமாக கல்லில் செதுக்கி இருக்கிறார்கள். குடந்தைக்கு அருகில் உள்ள 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாரசுரம் கோயிலில் உள்ளது. முடிந்தால் படம் தேடி அனுப்புகிறேன்.
இறை அருள் பரப்புதற்கும் அவன் சிலரையே தேர்ந்தெடுக்கிறான். தமிழ் இணையத்தில் நீங்கள் அவர்களில் ஒருவர்!
இந்தப் பாடலிலும், இந்தப் பதிகத்தின் பத்து பாடல்களிலும் ஆணும் பெண்ணும் ஒன்றாய் கூடி
இருப்பதாகச் சொல்லுகிறார் அப்பர். அவ்வாறு ஒவ்வொரு விலங்கு/பறவை யும் கூடி இருப்பதைக் காணும் போதெல்லாம் நாதமும் விந்துமாய், அம்மையப்பனை ஒன்றாக தரிசிப்பதின் அருமையைச்
சொல்கிறார். இதுவரை கண்டறியாதெனவெல்லாம் கண்டேன் என்கிறார். மனிதர், சிவனை தனியாக
யோகியாக வழிபடலாம். சக்தியை சாக்தர்களைப் போல் அம்மனாய் வழிபடலாம். ஆனால் அப்பருக்கோ அவற்றில் எதுவும் பிடிபடவில்லை. எங்கெங்கு நோக்கிலும் சிவனும் சக்தியும் இணைந்தே காட்சி தருகிறார்கள்.
சிவசக்தியே திருப்பாதக் காட்சி தரும் மோட்சத்திற்கான வழி என்கிறார் அப்பர் பெருமான்.
இன்னும் இடுகையைப் படிக்கவில்லை இரவிசங்கர். பாட்டை மட்டும் கேட்டேன். ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க.
ஹரி ஓம் என்று தொடங்கியிருக்கிறீர்கள். திருச்சிற்றம்பலம் என்று தொடங்குங்கள் அடுத்த முறை. அது தான் முறை. :-)
//ஹரி ஓம் என்று தொடங்கியிருக்கிறீர்கள். //
ஹரியும் ஹரனும் வேறில்லையே, அப்படியே இருக்கட்டுமே!
//ஏன் ஜீவா
அடியேன் பாடினது சரி இல்லியா? :)//
அடியேன் பாடியது அருமையாக இருந்தது. தங்களை என்வாசகம் பக்கம் வரவழைக்க இப்படி ஏதாவது செய்தால்தானே!
சொந்தக்குரலால் பாடி அழைப்பதைவிட வேறேது பேறு?
ஹரியும் சிவனும் ஒன்று தான். ஆனால் மரபென்று ஒன்று இருக்கிறதே. திருமுறைகளைப் பாடும் போது இது தான் முறை என்று வகுத்திருக்கிறார்கள். ஏன் அதனை மாற்ற வேண்டும்?
அது மட்டுமில்லை. தில்லை என்று சொன்னாலே தொல்லை வருகிறது என்று இரவிசங்கர் நினைக்கிறார் என்று யாரும் நினைத்துவிடக்கூடாதில்லையா? அதனாலும் தான். திருச்சிற்றம்பலம். ( மென்மையாக நாராயண நாராயண என்று உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. :-) )
//சின்ன அம்மிணி said...
இறைவன் இன்னொண்ணும் இங்கே நமக்கு உணர்த்தறார் போல இருக்கு. என்னைக்காண கயிலாயம் தான் வரணும்னு இல்லை. எல்லா உயிர்களிலும் நான் இருக்கேன் அப்படீன்னு உணர்த்தறாரோ!!!//
சூப்பர்-க்கா!
கரெக்ட்டா புடிச்சீங்க பாயிண்ட்டை!
புகுவார் பின் புகுந்தால்,
அடியார் பின் புகுந்தால்,
அன்பினால் புகுந்தால்,
அந்த அன்பே சிவமாகும்!
அன்பர் கூடுமிடம் கயிலையாகும்!
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் "கயிலையே மயிலை, மயிலையே கயிலை"-ன்னு எழுதி இருப்பார்கள்! பார்த்து இருக்கீங்களா?
//அடுத்தது அழகரா!! மீளா அடிமைதான் எனக்கு ரொம்ப பிடித்தது//
ஓ...நீங்க திருவாரூரா? :))
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே...
பொன்னார் மேனியனே பிடிக்காதோ? :)
//கவிநயா said...
பாடல் உங்க குரல்ல இருந்தாலும் இனிமையாகவே இருக்கு :)) (ச்ச்சும்மா.. கோச்சுக்காதீங்க :)//
ஹா ஹா ஹா
//நான் நல்லா பூ தொடுப்பேனே. எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலை//
சூப்பர்?
சரி, என்ன பூ? வலைப்பூ தானே அக்கா சொல்றீங்க?
//ஆமா.. தொடையல்னா என்ன?//
தொடையல் என்பது தோள் மாலை! தோளில் மட்டுமே சூடுவது!
தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல்-ன்னு நிறைய வகைகள்!
திருமலை எம்பெருமான் சன்னிதிக்கு வலப்புறம் உள்ள யமுனைத்துறை என்னும் மண்டபத்தில் இப்படி விதம் விதமா மாலை கட்டுவாங்க! ஒவ்வொரு வகையின் பேரும், படமும் கூட இருக்கும்!
//மத்தபடி உங்க கேள்விக்கு என் சார்பா என் தம்பிஸ் யாரேனும் (உங்களையும் சேர்த்துதான்) பதில் சொல்வாங்க :)//
தோடா!
இனி மேல், மீ ஒன்லி கேள்வீஸ்!
குமரன், ஜிரா, ஜீவா, பாலாஜி ஒன்லி பதில்ஸ்! :)
//ஓகை said...//
வாங்க ஓகை ஐயா! நலமா? ரொம்ப நாளாச்சு!
//இந்தப் பாடலை அப்படியே அழகான சிற்பமாக கல்லில் செதுக்கி இருக்கிறார்கள். தாரசுரம் கோயிலில் உள்ளது.//
ஆகா! படம் அனுப்பி வைங்க! படம் அனுப்பி வைங்க!
//இறை அருள் பரப்புதற்கும் அவன் சிலரையே தேர்ந்தெடுக்கிறான். தமிழ் இணையத்தில் நீங்கள் அவர்களில் ஒருவர்!//
:)
ஆசிக்கு நன்றி ஓகை ஐயா!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..
//ஜீவா (Jeeva Venkataraman) said...
நாதமும் விந்துமாய், அம்மையப்பனை ஒன்றாக தரிசிப்பதின் அருமையைச்
சொல்கிறார்//
அருமை!
நாத விந்து கலாதீ நமோ நம!
//மனிதர், சிவனை தனியாக
யோகியாக வழிபடலாம். சக்தியை சாக்தர்களைப் போல் அம்மனாய் வழிபடலாம்//
ஆமாம்!
//ஆனால் அப்பருக்கோ அவற்றில் எதுவும் பிடிபடவில்லை. எங்கெங்கு நோக்கிலும் சிவனும் சக்தியும் இணைந்தே காட்சி தருகிறார்கள்//
இத்தனைக்கும் அப்பர் திருமணம் செய்து கொண்டவரில்லை! மற்ற மூவர்கள் மணமானவர்கள் தானே ஜீவா? (esp manivasagar)
//குமரன் (Kumaran) said...
இன்னும் இடுகையைப் படிக்கவில்லை இரவிசங்கர். பாட்டை மட்டும் கேட்டேன். ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க//
:)
நன்றி குமரன்!
//ஹரி ஓம் என்று தொடங்கியிருக்கிறீர்கள். திருச்சிற்றம்பலம் என்று தொடங்குங்கள் அடுத்த முறை. அது தான் முறை. :-)//
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்! :)
பொதுவா, பாட்டாப் பாடத் தொடங்கினா, பிள்ளையார் சுழி மாதிரி, இந்த ஹரி-ஓம் எனக்குத் தானா வந்துரும் குமரன்! (லைட்டா ஹம் பண்ணாத் தெரியாது!)
அடுத்த முறை, குமரன் வகுத்த முறையால், திருச்சிற்றம்பலம் என்றே துவங்குகிறேன்!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
அடியேன் பாடியது அருமையாக இருந்தது//
நன்றி ஜீவா! :)
//தங்களை என்வாசகம் பக்கம் வரவழைக்க இப்படி ஏதாவது செய்தால்தானே!//
ஆகா! என் வாசகம் எனக்கு எப்பமே என் வாசகம் தான்!
இனி ஒரு குமிழ் சிரிப்பான் ஆவது போட்டுச் செல்கிறேன்! :)
//சொந்தக்குரலால் பாடி அழைப்பதைவிட வேறேது பேறு?//
எக்ஜாக்ட்லி!
சொந்தக் குரலோடு, குழுக் குரல் எப்பவாச்சும் செய்யணும்!
(தனித்தனியாக இல்லாமல், all in one, நாம சங்கீர்த்தனம்)!
உங்கள் கதவைத் தான் தட்டுவேன்! :)
//ஜீவா (Jeeva Venkataraman) said...
//ஹரி ஓம் என்று தொடங்கியிருக்கிறீர்கள். //
ஹரியும் ஹரனும் வேறில்லையே, அப்படியே இருக்கட்டுமே!//
ஹிஹி!
ஹரிஹரா
ஹரஹரி
:)
//குமரன் (Kumaran) said...
ஹரியும் சிவனும் ஒன்று தான். ஆனால் மரபென்று ஒன்று இருக்கிறதே. திருமுறைகளைப் பாடும் போது இது தான் முறை என்று வகுத்திருக்கிறார்கள். ஏன் அதனை மாற்ற வேண்டும்?//
உண்மை தான் குமரன்!
அடுத்த முறை மாற்றி விடுகிறேன்!
அடியேன் பிள்ளையார் சுழியை ஹம்மிங்காக வைத்துக் கொள்கிறேன் :)
சரி...ஒரு கேள்வி:
திருமுறைகள் ஓதும் போது
திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று இறுதியில் தானே சொல்லுவாங்க?
முதலில் சொல்வது என்ன? போற்றியா?
//அது மட்டுமில்லை. தில்லை என்று சொன்னாலே தொல்லை வருகிறது என்று இரவிசங்கர் நினைக்கிறார் என்று யாரும் நினைத்துவிடக்கூடாதில்லையா?//
ஹா ஹா ஹா!
தில்லையில்
தொல்லையே
இல்லை!
தில்லை மொத்தமும் தம் கை-வில்லை என்பவரால் தான் தொல்லை! :)
//திருச்சிற்றம்பலம். ( மென்மையாக நாராயண நாராயண என்று உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. :-) )//
சூப்பரு!
இரவிசங்கர். அடியேனுக்குத் தெரிந்த வரை முதலிலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் சொல்வார்கள்.
@குமரன்
இந்தச் சுட்டையைப் பாருங்கள்!
http://www.youtube.com/watch?v=TabWsyaMYJU
முதலில்
தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றி எடுப்பு சொல்லிப் பாடத் துவங்குகிறார்கள்!
இறுதியில் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று சொல்லி முடிக்கிறார்கள்!
SK ஐயா, கீதாம்மா...
ஓதுவார்கள் எப்படி ஓதுவார்கள் என்று அறியத் தாருங்களேன்!
பதிவில் திருவடிகள் படத்தை மாற்றி விட்டேன்!
திருவடிகள், பாதம், குஞ்சிதபாதம் என்ற குறிச்சொல் கொண்டு தேடினாலும் படம் எதுவுமே சரியாகக் கிடைக்கவில்லை!
க்ளோசப்பில் திருவடியை விட முயலகன் தான் தெரிகிறான்! :)
அதனால் யாரையும் குறிக்காது போல் இருக்கும் black & white திருவடி படத்தினைப் போட்டேன்! பத்ம பீடம் எல்லாம் கிடையாது! வெறுமனே திருவடிகள் தான் இருக்கும்!
ஆனால் அது பெருமாள் திருவடிகள் தான் என்று நண்பர்கள் ஒரு சிலருக்குப் பட்டுவிட்டது! :))))
படத்தை மாற்றி விடுகிறேன்!
(சுந்தரேஸ்வரர்-சொக்கநாதர் படத்தைத் தரவிறக்கி, திருவடிகளை மட்டும் image cropping செய்து போட வேண்டியதாகி விட்டது!)
//சரி, என்ன பூ? வலைப்பூ தானே அக்கா சொல்றீங்க?//
அதுவும்தான். ஆனா உங்கள மாதிரிலாம் சூப்பரா தொடுக்க தெரியாது :) நான் சொன்னது நம்மூரு மல்லிகைப்பூ, முல்லைப்பூ, பிச்சிப்பூ,... இதையெல்லாம் தான்... :)
திருவடிகள் படம் நல்லாருக்கு :)
//ஆனால் அது பெருமாள் திருவடிகள் தான் என்று நண்பர்கள் ஒரு சிலருக்குப் பட்டுவிட்டது! :))))//
அடக்கடவுளே!
//பல வீட்டு விசேடங்களில் தம்பதி சமேதரா வாங்க-ன்னு சொல்லுவாய்ங்க! ஏன்? சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்! இல்லீன்னா, "sorry, you are disqualified"- தான்! ஏன்??//
எந்த ஒரு பூஜையிலும் முக்கியமானது அக்னி வளர்த்து செய்யப்படும் ஹோமம். அந்த அக்னி எடுத்துக் கொடுப்பதற்கு மனைவிக்கு மட்டுமே உரிமை. எனவே தான் தம்பதி சமேதராக செய்ய வேண்டும் என்கின்றனர். தங்களுடைய மூதாதையருக்கு செய்யும் திதி, சிரார்த்தங்களில் மருமகள்அக்னி எடுத்துத் தர வேண்டும். அதனால் தான் தகப்பன் அல்லது தாயார் இறந்தால் ஒரு வருடத்திற்குள் மூத்த பையனுக்கு கல்யாணம் பண்ணலாம் என்று சொல்லியுள்ளனர்.
தேவாரப் பாடல்கள் இப்போது தான் கவனிக்கிறேன். மற்ற பாடல்களை படித்து விட்டு வருகிறேன்.
வைதிக முறை வழிபாடுகளில் தம்பதியராகத் தான் ஈடுபடமுடியும் என்று அறிவேன். ஆகம முறை வழிபாடுகளிலும் அப்படித்தானா இரவிசங்கர்?
//சுண்ணாம்புக் கால்வாய்// சிறு பிழைத்திருத்தம். கால்வாய் இல்லை; காளவாய்.
அண்மையில் தான் ஜீவாவின் வாசகத்தில் இந்தப் பாடலைக் கேட்டேன். அதனால் நன்கு நினைவிருந்தது. நீங்கள் மிக நன்றாகப் பாடியிருக்கிறீர்கள். இது காந்தாரப் பண்ணா தங்கள் சொந்தப் பண்ணா?
சேய்மையில் இருந்து நோக்க முதலில் திருமுடி தெரிந்தது போலும். அதான் அங்கிருந்து தொடங்குகிறார். அண்மையில் செல்லச் செல்ல தெய்விகத் தம்பதியரின் திருவடிகள் தெரிகின்றன.
மதுரையில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ இரண்டின் கண்ணிகளையும் கண்டிருக்கிறேன். மற்ற பூக்களைக் கண்ணியாகத் தொடுத்துக் கண்டதில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
பிரித்து மேய்ந்த விளக்கம் நன்றாக இருக்கிறது இரவிசங்கர். தம்பிரான் தோழர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அடுத்த இடுகையில் பார்க்கப் படிக்கக் காத்திருக்கிறேன்.
//வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் கால்வாய், விஷம் இட்டது, ஆனை இடறியது, கடலில் போட்டது....பின்பு உழவாரப் பணி என்று ஆரம்பம் தொட்டே இவருக்கு மட்டும் இப்படி உடலால் பாடுபடுதல் ராசியானது போலும்!//
இதெல்லாம் சேக்கிழாரின் கட்டுக் கதைதானே !
வாட் ஐ மீன்... கதைத் தொகுதியில் இருந்தவை தானே.
:)
மன்னன் திருநாவுக்கரசரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால் இப்படி சிறுபிள்ளைத்தனமான விளையாட்டெல்லாம் விளையாண்டு இருக்கமாட்டான். ஒரே வாள் வீச்சில் தலையை கொய்து இருப்பான்.
முன்பே கூட ஒருமுறை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
ஞானசம்பந்தர் மூன்றே பாட்டில் திறந்த கதவு பூட்டுவதற்கு... தான்(திருநாவுக்கரசர்) பலபாடல்கள் பாடவேண்டியிருந்தது, என்குறித்தான இறைவனின் திருவுளம் இதுதானோ என்று ஞானசம்பந்தர் குறித்து பொறாமையின்றி மனம் வெதும்பிய மகான் அவர் !
சைவ சமயத்திற்கு என்னதான் புனித முலாம் பூசினாலும் வரலாறுகளைத் திரும்பிப் பார்த்தால் சைவம் வளர்க்க இவர்கள் செய்த தகிடுதத்தங்கள் அவை பித்தளை என்றே காட்டுகிறது
http://rathnesh.blogspot.com/2007/12/blog-post_07.html
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_573.html
நமக்கு எது பிடிக்கவில்லையோ அது கட்டுக்கதை. எது பிடிக்கிறதோ, எது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, எது உண்மை என்று நம்புகிறோமோ அது வரலாறு.
தலைகீழாக நாம் கட்டுக்கதை என்று நம்புவது வரலாறாகவும் வரலாறு என்று நம்புவது கட்டுக்கதையாகவும் இருக்கும் என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.
நேற்று நடந்தது என்று ஜூனியர் விகடன் சொல்லுவதிலேயே இது நடக்கும் போது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் நடந்தவற்றில் 'எது வரலாறு', 'எது கட்டுக்கதை' என்று நம்புவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பாரிவள்ளல் வரலாற்றை கிடைத்திருக்கும் சில புறநானூற்றுப் பாடல்கள் மூலமாக உருவாக்க நான் முயல்வதைப் போல. :-)
//கோவி.கண்ணன் said...
//வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் கால்வாய், விஷம் இட்டது, ஆனை இடறியது, கடலில் போட்டது....பின்பு உழவாரப் பணி என்று ஆரம்பம் தொட்டே இவருக்கு மட்டும் இப்படி உடலால் பாடுபடுதல் ராசியானது போலும்!//
இதெல்லாம் சேக்கிழாரின் கட்டுக் கதைதானே !
வாட் ஐ மீன்... கதைத் தொகுதியில் இருந்தவை தானே//
கோவி அண்ணா..
ஜூப்பரோ ஜூப்பர்!
நான் என்ன நினைச்சேன்னா...
அப்பர் சுவாமிகள் அந்தணர் அல்ல! அதான் அவரை மட்டும் உடலால உழைக்க வச்சாரு ஈசன்-அப்படி இப்படி-ன்னு விதம் விதமா கட்டுவீங்க-ன்னு பாத்தா, கடைசீல உப்பு சப்பு இல்லாம இப்படி முடிச்சிட்டீங்களே! ஐயகோ! :)))))
//முதலில்
தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றி எடுப்பு சொல்லிப் பாடத் துவங்குகிறார்கள்!
இறுதியில் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று சொல்லி முடிக்கிறார்கள்!
SK ஐயா, கீதாம்மா...
ஓதுவார்கள் எப்படி ஓதுவார்கள் என்று அறியத் தாருங்களேன்!//
நான் ஒன்றும் எல்லாம் தெரிந்தவன் அல்லன். இருப்பினும் என்னை அழைத்ததால் சொல்ல வருகிறேன்.
நான் படித்த ஒரு நூலில் இருக்கும் செய்தி இது!
"சைவ அன்பர்கள் 'சிவசிவ' எனச் சொல்லிக்கொண்டு எழவேண்டும்.
இதையே சுந்தரர் 'காலையெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா' என்றும்,
அப்பரடிகள், 'திருவடியே உள்கி நினைந்தெழுவார் உள்ளம் ஏயவன் காண்' என்றும் அருளி இருக்கிறார்கள்.
பின்னர், முகம், கை, கால் சுத்தம் செய்து, கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து 'சிவய நம' என திருநீற்றினை இட்டு,
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை'
என விநாயகப் பெருமானைத் துதித்து,
பின், சிவனை நினைத்து,
'படைக்கலமாக உன் நாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்காட் செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூநீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம்பலத்தரனே'
எனத் துதித்து,
பின் அம்மையை நினைத்து,
'பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள் நீங்கச்
சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தை கெடப் புகலியர் கோன் அமுது செயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரி பூங்கழல் போற்றி'
எனத் துதித்து,
பின் முருகப் பெருமானை நினைத்து,
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன்மகனே -- ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.'
எனத் துதித்து,
பின் நந்தியெம் பெருமானை நினைத்து,
அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி'
எனத் துதித்து,
பின், சைவக்குரவரை நினைத்து,
'பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி'
எனத் துதித்து,
பின்,
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்'
என வாழ்த்தி, உலக நன்மை உளம் புரிந்து,
பதிகங்கள் பாடத் துவங்க வேண்டும்'
என இருக்கிறது.
எனக்கு இதில் முழு உடன்பாடே!:))
ஐயா உங்களின் வலைப்பூவில் கவரப்பட்ட எளியேன் நான். உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள். அருமையாக இருந்தது வாசிக்கும் போது. இடையிடையே ஆங்கிலக் கலப்புகள் இருப்பது மனதை உருத்தினாலும் உங்கள் தமிழ் திறனை உங்கள் எழுத்துக்கள் வெள்ளிடைமலையாக்கி நிற்கின்றன.அடியேனின் விண்ணப்பம் வாசிப்பு சுவைக்காக தாங்கள் கலக்கும் ஆங்கிலம் தங்கள் தமிழ் புலமைக்கு எள் அளவிலும் கலங்கத்தை வழங்கிவிடக்கூடாது என்பதாகும். வாசிக்கும் போது தங்கள் எழுத்தே தேன் போன்று தெவிட்டாத சுவையை தருகின்றது என்பது எளியேன் உணர்ந்து மகிழ்ந்தது.
தாங்கள் சமய சடங்குகளில் தம்பதிகளாய் பங்கு பற்றுவது ஏன் வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற வினாவை வாசகர்களிடம் விடையளிக்குமாறு விட்டிருந்தீர்கள்.ஆதலால் எளியேன் என் சிந்தைக்கு எட்டியதை எழுதுகின்றேன்.
1) இறைவனை அடைய இல்லறம், துறவறம் எனும் இருவழிமுறைகளை பொதுவாக வகுத்துள்ளது எங்கள் சமய வாழ்வியல். அதில் துறவு என்பது கடினமானது என்பது இயல்பாக யாவரும் அறிந்தவொன்று. இல்லறம் என்பது இலகுவான வழிமுறை என்பது விளங்கிக்கொள்வதற்கு கடினமாக சிலவேளைகளில் இருக்கலாம். உண்மை இல்லறம் இலகுவானது என்பதேயாகும். சரியை மார்க்கம் ஏனைய மார்க்கங்களுடன் ஒப்பிடும் போது படித்தவர் முதல் படிக்காதவர் வரை யாவரும் பின்வற்றுவதற்கு இலகுவான மார்க்கமாகும்.எனவே சிறந்த சைவக்குடும்பமாய் வாழ்வது இல்லறத்தின் வாயிலாய் கடவுளை அடையும் பண்பாகும். இளையான்குடிமாற நாயனார் இல்லற வாழ்வியலில் நின்று இறைவனையடைந்த சிவனடியார்களுக்கு எளிமையான உதாரணம். சிறந்த இல்லறம் ஒழுக்கமுள்ள சைவ சந்ததிக்கு வழிவகுக்கும் நல்லறமாகும். எனவே இல்லறத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கலாம்.
2) என்னதான் சைவசமயம் அர்த்தநாதீசுவரராக இறைவனை காட்டியும் அன்றைய காலத்தில் பெண்ணடிமையை கட்டுப்படுத்த முடியாது கடினப்பட்டது. எனினும் தளராது பெண்ணுரிமையை பாதுகாக்க போராடியது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அந்தவகையில் பெண்ணுரிமையை பாதுகாக்க போராடியபோது பயன்படுத்திய ஓர் அங்கமே தம்பதியினராய் குறித்த சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகும்.
3) குடும்பம் என்று இருந்தால் குடுப்ப பிரச்சினைகள் எழுவது இயல்பே! எனவே குடும்ப பிரச்சினைகளால் பிரிந்துள்ள தம்பதிகள் ஒன்று சேர இச்சடங்குகள் வழிவகுக்க வாய்ப்புண்டு. ஒன்றாய் சிலர் இருந்தாலும் கருத்துவேறுபாடுகளால் அடிக்கடி பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தம்பதிகள் இவ்வாறான சடங்குகளுக்காக மனம்விட்டு உறவாடும் சூழல் உருவாக வாய்ப்புண்டு.அந்தச் சூழல் மனம் இசைந்து வாழும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்கலாம்.
பொதுவாக இவ்வறான சடங்குகளில் கணவனை சிவனாகவும் மனைவியை உமையாகவும் கருதும்படி பணிக்கின்றது எமது பண்பாட்டு நெறி.
நன்றியுடன் சிவத்தமிழோன்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்."
Test
படிக்க மட்டும் வரும் வலைப்பூ இது. பின்னூட்டங்கள் கொடுக்கிறதில்லை, என்றாலும், இம்முறை கொடுக்க வச்சுட்டீங்க, தம்பதிகளாய்த் தான் எந்தவித பூஜையும் யாராக இருந்தாலும், செய்வது, நல்லது, சைவமாய் இருந்தாலும், வைணவமாய் இருந்தாலும், இருவருக்கும் சம பங்கு இருக்கிறது, கணவனின் புண்ணியத்தில் மனைவிக்குச் சமபங்கு ஆனால் அவன் செய்யும் பாவங்கள் அவளைச் சேராது! :))))))
நீங்க கேட்ட கேள்விக்கு முதலில் இறைவனை வாழ்த்திவிட்டுப் பின்னர் அவனடிகளைப் பற்றுவதே அடியார் இயல்பு, என்று எனக்குத் தோன்றுகிறது. அதனாலேயே முதலில் போற்றி, என்று சொல்லி ஆரம்பித்து, பின்னர் சிற்றம்பலநாதனின் திருவடிகளைச் சரணம் என்று சொல்லி இருக்கலாம், எதுக்கும் ஓதுவார்களையே கேட்டுடறேன், கொஞ்சம் அதிக நாட்கள் ஆகலாம், வீட்டிலே ரொம்ப பிசி!.
வைணவத்தில் வழிபாடுகள் அனைத்துமே முதலில் பெரியாழ்வாரின் பல்லாண்டில் தான் ஆரம்பிக்கும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் யாரைப் பார்த்தாலும், முதலில் கேட்பது செளக்கியமா என்றே, இறைவனை அவ்வாறு கேட்பது தகாது என்பதாலுமே, போற்றி என வாழ்த்தி இருக்கலாம். இதுவே பின்னர் மரபாக மாறி இருக்கலாம். இப்போதைக்கு பதில் கொடுக்கவேண்டும் என்பதாலேயே இந்தப் பின்னூட்டம். விளக்கம் கிடைத்ததும் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.
test
//கோவி.கண்ணன் said...
கோவி அண்ணா..
ஜூப்பரோ ஜூப்பர்!
நான் என்ன நினைச்சேன்னா...
அப்பர் சுவாமிகள் அந்தணர் அல்ல! அதான் அவரை மட்டும் உடலால உழைக்க வச்சாரு ஈசன்-அப்படி இப்படி-ன்னு விதம் விதமா கட்டுவீங்க-ன்னு பாத்தா, கடைசீல உப்பு சப்பு இல்லாம இப்படி முடிச்சிட்டீங்களே! ஐயகோ! :)))))//
என்னமோ பார்பனர்கள் மட்டும் தான் அய்யோக்கியர்கள் மற்றவர்களெல்லாம் உத்தமர் என்று நான் எங்காவது சொல்லி இருக்கிறேனா ? ஆக தாங்களும் நான் காரணமின்றி பார்பனர்களைக் குறித்து குறைபட்டுக் கொள்கிறேன் என்று முடிவு செய்துள்ளீர்கள்.
திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரன் கூட பார்பனர் தான் ஐயா.
நல்லா யோசித்துப்பாருங்கள், வள்ளலார் காலத்தில் கூட ஆன்மிக அற்புதங்கள் எதுவும் நடந்தது கிடையாது. ஆன்மீகம் என்றாலே மந்திரத்தால் (தங்க)மாங்காய் விழவைப்பது என்றே தவறாகவே பரப்பட்டு வருகிறது. அவற்றைப் போன்றது தான் நாவுக்கரசர் மன்னன் ஆணைக்கு எதிராக தப்பியதெல்லாம். அந்த காலத்தில் சமண / பெளத்த சார்புடைய மன்னர்களை எந்த அளவுக்கு கொடியவனாகக் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டி இருக்கிறார்கள். ஞான சம்பந்தர் பாடிய பதிகத்தில் சமணரைத் திட்டாதா பாடல்களே இல்லை.
இந்து மதத்தைக் குறைத்துச் சொன்னால் பார்பனர்களை சொல்வதாக நீங்களும் புரிந்து கொண்டீர்கள், இந்துக்கள் என்றால் பார்பனர் என்றே கருதுபவரா நீங்கள் ?
புரியல்ல தயவு செய்து விளக்கவும்.
:)
இன்னும் என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கலைனு நினைக்கிறேன், இல்லறம் நல்லதா? துறவறம் நல்லதா என்பது பற்றிய பதிவு ஒன்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இடுகின்றேன். 2 நாட்களில்.
//Raghav said...
எந்த ஒரு பூஜையிலும் முக்கியமானது அக்னி வளர்த்து செய்யப்படும் ஹோமம். அந்த அக்னி எடுத்துக் கொடுப்பதற்கு மனைவிக்கு மட்டுமே உரிமை. எனவே தான் தம்பதி சமேதராக செய்ய வேண்டும் என்கின்றனர்//
நன்றி ராகவ்!
அக்னி எடுத்துக் கொடுப்பதற்கு மனைவிக்கு மட்டுமே உரிமை - ஏன் என்று விளக்க முடியுமா?
பிரம்மச்சரியத்தில் உள்ள ரிஷிகள் வேள்விகள் செய்வாங்களே? அப்போ இந்த விதி பொருந்துமா?
//தங்களுடைய மூதாதையருக்கு செய்யும் திதி, சிரார்த்தங்களில் மருமகள் அக்னி எடுத்துத் தர வேண்டும்//
நல்ல தகவல்! நன்றி ராகவ்!
//குமரன் (Kumaran) said...
வைதிக முறை வழிபாடுகளில் தம்பதியராகத் தான் ஈடுபடமுடியும் என்று அறிவேன். ஆகம முறை வழிபாடுகளிலும் அப்படித்தானா இரவிசங்கர்?//
ராகவ் பதில் சொல்வார் குமரன்!
அவரைக் கேட்டிருக்கேன் பாருங்க!:)
////சுண்ணாம்புக் கால்வாய்// சிறு பிழைத்திருத்தம். கால்வாய் இல்லை; காளவாய்.//
திருத்தி விடுகிறேன்! - நன்றி!
//நீங்கள் மிக நன்றாகப் பாடியிருக்கிறீர்கள். இது காந்தாரப் பண்ணா தங்கள் சொந்தப் பண்ணா?//
காந்தாரம் போல் ஒலிக்கும் சொந்தப் பண்! கிராமத்து ஓதுவாருங்க இப்படித் தான் பாடுவாங்க! கர்நாடக இசை மெட்டாக இருக்காது!
//சேய்மையில் இருந்து நோக்க முதலில் திருமுடி தெரிந்தது போலும். அதான் அங்கிருந்து தொடங்குகிறார். அண்மையில் செல்லச் செல்ல தெய்விகத் தம்பதியரின் திருவடிகள் தெரிகின்றன//
இன்னொரு நல்ல விளக்கம்,முடி-அடி சேவைக்கு!
//மதுரையில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ இரண்டின் கண்ணிகளையும் கண்டிருக்கிறேன். மற்ற பூக்களைக் கண்ணியாகத் தொடுத்துக் கண்டதில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?//
ஓ...
சாமந்திக் கண்ணி உண்டு!
தாமரைப்பூவைக் கண்ணியாக் கட்டினாத் தான் வசதி!
பெரிய பூ என்றால் கண்ணி தான் சரிப்படும்!
//பிரித்து மேய்ந்த விளக்கம் நன்றாக இருக்கிறது இரவிசங்கர். தம்பிரான் தோழர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அடுத்த இடுகையில் பார்க்கப் படிக்கக் காத்திருக்கிறேன்//
படித்து, பின்னூட்டியும் விட்டீர்களே! இக்கட, மீ தி லேட்டு!
test
test
சாமந்தி, தாமரைக் கண்ணிகளை நானும் கண்டிருக்கிறேன் இரவி. இப்போது தான் நினைவிற்கு வருகிறது. :-)
Hey Blog, I order you to display the latest comment!!!
One more order!
என்னமோ Technical fault ப்பா!
பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணாலும் தெரிய மாட்டேங்குது. ஆனா எண்ணிக்கை மட்டும் கரெக்டா காட்டுது! Test பின்னூட்டம் போட்டா தான், அதுக்கு முந்தைய பின்னூட்டம் தலை காட்டுது!
இந்த இடுகை மட்டும் தான் இப்படி! இதே பதிவில் மற்ற இடுகைகள் எல்லாம் ஓக்கே!
யாராச்சும் இப்படிப் பார்த்து இருக்கீங்களா! ஹெல்ப் ப்ளீஸ்!
ada kadavule! test comment again!
SK ஐயாவுக்கு சிறப்பு நன்றிகள்!
தொலைபேசும் போதும், மின்னஞ்சலிலும் அவரிடம் சொல்லி விளக்கம் கேட்டிருந்தேன்!
நமக்காக மெனக்கெட்டு, அவர் தம் தேவாரத் திரட்டு புத்தகத்தில் இருந்து தட்டச்சிக் கொடுத்தமைக்கு நன்றி!
//பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி//
சம்பந்தர் பெருமான் பாண்டியன் வெப்பு நோய் ஒழித்தது தானே?
குமரன்...
பூழியர்=பாண்டியர்??
புகலியர்=?
//ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி//
அப்பர் சுவாமிகளைக் கல்லிலே கட்டி, கடலில் இட்ட போது மிதந்த காட்சி! திருப்பாதிரிப் புலியூரில் கரை சேர்ந்தார்!
//வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி//
திருநாவலூரில் அவதரித்த சுந்தரர், வன்மை மிகு தொண்டர் அல்லவா?
//ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி//
திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர் திருத்தாள் போற்றி!
//சிவத்தமிழோன் said...
ஐயா உங்களின் வலைப்பூவில் கவரப்பட்ட எளியேன் நான். உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்//
சிவத்தமிழோன் ஐயா
நெடிதுயர்ந்த பின்னூட்டத்துக்கு நன்றி!
//அடியேனின் விண்ணப்பம் வாசிப்பு சுவைக்காக தாங்கள் கலக்கும் ஆங்கிலம் தங்கள் தமிழ் புலமைக்கு எள் அளவிலும் கலங்கத்தை வழங்கிவிடக்கூடாது என்பதாகும்//
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா!
தனித்தமிழில் எழுதும் போது அதன் சுவையே தனி! காட்டுத் தேன், கொம்புத் தேன் போன்றது!
இருப்பினும் *அறிந்தே* தான் இப்படி ஆங்கிலமும் பேச்சு வழக்கும் கலந்து "லோக்கலாக" எழுதுகிறேன்.
அதற்கு முக்கியமான காரணம், மேன்மை கொள் தமிழ்ச் சமயம், இளைஞர்கள் மத்தியிலும் விளங்க வேண்டும் என்பது தான்!
வடமொழி ஸ்லோகங்களோ, இல்லை தெய்வத் தமிழ் பதிகங்களோ பாசுரங்களோ, அறிந்த பெரியவர்கள், அறிந்தே தான் உள்ளார்கள்! அவர்களுக்குப் அடியேன் ஒன்றும் புதிதாகச் சொல்லிடப் போவதில்லை!
ஆனால் இக்கால இளைஞர்கள், அவர்கள் தோள் மேல் கை போட்டுப் பேசும் தோழமை நடையில் சொன்னால், எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்! ஆன்றோர் ஆக்கி வைத்த சொத்து, சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் தானே மதிப்பு!
அதான் இது போன்ற உரிமைகளைச் பல சமயங்களில் எடுத்துக் கொள்கிறேன்! ஆன்மீக அருட் செல்வர்கள் அடியேனை மன்னிக்கவும் வேண்டுகிறேன்!
@சிவத்தமிழோன் ஐயா
//1)சிறந்த இல்லறம் ஒழுக்கமுள்ள சைவ சந்ததிக்கு வழிவகுக்கும் நல்லறமாகும். எனவே இல்லறத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கலாம்//
அருமையாகச் சொன்னீர்கள்!
மாற நாயனார் மட்டுமா? 63 நாயன்மார்களில் பெரும்பாலும் இல்லறத்தவர்களே அதிகம் இல்லையா?
சமயக் குரவர் நால்வரில், அப்பர் சுவாமிகள் தவிர மற்ற மூவரும் இல்லறத்தார் தானே??
//அந்தவகையில் பெண்ணுரிமையை பாதுகாக்க போராடியபோது பயன்படுத்திய ஓர் அங்கமே தம்பதியினராய் குறித்த சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகும்//
பெண்ணுக்கு நுட்பமான உரிமைகள் பலவற்றைச் சமயம் கொடுத்துள்ளது தான்!
ஆனால் அதுவே இன்று "பெண்ணை மட்டும் ஏன் புனிதப் படுத்துகிறீர்கள்?-தேவையில்லை அப்படி ஒரு புனிதம்" என்று வேறு கேள்வியாய் மாறி விட்டது! :)
புனிதம் என்றவுடன் புனிதவதி நினைவுக்கு வருகிறார்கள்! காரைக்கால் அம்மையாரை அவர் புனிதமாக உள்ளார் என்று தானே அவர் கணவன் ஒதுக்கி வைத்தான்?
* ஏன் இல்லறத்தில் புனிதம் கூடாதா?
* சமயம் பேசும் பெண், கணவனோடு இல்லறம் பேண முடியாதா?
* சமயம் பேசிய ஆண்களோடு மட்டும், பெண்கள் இல்லறம் பேணி உள்ளார்களே?
- இவை எல்லாம் நியாயமான கேள்விகளே! :)
சமயங்கள் தங்களையும் சமைத்துக் கொள்ள வேண்டும்! இது போன்ற பிரச்சனைகள் வரும் போது, தெளிவாகத் தீர்த்து வைக்க வேண்டும்!
ஆண்டாள் அப்படி இல்லை பாருங்கள்! அவளை இல்லறத்தில் யாரும் ஒதுக்கவில்லை!
பருத்திக் கொல்லை நாச்சியார் போன்றவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே தமிழ்ப் பணியும் சமயப் பணியும் செய்ய முடிந்தது! அதற்கான வழி வகைகளை வைணவ நடைமுறை தர்மங்கள் அமைத்துக் கொடுத்தன! - இந்த வகையிலும் தான் வைணவம் அடியேனைக் கவர்ந்தது :)
//குடும்பம் என்று இருந்தால் குடுப்ப பிரச்சினைகள் எழுவது இயல்பே! எனவே குடும்ப பிரச்சினைகளால் பிரிந்துள்ள தம்பதிகள் ஒன்று சேர இச்சடங்குகள் வழிவகுக்க வாய்ப்புண்டு//
சூப்பராச் சொன்னீங்க...
ச்சே...
அருமையாகச் சொன்னீங்க!
இவ்வாறான சடங்குகள் அப்படி இப்படி எப்படியோ கைப்பிடிக்க வைத்து விடும்! முகம் பார்க்க வைக்கும்! இறுக்கம் போய் உருக்கம் வரும்! :)
அழகான விளக்கங்கள்! நன்றி சிவத்தமிழோன் ஐயா!
மேன்மை கொள் சைவ நீதியானது ஆண்-பெண் இருவருக்கும் ஒன்றாய் விளங்கி வாழ்விக்க ஈசன் அருளட்டும்!
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக இல்லம் தன்னுள்!
பின்னர்...
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்!
//கீதா சாம்பசிவம் said...
இன்னும் என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கலைனு நினைக்கிறேன், இல்லறம் நல்லதா? துறவறம் நல்லதா என்பது பற்றிய பதிவு ஒன்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இடுகின்றேன். 2 நாட்களில்//
சூப்பர்! நன்றி கீதாம்மா!
பின்னூட்ட பப்ளிக்கேஷன் ஏதோ மக்கர் செய்கிறது இந்த இடுகையில்! நீங்க ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னீங்கன்னா சரியாயிடும்! :)
//கீதா சாம்பசிவம் said...
படிக்க மட்டும் வரும் வலைப்பூ இது. பின்னூட்டங்கள் கொடுக்கிறதில்லை//
சிவ சிவ!
நீங்க இப்படிச் செய்யலாமா? :))
//என்றாலும், இம்முறை கொடுக்க வச்சுட்டீங்க//
அதான் கேஆரெஸ்!
ஹா ஹா ஹா! :)
//கணவனின் புண்ணியத்தில் மனைவிக்குச் சமபங்கு ஆனால் அவன் செய்யும் பாவங்கள் அவளைச் சேராது! :))))))//
தோடா! மாதர் சங்கத் தலைவி இப்படித் தீர்ப்பு எழுதினா எப்படி? :)
//நீங்க கேட்ட கேள்விக்கு முதலில் இறைவனை வாழ்த்திவிட்டுப் பின்னர் அவனடிகளைப் பற்றுவதே அடியார் இயல்பு, என்று எனக்குத் தோன்றுகிறது//
இருக்கலாம்! சைவ மரபில் நெருக்கமாக நின்று காணும் பேறு இன்னும் அடியேன் பெறவில்லை! அதான் உங்களைக் கலந்து ஆலோசிக்க எண்ணினேன்!
ஆனால் பல்லாண்டு பாடும் போது, செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்று திருவடிகளைச் சொல்லிவிட்டுப் பின்னரே, இறைவன், இறைவி, ஆயுதங்கள் என்று ஒவ்வொன்றாகச் சொல்லுவது தாத்பர்யம்!
//எதுக்கும் ஓதுவார்களையே கேட்டுடறேன், கொஞ்சம் அதிக நாட்கள் ஆகலாம், வீட்டிலே ரொம்ப பிசி!//
மெள்ளக் கேட்டு ஆனால் மறக்காமச் சொல்லுங்க! மின்னஞ்சலில் அனுப்பினாக் கூடப் போதும்! உங்கள் பதிலை இங்கும் வெட்டி ஒட்டுகிறேன்!
நன்றிம்மா!
//கோவி.கண்ணன் said...
இதெல்லாம் சேக்கிழாரின் கட்டுக் கதைதானே !
வாட் ஐ மீன்... கதைத் தொகுதியில் இருந்தவை தானே:)//
ஹா ஹா ஹா!
கட்டுக் கதைகள் எங்கு தான் இல்லை கோவி அண்ணா?
இது கட்டுக் கதை என்று ஒரு பேச்சுக்கே வைத்துக் கொள்வோம்!
ஆனால் அறிவையோ, மனசையோ மூட்டை கட்டும் கதை அல்லவே! மாறாக அறிவையும், மனசையும் திறந்து வைக்கும் கதை தானே?
//மன்னன் திருநாவுக்கரசரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால் இப்படி சிறுபிள்ளைத்தனமான விளையாட்டெல்லாம் விளையாண்டு இருக்கமாட்டான்//
ஹிட்லர் எதுக்கு ரொம்பவும் சிரமப்பட்டு ரூம் எல்லாம் கட்டி, Concentration Camp நடத்தி, மெல்ல மெல்லக் கொல்லணும்? ஒரு பெருங்குண்டு போதாதா? அதே தான் இங்கும்! யோசிங்க ப்ளீஸ்! :)
//ஞானசம்பந்தர் குறித்து பொறாமையின்றி மனம் வெதும்பிய மகான் அவர் !//
ஹா ஹா ஹா
பொறாமை உங்க கண்ணுக்குத் தெரியுது!
அருள் பெறாமை எங்க கண்ணுக்குத் தெரியுது!:)
சம்பந்தருக்குச் சீக்கிரம் அருள் பண்ணீங்களே, எனக்குப் பண்ணலீயே-ன்னு பொறாமைப்படுபவரா அப்பர்?
அய்யகோ! பகுத்தறிவில் பார்த்தால் கூட எளிதா விளங்குமே?
பொறாமைப்பட்டிருந்தால் சம்பந்தக் குழந்தை பல்லக்கை அவர் அறியாமல் இவர் தூக்குவாரா? சினிமாவைப் பார்த்து விட்டுச் சொல்றீங்க போல! :)
அப்பர் இத்தினி பாட்டு பாடிய பின் தான், தனக்கு கதவு இயல்பானது! இது என்ன நியாயம்-னு கேட்ட பாடலோ, இல்லை வேறு தரவோ இருக்குங்களாண்ணா உங்களிடம் or ரத்னேஷிடம்?
//சைவ சமயத்திற்கு என்னதான் புனித முலாம் பூசினாலும் வரலாறுகளைத் திரும்பிப் பார்த்தால்...//
ஹிஹி
நான் தான் வைணவன்-ன்னு சில பேரு பதிவுலகில் சொல்லுறாங்களே! நான் எதுக்குச் சைவத்துக்குப் புனித முலாம் பூசணும்? ஹா ஹா ஹா!
ஹைய்யோ! ஹைய்யோ! :)
Post a Comment