அச்சுதம் கேசவம் ராம நாராயணம் என்று தொடங்கும் அச்யுதாஷ்டகத்தின் பொருள் எழுதலாம் என்று இன்று இணையத்தில் கொஞ்சம் துழாவிக் கொண்டிருந்தேன். அப்போது சந்த வசந்தத்தில் இந்த பாடல் கிடைத்தது. முனைவர். அனந்த் எழுதியிருக்கிறார். மனதைக் கவர்ந்ததால் இங்கே இடுகிறேன்.
சித்திரை சதயம் தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் குருபூசை நாள். மூவரும் ஒவ்வொரு விதமாக இறைவனைப் பாடினர் அம்மையின் ஞானப்பால் உண்டதாலும் குழந்தை என்பதாலும் ஆளுடையபிள்ளை இறைவனை கொஞ்சு தமிழில் பாடினார். ஆதி காலத்தில் ஜைனராக இருந்து பின் இறைவனால் சூளை நோய் தீர்க்கப்பட்டதால் அப்பர் பெருமான் கெஞ்சு தமிழில் பாடினார். எம்பெருமான் தோழர் என்பதால் சுந்தரர் மிஞ்சு தமிழில் பாடினார். மூவரும் இறைவனை அடைய மூன்று வழிகளை காட்டினர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கோவில் கோவிலாக சென்று உழவாரப்பணி செய்த அப்பர் காட்டியது சரியை மார்க்கம். உழவாரப் படையைத் (புல்,பூண்டு நீக்கும் ஆயுதம்) தாங்கி, இறைத்தொண்டும் திருநாவுக்கரசர் செய்ததால் அவருடைய பாடல்கள் திருக்கோயில் தொண்டினையும், மனிதநேயத்தினையும் வலியுறுத்துவதாக உள்ளன. இவர் தாச மார்க்கத்தால் இறைவனை அடையலாம் என்று காட்டினார். திருஞானசம்பந்தர் கிரியை மார்க்கத்தையும் சுந்தரர் யோக மார்க்கத்தையும் உணர்த்தினர்.
என்று நமச்சிவாய என்னும் மந்திரத்தால் தண்ணீரில் மூழ்கும் கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்து வந்து கரை சேர்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள்
சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல்.
கொல்ல ஏவப்பட்ட யானையை அடக்கியது.
கட்டப்பெற்ற கல்லையே தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்து உயிர்பெற்றது.
திருநல்லூரில் இறைவனின் திருவடியைச் சூடிக்கொண்டது.
பாம்பு தீண்டப்பெற்ற அப்பூதியின் மகனின் விடத்தை நீக்கியது.
திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது.
திருமறைக்காட்டில் திருக்கோயில் கதவைத் திறக்கச் செய்தது.
பழையாறையில் உண்ணாநோன்பு இருந்து கடவுட்காட்சி பெற்றது.
இறுதியில் திருப்புகலூரில் இறைவனோடு இரண்டறக் கலந்தது.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று இறுமாப்புடன் முழங்கிய இவர், எம்பெருமானை எட்டு போற்றித்தாண்டகங்களால் பாடி மகிழ்ந்தவர் எனவே இவர் "தாண்டகவேந்தர்" என்று அழைக்கப்பட்டார். அவரது குரு பூசை நாளில் அவரது திருவங்கமாலை பதிகத்தைக் காணலாமா? அன்பர்களே.
தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
( தலையே! நீ சிவபெருமானை வணங்கு , அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து , பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.)
( கண்களே! பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.)
மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.
( மூக்கே! நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக! அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை , கௌரி, பார்வதி, உமையம்மை, மலைமகளின் மணாளன்)
வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்,
(வாயே! மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக)
நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
( இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.)
(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.)
தமிழ் கூறும் நல் உலகில் இதற்கு முன்னர் எந்தப் புலவரும் காட்டிடாத ஒப்பற்ற வழி முறைகளை கூறும் அப்பரின் திருவங்கமாலை அவரை அடையாளம் காட்டும் ஒரு அற்புத பதிகம். தலையில் தொடங்கி கண் செவி, வாய்,நெஞ்சு, கைகள், கால்கள் என்று இறைவன் கொடுத்த இந்த உடலின் அனைத்துப் பாகங்களும் எம்பெருமானின் தொண்டி செய்வதற்கே என்று பாடிய அப்பர் பெருமானின் இந்த அற்புத பதிகத்தை படித்து இன்புறுங்கள் அன்பர்களே.
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா சம்போ சம்போ சங்கரா
***
அப்பாடா. முழுப்பாடலையும் தட்டிவிட்டேன். தட்டுவதற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. எழுதியவரையும் பாடியவரையும் பாராட்டித் தான் தீர வேண்டும். இந்தப் பாடலின் பொருளழகும் பாடப்பட்ட முறையும் முதல் முறை கேட்டதில் இருந்து ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு வித மோன நிலையைத் தந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதன் பொருளை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இன்று தான் வாய்ப்பு கிடைத்தது.
அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா - கோடி கோடி உலகங்களாக நிற்கும் முட்டை வடிவான பிரபஞ்சத்தை நன்றாக நடத்துபவனே பூரணா - முழுமையானவனே ஜகத்காரணா - உலகத்தின் பிறப்பிடமே சத்ய தேவ - உண்மைக்கடவுளே தேவ ப்ரியா - தேவர்களுக்குப் பிரியமானவனே
வேத வேதார்த்த சாரா - வேதங்களுக்கும் வேதப் பொருளுக்கும் அடிப்படையானவனே யக்ஞ யக்ஞோமயா - வேள்விகளின் உருவானவனே நிஷ்சலா - சலனம்/அசைவு இல்லாதவனே துஷ்ட நிக்ரஹா - தீமையை அகற்றுபவனே சப்த லோக சம்ரக்ஷணா - ஏழுலகையும் நன்கு காப்பவனே
சோம சூர்ய அக்னி லோசனா - சந்திரன், சூரியன், தீ என்னும் மூன்று கண்களை உடையவனே ஷ்வேத ரிஷப வாகனா - வெள்ளை விடை வாகனனே சூல பாணி - திரிசூலம் ஏந்தியவனே புஜங்க பூஷணா - பாம்புகளை அணிந்தவனே த்ரிபுர நாச நர்தனா - மூவுலகையும் அழித்து ஆடுபவனே வ்யோம கேச - மேலே தூக்கி முடித்த சடையை உடையவனே மஹாசேன ஜனகா - தேவசேனாபதியான முருகனின் தந்தையே பஞ்ச வக்த்ர - ஐந்து முகத்தோனே பரசு ஹஸ்த நம: - மழுவேந்தியவனே போற்றி
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன் ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன் ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன் ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன் ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
கால - காலமே த்ரிகால - மூன்று காலமே நேத்ர - கண்ணே த்ரிநேத்ர - முக்கண்ணனே சூல - சூலனே த்ரிசூல தாத்ரம் - திரிசூலம் தாங்கியவனே சத்ய ப்ரபாவ - உண்மைப் பெருமையுடையவனே திவ்ய ப்ரகாச - தெய்வீகமான ஒளியை உடையவனே மந்த்ர ஸ்வரூப மாத்ரம் - மந்திர உருவமாக மட்டும் இருப்பவனே
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் - உலகமும் அதன் குறைகளும் இல்லாதவன் நான் நிஜ பூர்ண போதகம் ஹம் - உண்மையான முழுமையான அறிவு உடையவன் நான் கத்ய கத்மாகம் - படிக்கவேண்டியவற்றை எல்லாம் படித்தவன் நித்ய ப்ரஹ்மோகம் - என்றும் பிரம்மமானவன் ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம் - கனவுகள் இல்லாதவன் நான் நான் (வாழ்க்கை என்னும் பெருங்கனவு இல்லாதவன்)
சத் சித் ப்ரமானம் ஓம் ஓம் - உண்மையும் அறிவுமே ஆதாரங்கள் ஓம் ஓம் மூல ப்ரமேயம் ஓம் ஓம் - உலகமே அறிவது ஓம் ஓம் அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - இதுவே கடவுள் ஓம் ஓம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - நானே கடவுள் ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன சஹஸ்ர கண்ட சப்த விஹரதி - கன கன என்று ஆயிரம் குரல்களின் ஒலி கேட்கிறதே
டம டம டம டம டும ரும டும ரும சிவ டமருக நாத விஹரதி - டம டம டும ரும என்று சிவனின் உடுக்கை ஒலி கேட்கிறதே
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன் ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன் ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
வீர - வீரன் பத்ராய - மங்கலமானவன் அக்னி நேத்ராய - தீக்கண்ணன் கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன் சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன் சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன் சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்
வடமொழிப்பனுவல்: புண்டரீக முனிவர் இயற்றிய துளசி ஸ்தோத்ரம் தமிழ்ப்பனுவல்: அருட்சோதி வள்ளலார் இயற்றிய திருவருட்பா, ஆறாம் திருமுறை, பரசிவ நிலை முதல் பாடல் பாடலை வலையேற்றியது: நண்பர் இராகவன்!
மாதங்களில் சிறந்த மார்கழியில் சகல சிவாலயங்களிலும் அதிகாலையில் மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் இறைவன் முன்னர் இசைக்கப்படுகின்றன. மேலும் பல ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி பத்து நாள் திருவெம்பாவை விழா நடை பெறுகின்றது. திருமயிலையில் இந்த திருவெம்பாவை விழாவின் நிறை மூன்று நாட்கள் கபாலீஸ்வரரரும், கற்பகாம்பாளும் பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். அந்த அற்புத அனுபவத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.
இத்துடன் மாணிக்கவாசக சுவாமிகளின் தேனியும் இனிய திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் சிறப்புடைய திருவாசகத்தின் "திருப்பொன் ஊசல் பதிகத்தையும்" காண்போம்.
மகளிர் விளையாட்டில் ஊசலாடுதலும் ஒன்று. சோலைகளில் கொடிகளாகிய ஊசலிலும், இல்லத்தில் சங்கிலியால் கோர்க்கப்பட்ட பலகைகளிலும் ஏறி ஊசலாடுவர் பெண்டிர். அவ்வாறு ஆடும் போது இனிமையானதொரு பாடலைப் பாடிக்கொண்டே ஊசலாடுவர். ஊசலாட்டில் பாடும் பாடல் "ஊசல்வரி" என்று அழைக்கப்படும். ஊசல் வரியில் தலைவி இறைவன் மேல் பேரின்பம் கொண்டு இறைவனின் அறக்கருணையை பாடி பொன் ஊசல் ஆடுகின்றபடியால் இப்பதிகம் "அருட்சுத்தி" என்றழைக்கப்படுகின்றது. அருட் சுத்தி என்பது அருளால் உண்டாகிய தூய்மை. தற்போது ஊசல் ’உஞ்சல்” என்றும் ’ஊஞ்சல்” என்றும் வழங்கப்படுகின்றது.
பொன் ஊசலில் கபாலீஸ்வரர்
பூரண ஆபரண மற்றும் மலர் அலங்காரத்தில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பூஜை கண்டருளி திருக்கோவில் வலம் வந்து ஊஞ்சல் மண்டபம் வந்தடைகின்றனர். முதலில் கற்பகாம்பாள் பொன் ஆட அம்மையின் ஊடலை தணிக்கும் வண்ணம் கபாலீஸ்வரப் பெருமான் பெருங்கருணையினால் அம்மையின் முன்னர் நடனமாடுகின்றார். மொத்தம் மூன்று சுற்றுகள் ஆடுகின்றார், முதல் சுற்றில் தேவாரப் பாடலுடனும், இரண்டாம் சுற்றில் கொட்டு தாளத்துடனும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இசையுடன் நடனமாடுகிறார் ஐயன் பின் அன்னையின் சினம் தணிந்த பின் இருவரும் எதிரெதிராக பொன் ஊசல் ஆடுகின்றனர். அப்போது ஓதுவார் மூர்த்திகள் அற்புத பொன் ஊசல் பதிகத்தைப் பாட அன்பர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து பொன் ஊசல் பாடுகின்றனர். ஐயனும் அம்மையும் அகங்குழைந்து அன்பர்களுக்கு அருள பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். பின் தீபாதரனை முடிந்து யதாஸ்தானம் எழுந்தருளுகின்றனர். இந்த இனிய பொன் ஊசலின் படங்களை இப்பதிவில் காண்கின்றீர்கள். அத்துடன் பொன் ஊசல் பதிகத்தையும் அதன் பொருளையும் படித்து அருள் பெறுங்கள்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.
எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.
அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.
கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்; மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்; நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத் தோலாதோற்கே! ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே; செவ்வான் அன்ன மேனி; அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை; முதிராத் திங்களொடு சுடரும் சென்னி; மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின் வரி கிளர் வயமான் உரிவை தைஇய யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!
பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன். ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.
இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?
இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.
'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.
சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.
தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.
சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.
அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.
தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.
திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.
வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.
யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.
தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!