நம்ம வீட்டில் நண்பர்க"ளும்" குடியிருக்கலாம்-னு சொன்னா அது அன்பு! நாங்க"ளும்" குடியிருப்போம்-னா அது அசட்டுத்தனம்!
நல்ல வேளை, அது போன்ற அறிவிப்புப் பலகைகளைத் தமிழக அரசு, திருக்கோயில்களில் இருந்து எடுத்து விட்டது! சட்ட திட்டம் எல்லாம் போட்டு விட்டது!
ஆனால் கருவறையில் தமிழ் அர்ச்சனை மெய்யாலுமே முழு மூச்சாக நடக்கிறதா?
பதிவில் எழுதி விளாசுகிறோமே! ஆனால் நேராப் போகும் போது, நமக்கு அப்படிப் பண்ணத் தோனுதா?
அர்ச்சகர்கள் மேல் மட்டும் விரலை நீட்டுகிறோம்! நம் மேலும் கொஞ்சம் நீட்டிக் கொள்ளலாம் அல்லவா?
ஹிஹி! தப்பில்லை! விரலை கொஞ்சம் நீட்டிக் கொள்ளுங்கள்! நானும் நீட்டிக் கொள்கிறேன்!
சென்ற முறை சென்னை சென்ற போது (Apr-2008), ஒரே ஒரு ஆலயத்தில் மட்டும் தான் இவ்வாறு செய்ய முடிந்தது! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்!
அதுவும் அங்கிருந்தவர் நண்பர்! அடியேன் கேட்டுக் கொண்டதால், சுருக்கமாக ஆண்டாள் போற்றியைச் சொல்லி அர்ச்சனை செய்து வைத்தார்! திருமயிலை கபாலீச்வரத்தில் இதே போல் முயன்றேன்! முடியவில்லை! எனக்கு அங்கு யாரையும் தெரியவும் இல்லை!
இத்தனைக்கும் வைணவ ஆலயங்களில், கருவறைக்குள்ளே தமிழைக் காலம் காலமாக ஓதுகிறார்கள்! ஆனால் அங்கு கூட, அர்ச்சனை மட்டும், தமிழில் காண்பது அரிது தான்!
இந்த உண்மையை அடியேன் வெட்கத்துடன் சொல்லியே ஆக வேண்டும்!
ஒரே ஆறுதல்: அர்ச்சனை முடிந்த பின் காட்டப்படும் கற்பூர ஆரத்தியில், தமிழ்ப் பாசுரம் சொல்லித் தீபம் காட்டுகிறார்கள்! மக்களுக்குப் புரிவது போல், பெருமாளின் வைபவத்தைத் தமிழில் சொல்கிறார்கள்!

அங்கு கவர்ந்ததே பயிற்சிப் பள்ளி என்னும் குருகுலம் தான்!
கன்னடப் பாடல்கள், தமிழ்ப் பாசுரங்கள், வடமொழி சுலோகங்கள் பயிற்றுவிக்கப் படுவதாக அறிவிப்பிலும் கண்டேன்!
கன்னடக் கோயில் தான்! ஆனால் தமிழ்மொழிக் காழ்ப்பு இன்றி, அருளிச் செயல்கள் பயிற்சி!
(அதைப் பார்த்து விட்டு, மனம் மகிழ்ந்து, கோயில் உண்டியலில் தற்காலிகமாகக் காசு போடாதீங்க-ன்னு சொன்ன நானே, காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன்! அதுக்கு மெளலி அண்ணா என்னை ஓட்டித் தள்ளுனது தனிக்கதை :)
இத்தனைக்கும் அப்போது காவிரி உண்ணாவிரதப் போராட்டம்!
மேலக்கோட்டை இராமானுசர் சன்னிதியில், "பூ மன்னு மாது பொருந்திய மார்பன்" என்று என்னால் தமிழில் உரக்க ஓதிப் பாட முடிந்தது!
எந்தக் கன்னடத்தாரும் வந்து தடுக்கவில்லை! இந்த நிலை தமிழகத்திலும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நம்மூருல தில்லையில் தமிழ்ப் பாட்டு பாடவே இல்ல தடுமாற வேண்டி இருக்கு?
அர்ச்சனை என்பது மக்களுக்காகச் செய்வது!
இறைவனைப் போற்றினாலும், சங்கல்பம் என்னும் உறுதிப்பாட்டில் மக்கள் பெயரை அல்லவா கேட்டு வாங்குகிறார்கள்?
மக்களுக்குச் செய்வது, மக்கள் உணர்வது போல் செய்தால் தான் இன்னும் நலம்!
வெறுமனே அரசு சட்ட திட்டங்களால், இது போன்ற மறுமலர்ச்சிகள், மனமலர்ச்சிகள் உருவாவதில்லை! இதற்கு மக்களை உணர வைக்கணும்! அதை அரசு செய்யுமோ?
கொள்கை அறிவிப்போடு எல்லாம் முடிந்து விடும்! கூடவே சில பயிற்சி நிலையங்கள்! அவ்வளவு தான்! உண்டியல் எண்ணவே நேரம் சரியாக இருக்கே! :)
அரசின் சாதனைகளைப் பெரிய பெரிய புகைப்படம் போட்டு, பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆளுயர கட்-அவுட்டுகள், நியான் போர்டுகள் எல்லாம் செய்யும் அரசு!
ஆனால் அதே உண்டியல் பணத்தில் கொஞ்சம் எடுத்து, மக்களைத் தமிழ் அர்ச்சனை செய்யுமாறு சொல்லும் விளம்பரங்கள், விழிப்புணர்வுகள் - இதெல்லாம் செய்யுமா? ஓ...ஓட்டுகள் பெற்றுத் தராத எதுவும் வீண் செலவு அல்லவா? :)
ஹிஹி! சரி சரி விடுங்க! ஆன்மீக இயக்கங்கள் தான், தம் தொண்டால் இதைச் செய்யணும்! வெறுமனே அம்பலம் ஏறி, நாலு பதிகம் பாடுவதோடு கடமை முடிந்தது என்று போய் விடக் கூடாது! இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், காலமெல்லாம் நிலைக்கும்! முயற்சி திருவினை ஆக்கும்!

சில அர்ச்சகர்களுக்குத் தமிழில் அர்ச்சனை செய்யவே தெரியவில்லை!
ஒரு வேளை வேண்டுமென்றே இப்படி முரண்டு பண்ணுகிறார்களோ என்று சந்தேகம் வந்தது! புத்தகத்தைப் பார்த்துச் செய்யுங்கள் என்று சொன்னார்களாம்!
அரசு வெளீயீடு புத்தகத்தைத் தேடு, தேடு-ன்னு தேடினது தான் மிச்சம்!
அர்ச்சகர்களிடமும் இல்லை! கோயில் அலுவலகத்திலும் இல்லை! அறநிலையத் துறை அலுவலரிடமும் இல்லை! அப்புறம் வந்ததான்னும் தெரியலை! :(
சரி, நாமும் தேடுவோமே-ன்னு அறநிலையத் துறை வலைத் தளத்தில் தேடினேன்! சுத்தம்! ஒன்னுமே இல்லை! வழக்கமான தமிழ் அர்ச்சனை எங்கள் மூச்சு என்ற வாய்-அர்ச்சனை மட்டும் தான் இருக்கு! :)
பதிவுகள் மூலமாக அறிமுகமான ஒருவரின் தந்தை எனக்கு உதவினார்;
எப்படியோ தேடிப் பிடித்து ஒரு புத்தகம் கைக்கு கிடைத்தது! பார்த்ததும் நானே அதிர்ந்து போய் விட்டேன்!
- மந்திரங்களுக்கான தமிழ்ப் பொருளே அதில் இல்லை!
புலவர்களை வைத்து எழுதச் சொல்லி இருக்கிறார்கள் போல! அவர்களும் அவர்கள் புலமையை நல்லாக் காட்டியிருக்கிறார்கள்! அம்புட்டு தான்! மந்திரப் பொருள் ஒன்றுமே இல்லை!
ஓம் மயூர வாகனாய நமஹ = இதுக்கு இணையான தமிழ் மந்திரமே காணோம்! மயில் வாகனம் இல்லாமல் முருகப் பெருமானுக்கு ஒரு அர்ச்சனையா?
ஓம் அக்ஷய பலப் ப்ரதாய நமஹ = வரம் தரும் கரமே போற்றி! வரம்-தரும்-கரம்-ன்னு ரைமிங்கா, எகனை மொகனையா தமிழ்ப் புலவர் எழுதிட்டாரு! பாவம், அவரைக் குறை சொல்ல முடியாது!
என்றும் நீங்காத நல் நிறைவை அருள வேணுமே போற்றி!
ஒரு குடும்பஸ்தர் நிம்மதி தேடித் தானே கோயிலுக்கு வருகிறார்? அவருக்கு நிறைவைச் சொல்லும் மந்திரம் இல்லையா? அடப் பாவமே!
நூலைத் தமிழாக்கிய பின் குன்றக்குடி அடிகளாரிடமோ, இல்லை ஜீயர்கள், துறைவர்கள், ஆதீன கர்த்தர்கள், அருளாளர்களிடமோ காட்டுவது இல்லையா? இது என்ன மொழிப் போட்டிக்கும் வீம்புக்கும் செய்வதா?
ஆண்டாளைக் கேட்டிருந்தா, அக்ஷய பலப் ப்ரதாய நமஹ = "நீங்காத செல்வம் நிறைந்தேலோ போற்றி"-ன்னு கொடுத்திருப்பாளே!
புதுசாக் கூட எதுவும் எழுத வேணாமே! மாணிக்கவாசகரும், அருணகிரியும் செய்து விட்டுப் போயிருக்கிறார்களே! அதை அப்படியே காப்பி & பேஸ்ட் பண்ணாக் கூடப் போதுமே! நிறைவான பொருள் வந்து விடுமே!
மறை ஒலிகளுக்கா தமிழில் பஞ்சம்? மந்திரமாவது நீறு! தந்திரமாவது நீறு-ன்னு இருக்கே!
திவ்ய சரணார விந்தயோஹோ = அளந்தாய் அடி போற்றி என்று திருவடி அர்ச்சனையைத் துவக்குகிறாளே கோதை! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க-ன்னு அர்ச்சிக்கிறாரே மணிவாசகர்!
** இது குறித்து அறநிலையத் துறை ஆணையருக்கும், முதல்வர் கலைஞருக்கும் தனி மடல் ஒன்று அனுப்பலாம்-னு நினைச்சேன்! - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சொல்லுங்கள்! ***
சரி, இன்னிக்கி மாணிக்கவாசகர் செய்யும் தமிழ் அர்ச்சனையைப் பாருங்கள்! அப்பறம் நீங்களே தமிழ் அர்ச்சனை தான் வேணும்-னு கேட்டு வாங்கிச் செய்வீங்க!

இல்லையேல், இதோ, ஓதுவார் பாடுவது!
nama_sivaya_vazhga... |
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
துவங்குவதே திருவைந்தெழுத்தில் தான்! பஞ்சாட்சரம்! = நமசிவாய!
திருவாசகமே ஐந்தெழுத்தில் தான் துவங்குகிறது! வேறெந்த திருமுறைக்கும் இப்படி அமையவில்லை! இது தான் திருவாசகத்தின் சிறப்பு!

அதனால் தான் வாதவூரன் சொல்ல, நாம் எழுதியது என்று ஈசனே தன் கைப்படத் திருக்கடைக்காப்பிட்டு அருளினான்! அவனுக்கே தெரியும் தன்னை விடத் தன் நமசிவாய நாமம் தான் உயர்ந்தது என்று!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்! என்பார் அப்பர் சுவாமிகள்!
முதலில் நாமம், அப்புறம் தான் மூர்த்தி! அன்று நடுச்சபையிலே பெண்ணுக்குக் கை கொடுத்தது திருநாமம்! வராத இறைவனையும், வர வைத்தது திருநாமம்!
அடுத்து நாதன் தாள் வாழ்க = இறைவனின் திருவடிகள்! அதற்குத் தான் வாழ்த்து!
இன்னும் இறைவனை இவர் வாழ்த்தவே இல்லை பாருங்க! திருநாமமும், திருவடியும் தான் பாடிக்கிட்டு இருக்காரு!
திருப்பல்லாண்டில் பெரியாழ்வாரும் இப்படியே அருளிச் செய்துள்ளார்! பல்லாண்டு, பல்லாண்டு,...உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு! - உனக்குக் காப்பு இல்லை! உனது திருவடிகளுக்குத் திருக்காப்பு!
பெரியாழ்வாரும் மாணிக்கவாசகரும் வெவ்வேறு கால கட்டங்கள்! இருந்தும் ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதிரி சிந்திக்க முடிந்தது?
கோகழி=திருப்பெருந்துறை என்னும் ஊர்! அங்கு தான் இறைவன் மெளன குருவாய் மாணிக்கவாசகருக்கு உபதேசம் காட்டி அருளினார்! நன்றி மறவாமல் ஊரைப் பாடுகிறார்! இநத ஊரு எங்கே இருக்கு, இக்காலப் பேரு என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! இந்த ஊரில் லிங்கம் கிடையாது, அம்பாள் கூட சிலை இல்லை! பாதங்கள் மட்டுமே! எல்லாப் பூசையும் மாணிக்கவாசகருக்குத் தான்!
ஆகமம் ஆகிநின்று = ஆகமம் என்பதெல்லாம் தேவையா? என்று இன்னிக்கி மெத்தப் படித்தவர்கள், படிக்காமலேயே கேள்வி எழுப்புவார்கள்! :)
ஆனால் மணிவாசகர் அப்படியில்லை! இறைவன் எங்கும் இருக்கிறான் தான்! ஆனால் விளிம்பு நிலை மாந்தர்களான நாம் அவனை எப்படித் தரவிறக்கம் செய்து கொள்வது?
* அணுக்கள் எங்கும் இருக்குது தான்! ஆனா அணு உலையில் தானே மின்சாரம் வரும்?
** பசுவின் உடலில் பால் எங்கும் இருக்கு தான்! ஆனால் காம்பில் மட்டும் தானே பால் வரும்?
வீட்டில் இருக்கும் தெய்வமும், கருவறைத் தெய்வமும் ஒன்னு தான்! ஆனால் கருவறைத் தெய்வம், நாம் மட்டும் அல்லாது, பல அடியார்கள் சேவித்து உருகிய சான்னித்யம்! அதனால் தனிநலத் தெய்வ உருவத்தை விட, பொதுநல தெய்வ உருவத்துக்குச் சாந்நித்யம் அதிகம்!
அடுத்த முறை ஆகமங்களைக் கேலி செய்யாதீர்கள்! கருவறையில் ஃபோட்டா புடிக்க விடாத ஆகமம் எங்களுக்கு வேணாம்-னு எல்லாம் பேசாதீங்க! ஆகமத்தைப் புரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்!
அண்ணிப்பான் = இனிப்பான்! அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவினுக்கே என்பார் மதுரகவியாழ்வார்! அப்படி ஆகமம் ஆகி நின்று இனிப்பவன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் = ஒன்றாய், பலவாய் இருப்பவன் ஈசன்! அந்த இறைவன் அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
வேகமாய் அலைபாயும் மனத்தை அடக்கி ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிஞ்ஞகன் = பீலி அணிந்தவன்! பினாகம் என்னும் வில், பிஞ்ஞகமானது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! பினாகம் வில்லை உடையவன் ஈசன்! அருள் பெய்யும் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் = அண்மை x சேய்மை = அருகில் x தொலைவில்!
புறத்தார்க்குத் தொலைவில் தான் நிற்பானாம்! இது மணிவாசகர் கருத்து!
கை குவித்து வணங்குபவர்! கைகளைத் தலை மேல் குவித்து வணங்குபவர்! இவர்கட்கு மகிழ்வும், ஓங்கு பெருமையும் தரும் திருவடிகள் போற்றி!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
தேசன்=தேசு/ஒளி பொருந்தியவன்! நிமலன்=குற்றமில்லாதான்!
ஆராத இன்பம்=பசி ஆறிடும்! செல்வமும் ஒரு நாள் ஆறிப் போகும்! எது ஆறாது? சிவ மங்கள இன்பம் ஆறாது! ஏன்? அது ஆராத ஒன்று! அதாச்சும் தெவிட்டாத ஒன்று! அது நித்ய விபூதி!
மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே இப்படி!
இதை விட என்னாங்க ஒரு அர்ச்சனை பண்ணிற முடியும்! பேசாம இதையே அரசு எடுத்து வெளியிட்டு இருக்கலாம்!
எங்கே, கோயில் அர்ச்சனை போலவே, நல்லா நீட்டி முழக்கி, ஒரு முறை ஓதுங்கள் பார்ப்போம்!
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! வாழ்க!!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! போற்றி!
சீரார் பெருந்துறை சிவபெருமான் திருவடிகளே சரணம்! - திருச்சிற்றம்பலம்!