Sunday, July 27, 2008

கேவி மகாதேவன் தந்த தேவாரம் முதல் பாட்டு - தோடுடைய செவியன்!

சீர்காழி அப்படின்னா இப்ப எல்லாருக்கும் நினைவுக்கு வருவது நம்ம கம்பீர கான மணி சீர்காழி கோவிந்தராஜன்! அப்பறம் அவர் புதல்வர் சீர்காழி சிவசிதம்பரம்!
ஆனால் சீர்காழி என்னும் ஊர், இவர்களுக்கு மட்டும் தான் பிறப்பிடமா? இவர்கள் இசைக்கு மட்டும் தான் பிறப்பிடமா?

சீர்காழி = அது தேவாரத்துக்கே பிறப்பிடம்! தேவாரத் தமிழிசைக்கே பிறப்பிடம்!
ஞானப்பால் சுரந்த இடம்! ஞானத்தமிழ் பரந்த இடம்! பரந்து விரிந்த இடம்!!
சைவமும் வைணவமும் ஒற்றுமையுடன் கொடி கட்டிப் பறந்த இடமும் கூட!
சம்பந்தப் பெருமானும், திருமங்கை ஆழ்வாரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, கட்டி அணைத்துக் கொண்ட இடம் என்றும் வைணவ நூற்கள் சொல்லுகின்றன! திருமங்கை ஆழ்வார் பிறந்தது சீர்காழி ஊருக்கு வெளியே உள்ள திருவாலி என்னும் ஊரில் தான்!
தமிழிசை மூவர் - அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, மூவரும் சீர்காழியில் தங்கித் தான் இசை வளர்த்தனர்!

பிரம்மாபுரம் என்னும் சீகாழி மேவிய அந்த முதல் தேவாரப் பாட்டை இன்று சிவன் பாட்டில் பார்ப்போமா? எல்லாரும் ஓரளவு அறிந்த பாட்டு தான்! - தோடுடைய செவியன்!

ஞானக் குழந்தை என்னும் படத்தில், சுசீலாம்மா பாட, கேவி மகாதேவன் இசை அமைத்தார்!
இந்தப் பாட்டுக்கு சம்பந்தர் இட்ட ராகம், தூய தமிழ்ப் பண் = நட்டபாடை என்று பெயர்! கோவில்களில் ஓதுவா மூர்த்திகள் இந்தப் பண்ணில் தான் ஓதுவார்கள்! சினிமாவிற்காக, கொஞ்சம் ஜனரஞ்சகமாக, கேவி மகாதேவன் ட்யூன் போட்டாரு!
நம் நண்பர் ஜிரா, இதை youtube-இல் ஏற்றிக் கொடுத்தாரு!



சிவபாத இருதயர் கோயில் குளத்துக்கு, தினப்படிக் கடன்களுக்குச் செல்கிறார்.
அம்மா பகவதியார் பரிந்துரைக்க, குழந்தையையும் கூட்டிச் செல்கிறார். குளக்கரையில் குழந்தையை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டுத் தான் மட்டும் சூரிய வணக்கத்துக்கு மூழ்குகிறார்!
திடீரென்று அப்பாவைக் காணாமல் குழந்தை அம்மே, அப்பே என்று அரற்றுகிறது!
குமரக் குழந்தை தானே தமிழிசை வளர்க்க சம்பந்தக் குழந்தையாய் வந்துள்ளது? அதான் சம்பந்தம் தேடி அரற்றுகிறது!

மலைநாடன் ஐயா சீர்காழிப் பயணத்தின் போது எடுத்து அனுப்பிய படம்


குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் வந்திருக்க வேண்டிய அம்மாவும் அப்பாவும், குரலைக் கேட்ட மாத்திரத்தில் தான் வருகிறார்கள்! அப்பன் அன்னையைப் பார்க்க, அன்னை அப்பனைப் பார்க்க...
அன்னை ஜகன்மாதா-உலகன்னை அல்லவா?
அவள் முலைப்பால் அனைவருக்கும் சொந்தம் அல்லவா?
பாலூட்டி மறைகிறாள் அன்னை!
கண்ணில் இப்போது நீர் போய் விட்டது! வாயிலோ பால் ஒட்டி விட்டது!

குளித்து வந்த அப்பா, நெளித்து வருகிறார்!
ச்சே யார் வீட்டுக் குழந்தைக்கு யார் பால் ஊட்டுவது?
அவர் பிரம்பெடுக்க, இது பிரம்மாபுரம் மேவிய அம்மை அப்பனைக் காட்டுகிறது!
அன்று தந்தைக்கு உபதேசம் சொன்ன குழந்தை, இன்று தந்தைக்குப் பாட்டு எடுத்துப் பாடுகிறது! தோளில் குழந்தையைச் சுமந்து கொண்டாடுகிறார் தந்தை! தமிழிசைக்கு முதல் கொண்டாட்டம் அது!

பாட்டை ஓதுவா மூர்த்திகள் குரலில் இங்கு கேளுங்கள்! நட்டபாடைப் பண்ணில்! (நன்றி: shaivam.org)
thodudaiya_chevian...


தோடுடைய செவியன் விடையேறி ஓர்
தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என்
உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து
ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே!

இதாங்க எளிமையான பொருள்! (விரிவான பொருள் கீழே)
தோட்டினைச் செவியில் அணிந்தவன், காளை மாட்டில் ஏறி உலா வருபவன்,
தூய வெண்ணிற பிறைச் சந்திரனைச் சூடியவன்,
இடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன், என் உள்ளம் கவர் கள்வன்!
இதழ்களை உடைய தாமரை மலர் மேல் உள்ளான் = பிரம்மன்! அவன் முன்பொரு நாள் பணிந்து ஏத்த, அவனுக்கு அருள் செய்த சிவபெருமான்!
பெருமை மிக்க பிரம்மாபுரம் என்னும் சீர்காழியில் மேவிய ஈசன் அவனே தான்!


ஆனால் தேவாரத்துக்கே பாயிரமான பாட்டில், ஆயிரம் பொருள் ஒளிந்திருக்கு! கொஞ்சம் அசை போடலாம் வாங்க!

சீர்காழிப் பதியின் மேல் மொத்தம் 71 பதிகங்கள்! சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரூமே பாடி உள்ளார்கள்! மூன்று நிலைகள் உள்ள கோயில் சீர்காழி! பூம்புகாருக்குப் பக்கம்! தில்லைக்கும் அருகில் தான்!
* முதல் நிலையில் பிரம்மபுரீஸ்வரர் - லிங்க ரூபத்தில்!
* இரண்டாம் நிலையில் பெரியநாயகன்-பெரியநாயகி இருவரும் ஒரு தோணியில் இருக்காங்க! பிரளயத்தின் போது 64 கலைகளையும் ஒரு தோணியில் ஏற்றிக் காத்தவர் ஆதலால் தோணியப்பர்!
* அதே நிலையில் சட்டநாதர் என்னும் இன்னொரு உருவம்! (பைரவ மூர்த்தி)

தோடுடைய செவியன் = பால் கொடுத்தது யாரு-ன்னு தானே கேள்வி! அப்போ அன்னையைக் காட்டாமல் ஏன் தோடுடைய செவியன்-ன்னு அப்பனைக் காட்டணும் குழந்தை? யோசித்துப் பார்த்தீங்களா?
தோடுடைய செவி யாருக்கு? அன்னைக்கு!
கடுக்கண் உடைய செவி யாருக்கு? அப்பனுக்கு!
சம்பந்தக் குழந்தை அன்னையின் சம்பந்தத்தைத் தான் முதலில் சொல்கிறது!
இறைவனுக்கு ஒரு குழை சங்கம்! ஒரு குழை தங்கம்! தங்கத் தோடு தொங்கும் காது எது?
வாம பாகம் என்னும் இடப் பாகம், அவள் பாகம் அல்லவா? அங்கு தான் தங்கத் தோடு மின்னுது! அவனுக்கோ வெறும் சங்குக் கடுக்கண் தான்! அதான் தோடு உடைய செவியன்(ள்) என்று அன்னையையே குறிக்கிறது குழந்தை!

சரி! அது ஏன் செவியைப் பாடணும்? வித்தியாசாமா இருக்கே! இறைவனின் கருணைக் கண்களைப் பாடினால் கூட ஓக்கே! அது என்ன செவி?
ஹிஹி...குழந்தையைக் "கண்டா" ஓடி வந்தார்கள்? அதன் அழுகுரல் "கேட்டு" அல்லவோ ஓடி வந்தார்கள்! அவர்கள் செவி தானே அவர்களை குழந்தையிடம் இட்டு வந்தது!
அதான், செவிச் செல்வத்தோடு துவங்குகிறது தேவாரம்!
செல்வத்-தோடுடன், தோடு என்று துவங்குகிறது தேவாரம்!
:)

விடையேறி = நந்திகேசன் மேல் ஏறிய ஈசன்! எருதின் மேல் ஏறியவன் சிவபெருமான்! விடை ஏறி நம் வாழ்வுக்கு விடை தருபவன்!

ஓர் தூவெண் மதி சூடி = பிறைச் சந்திரனுக்கு களங்கம் இல்லை! அதனால் தூ வெண் மதி!
மதியை வைத்து குதர்க்கமும் செய்யலாம்! கும்பிடவும் செய்யலாம்! கும்பிட்டால், குதர்க்கம் ஒழிந்து, நமக்கும் தூ வெண் மதி கிடைக்கும்!

காடுடைய சுடலைப் பொடிபூசி = இடுகாட்டுச் சாம்பல் பூசுபவன் ஈசன்! அழித்தல் தொழில் கொண்டவன் அல்லவா? ஆணவம் அழிந்த பின் மிஞ்சுவது சாம்பல் தானே! அவனே பூசிக் கொள்வதால், திருநீற்றின் பெருமை சொல்லி மாளாது!

என் உள்ளம் கவர் கள்வன் = உடலை மண் கவர்ந்தால், உள்ளம் என்னும் ஆன்மாவை ஈசன் கவர்ந்து கொள்கிறான்!
கவர்கிறான் என்று கூடத் தெரியாதவாறு கவர்வதால், கள்வன் என்று செல்லமாகச் சொல்கிறது சம்பந்தக் குழந்தை!

"கள்வன்" என்று முதல் பாட்டிலேயே திட்டுகிறது! பின்னாளில் "பித்தா" என்று முதல் பாட்டிலேயே இன்னொருவரும் திட்டப் போகிறார்! யாருங்க அவரு? சொல்லுங்க பார்ப்போம்!
இப்படிக் கள்வனை நால்வருமே கிட்டத்தட்டத் திட்டித் தான் எழுதுகிறார்கள் முதல் பாட்டில்!:)
நால்வர் திட்டும் என்னென்ன என்று யாராவது சொல்லுங்களேன்!

ஏடுடைய மலரான் = கையில் ஏடு கொண்டு, தாமரை ஏட்டில் தவழ்பவன் பிரம்மன்!
முனை நான் பணிந்து = அவன் முன்னை நாளில் பணிந்து ஏத்த
ஏத்த அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய = பெருமை மிக்க பிரம்மாபுரம் என்னும் சீர்காழியில் மேவும்
பெம்மான் இவன் அன்றே! = பெருமான் இவன் தான்!
அந்தப் பெருமானே, பால் - தந்த பெருமான்,
சொந்த பெருமான், குரல் கேட்டு - வந்த பெருமான்!


தேவார நல்லிசைப் பாடல்களோடு ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமையும்) சந்திப்போம்!
பாடல் ஓதிக் கிடைக்கவில்லை என்றால், அடியேனே பாடி இடுகிறேன்!

சிவ சிவ!
திருச்சிற்றம்பலம்!

30 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ரவி அருமை,அருமை...
வன்தொணடரையும் இப்போதே இழுத்து விட்டீர்கள் போலிருக்கிறது....
தொடர்க....

S.Muruganandam said...

அன்னையின் ஞானப்பால் உண்ட ஆளூடையப்பிள்ளையின் அருட் பதிகத்துடன் தேவார இன்னிசை நல்ல ஆரம்பம். தொடரட்டும் தங்கள் தொண்டு.

சீக்கிரம் சிவன் பாட்டுக்கும் நூற்றாண்டு கொண்டாட வேண்டுமல்லவா.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஆயில்யன் said...

//தேவார நல்லிசைப் பாடல்களோடு ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமையும்) சந்திப்போம்!
பாடல் ஓதிக் கிடைக்கவில்லை என்றால், அடியேனே பாடி இடுகிறேன்!//

மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்! ஒவ்வொரு திங்களும் ஈசன் புகழ்பாடும் பாடல்கள் & விளக்கங்களுடன் வரப்போகும் உங்கள் பதிவினை காண...!

SurveySan said...

தப்பான பதிவில வந்து கேக்கறேன், ஆனாலும் பரவால்ல.

ஹே-ராம்ல வருமே,ஆண்டாள் பாசுரமோ ஏதோதானே இது?

///பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை மாவுத்தன் அவனுமின்றி கதம் கொண்டு துழைக்கும் வெய்ய ////

இத முழுசா பாடிய ஆல்பம் இருந்தா சொல்லுங்கோ. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்.

நன்னி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@சர்வேசன் அண்ணாச்சி

பதங்கொண்டு நடத்தும் வாழ்க்கை
மாவுத்தன் அவனும் இன்றி
கதங்கொண்டு துழைக்கும் வெய்ய அங்குசம் அதுவும் இன்றி
மதங்கொண்ட வேழம் போலத்
திரிகிறேன் பண்டு நான்கு
விதங்கொண்ட மறைகள் போற்றும் அரங்கமா நகர் உளானே!

//தப்பான பதிவில வந்து கேக்கறேன், ஆனாலும் பரவால்ல//

இது சிவன் பாட்டுப் பதிவு தான்!
இருந்தாலும் பரவாயில்லை! :)

தமிழிசையில் நீங்கள் கேட்டது அடங்கும்! தேவாரம், திவ்யப்பிரபந்தம் இரண்டுமே தமிழிசை தான்!

Subbiah Veerappan said...

பாடலைப் பாடும் குழந்தை, உணர்ச்சிப்பெருக்கில் பேசும் நடிகர் ராகவன்,
கடைசியில் அப்பன், அம்மையுடன் காட்சி கொடுத்து ஆசீர்வதிக்க, கோவில் யானை
மாலையிடுவதுடன் முடியும் அந்த வீடீயோ கிளிப்பிங்......மிகவும் அருமை நண்பரே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@சர்வேசன் அண்ணாச்சி again!

நீங்க சொன்ன ஹேராம் பாடல் மொத்தம் மூன்று பாடல்களின் கலவை!

வைஷ்ணவ ஜனதோ பாடல்-நரசிம்ம மேத்தா
வாரணாமாயிரம் - ஆண்டாள்

அப்பறம் அந்தக் கடைசி பாடல்-பதங்கொண்டு நடத்தும் வாழ்க்கை-அது வாலி எழுதியது-ன்னு நினைக்கிறேன்!
பார்க்க தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம் போலவே இருக்கும்! அரங்க மா நகருளானே-ன்னு! ஆனா இல்லை! :)

அந்த ட்யூனில் அரையர்கள் வைணவ ஆலயங்களில் எப்போதும் முழங்கிப் ஓதுவார்கள்! கொஞ்சம் சந்தமா, அழகா வரும்!

வாரணாமாயிரம் சந்தமாக ஓதுதலை இங்கே கேட்கலாம்!
http://chinnajeeyar.org/audios/nach_tirumo6p5kb_8k.wma

ரொம்ப நாளாத் தேடறீங்கன்னா-சந்தமாக நாலாயிரம் ஓதுதல்!-buy a mp3 cd by Tiruvayinthai Malola Kannan
http://www.amuthammusic.com

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறிவன்#11802717200764379909 said...
ரவி அருமை,அருமை...//

நன்றி அறிவன்!

//வன்தொணடரையும் இப்போதே இழுத்து விட்டீர்கள் போலிருக்கிறது....//

அவர் இல்லாமலா?
பாட்டுடைத் தலைவர் அல்லவா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Kailashi said...
அன்னையின் ஞானப்பால் உண்ட ஆளூடையப்பிள்ளையின் அருட் பதிகத்துடன் தேவார இன்னிசை நல்ல ஆரம்பம். தொடரட்டும் தங்கள் தொண்டு.//

நன்றி கைலாஷி ஐயா!
ஒவ்வொரு பதிவிற்கும் வந்து சிறப்பியுங்கள்!

//சீக்கிரம் சிவன் பாட்டுக்கும் நூற்றாண்டு கொண்டாட வேண்டுமல்லவா//

ஹ்ம்ம்ம்ம்
கண்ணன் பாட்டு-100
முருகனருள்-100
வரிசையில்....
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்!//

ஆயில்ஸ் அண்ணாச்சி!
ஒங்க மகிழ்ச்சியே எங்க மகிழ்ச்சி!

ஒவ்வொரு திங்களும் வந்து கதவு தட்டுங்க! :)

வடுவூர் குமார் said...

ஆஹா! ஆஹா!
அருமையாக இருக்கு.

jeevagv said...

நல்ல துவக்கம் வாழ்த்துக்கள் KRS.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SP.VR. SUBBIAH said...
பாடலைப் பாடும் குழந்தை, உணர்ச்சிப்பெருக்கில் பேசும் நடிகர் ராகவன்,//

VS Ragavan தானே அவரு?
அந்தக் குழந்தையா நடிச்சது யாரு ஐயா?

//மிகவும் அருமை நண்பரே!//

நன்றி வாத்தியார் ஐயா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
ஆஹா! ஆஹா!
அருமையாக இருக்கு//

தோடுடைய செவி எப்பமே அருமையாத் தான் இருக்கும் குமார் அண்ணா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
நல்ல துவக்கம் வாழ்த்துக்கள் KRS//

என்ன ஜீவா
வெறும் வாழ்த்துக்கள் தானா?
பாட்டு எல்லாம் யாரு பாடிக் கொடுக்கறதாம்? வந்துட மாட்டேன் என் வாசகத்துக்கு? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலராஜன் கீதா...தனி மடலில்!

அன்புள்ள கேயாரெஸ்
வாழ்க வளமுடன்.
நலம். நலம் அறிந்து மகிழ்ச்சி.
= = = = = = = = = = = = = = = = = =
என்னிடம் சில தேவாரப் பாடல்கள் எம்ப்பி3 ஒலி வடிவில் உள்ளன. தேவை எனில் உங்களுக்கு அனுப்புகிறேன். பாடல் விவரங்களை இணைத்துள்ளேன்.
= = = = = = = = = = = = = = =
மற்றவை நற்செய்திகளே.

என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா

ambi said...

//பின்னாளில் "பித்தா" என்று முதல் பாட்டிலேயே இன்னொருவரும் திட்டப் போகிறார்! யாருங்க அவரு? //

சுந்தரர் தானே? :)

ambi said...

//தப்பான பதிவில வந்து கேக்கறேன், ஆனாலும் பரவால்ல.
//

@சர்வேசன், ஆனா சரியான ஆள் கிட்ட தான் கேட்டு இருக்கீங்க.

பாருங்க! எவ்ளோ சுட்டிகள்.

உங்களுக்கு ஓகேனா எங்க அண்ணனே நேர்ல வந்து பாடி காண்பிப்பார். :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
//பின்னாளில் "பித்தா" என்று முதல் பாட்டிலேயே இன்னொருவரும் திட்டப் போகிறார்! யாருங்க அவரு? //

சுந்தரர் தானே? :)//

அட, என்னைய கேட்டா?
நல்ல அ-சைவராப் பாத்துக் கேளுங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
@சர்வேசன், ஆனா சரியான ஆள் கிட்ட தான் கேட்டு இருக்கீங்க//

அடப்பாவி! சர்வேசன் அண்ணாச்சி கிட்ட போட்டுக் கொடுத்தா என்ன நடக்கும் தெரியும்-ல? ஆக்க மாட்டாரு! அளந்துருவாரு! :)

//பாடி காண்பிப்பார். :)))//

I am not steel body! I am one olli! :)

SurveySan said...

//அப்பறம் அந்தக் கடைசி பாடல்-பதங்கொண்டு நடத்தும் வாழ்க்கை-அது வாலி எழுதியது-ன்னு நினைக்கிறேன்!
பார்க்க தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம் போலவே இருக்கும்! அரங்க மா நகருளானே-ன்னு! ஆனா இல்லை! :)
//

அப்ப,தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம் தான் நான் தேட்ரது.
லிங்கோ/எம்பி3'யோ கொடுத்தீங்கன்னா, புண்ணியமா போகும் ;))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்ப,தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம் தான் நான் தேட்ரது.
லிங்கோ/எம்பி3'யோ கொடுத்தீங்கன்னா, புண்ணியமா போகும் ;))//

Surveysan=a+b
a theriyum
b yaaru?
naan venumnaa ner-la vanthu paadi kaatatumaa annachi? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சர்வேசன் அண்ணாச்சி
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடல்களைப் பாடுறது இங்கிட்டு இருக்கு!
http://www.hummaa.com/albumpage.php?md=23042&lg=16

ஆனா இவங்க ஹே ராமில் ஓதுவது போல் ஓதாம, பாடுறாங்க!
உங்களுக்கு ஓதும் ஸ்டைலில் வேணும்னா, முன்பு சொன்ன சுட்டி தான்! mp3 வாங்கியாகணும்! :)
http://amuthammusic.com/advanced_search_result.php?products_artist=MALOLAKANNAN,%20RANGANATHAN

குமரன் (Kumaran) said...

சிறு வயதில் சீர்காழிக்குச் சென்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. கோவிலைப் பற்றி ஒன்றும் அறியேன். இன்று கொஞ்சம் அறிந்து கொண்டேன்.

தோடுடைய செவியனுக்கு விளக்கம் மிகவும் அருமை. படித்து மகிழ்ந்தேன்.

தம்பிரான் தோழர் 'பித்தா' என்று தொடங்குவது தெரியும். ஆளுடைய பிள்ளையாரும் 'கள்வன்' என்கிறார் என்று இதுவரை கவனிக்காமல் விட்டுவிட்டேன். திருவாதவூர் அடிகளும் திருநாவுக்கரசப்பெருமானும் என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஆவல். சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

இரு கேள்விகள்:

தேவாரம் முதல் பாட்டு கே.வி. மகாதேவனா தந்தார்? சம்பந்தர் இல்லையா? :-)

திருஞான சம்பந்த நாயனாரும் திருமங்கையாழ்வாரும் சந்தித்தது வாதம் புரிவதற்கு இல்லையா? சமய ஒற்றுமையைப் பேணுவதற்கா? இதுவரை அது தெரியாது. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேவாரம் முதல் பாட்டு கே.வி. மகாதேவனா தந்தார்?//

என்ன குமரன் இப்படிக் கேக்கறீங்க?
கே.வி. மகாதேவன் தான் தந்தாரு!
கேவி அழுத சம்பந்தருக்கு, மகாதேவன் அல்லவா தேவாரம் தந்தார்? :))

//திருஞான சம்பந்த நாயனாரும் திருமங்கையாழ்வாரும் சந்தித்தது வாதம் புரிவதற்கு இல்லையா? சமய ஒற்றுமையைப் பேணுவதற்கா? இதுவரை அது தெரியாது. :-)//

//சைவமும் வைணவமும் ஒற்றுமையுடன் கொடி கட்டிப் பறந்த இடமும் கூட!// என்று தான் சொன்னேன்! சீர்காழி தோணியப்பரும், காழிச் சீராம விண்ணகரம் உலகளந்த பெருமாளும் ஒரு சேர விழாக்கள் கொண்டாடுவது உண்டு!

அடுத்து சொன்னது சம்பந்தர்-ஆழ்வார் சந்திப்பு! இதில் வாதம் ஒன்றும் பெரிதாக இல்லை! அணைத்துக் கொண்டது தான் பெரிதாகச் சொல்லி இருக்காங்க! அடுத்த பின்னூட்டத்தில் விரிவாகச் சொல்லுகிறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருமங்கையாழ்வார்-திருஞான சம்பந்தர் சந்திப்பு குறிந்து வழங்கலாகும் கதை இது தான்!

சீகாழியில் ஆழ்வார் அவர் கோஷ்டியோடு வீதியில் வந்து கொண்டிருந்தார். அவர் பரிவாரங்கள் அவர் பாடிய பாசுரங்களையும் பட்டப் பெயர்களையும் ஓங்கி ஒலித்த படி வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது சம்பந்தர் திருமடம் இருக்கும் வீதி வழியாக வந்த போது, மடத்து ஆட்கள், சத்தம் போடாமல் போக வேண்டும் என்று ஆட்சேபம் எழுப்பினார்கள். விவாதம் மூண்டது!

அப்போது ஆழ்வார் யாரும் எதிர்பாராத விதமாக விறுவிறு என்று சைவ மடத்துக்குள் நுழைந்து, சம்பந்தப் பிள்ளையை நேரே பார்த்து விட்டார்!

ஆளுடைய பிள்ளை ஆழ்வாரை வரவேற்று, தமிழ் பாடுமாறு கேட்டார். சமய விவாதங்கள் இல்லை! கவிதை தான்!

சம்பந்தர் 123 என்று சைகையால் காட்டக் காட்ட, அதற்கு ஏற்றாற் போல, திருமங்கையும் ஒன்று, இரண்டு, மூன்றாய், ஏழு வரை பாடினார்! சீர்காழி என்னும் காழிச் சீராம விண்ணகரப் பெருமாள் மீது பாட்டு! (பெரிய திருமொழி)

ஒருகுறளாய் இருநிலம் மூவடி மண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி, ஒன்றும்...
என்ற பாசுரம்
1-2-3-2-1 என்ற வரிசையில் வரும்!

பாசுரத்தின் இனிமையிலும், அதன் எண்கள் கட்டமைப்பிலும் மனம் பறி கொடுத்தார் சம்பந்தர்.
ஆழ்வாரின் தீந்தமிழைப் பாராட்டி, நாலுகவிப் பெருமாள் என்ற பட்டத்தை வழங்கினார் சம்பந்தர்!

இறுக அணைத்துக் கொண்டு, தன் கையில் எப்போதும் உள்ள வேலை, ஆழ்வாருக்குப் பரிசாக வழங்கினார்! பின்னர் அவரவர் பிரியா விடை பெற்று, அவரவர் பாதைகளில் ஏகினர்!
இன்றும் திருமங்கை ஆழ்வார் சிலைகளில், கையில் அந்தத் திருக்கை வேலைக் காணலாம்!

(இது குரு பரம்பரைக் கதை; சைவ நூல்கள் இந்தச் சந்திப்பு பற்றி என்ன சொல்லுகின்றன என்பதை அறிந்தவர்கள் தர வேண்டுகிறேன்)

குமரன் (Kumaran) said...

திருமங்கையாழ்வார் - திருஞானசம்பந்தர் சந்திப்பைப் பற்றிய மரபுவழிக்கதையைக் கூறியதற்கு நன்றிகள் இரவிசங்கர்.

Eezhaval said...

பல நாட்கலாக இப்பாடலின் பொருள் தேடி கொண்டு இருந்தேன்.
நன்றி.
ஒம் நமசிவாய !

Unknown said...

திருச்சிற்றம்பலம்.நாங்கள் எங்கள் பள்ளியில் சமய வகுப்பு ஆரம்பிக்க போகிறோம். இந்த பக்கம் உதவியது. நன்றி.