Friday, December 30, 2011

சிவபெருமான் க்ருபை வேண்டும்!



சிவபெருமான் க்ருபை வேண்டும்! - அவன்
திருவருள் பெற வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


அவலப் பிறப்பொழிய வேண்டும்! - அதற்கு வித்த
அவமாயை அகல வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
இராமதாசன் உய்ய வேண்டும்! வேறென்ன வேண்டும்?!




எழுதியவர்: பாபநாசம் சிவன்

பாடியவர்: அபிஷேக் இரகுராம்

இராகம்: சுருட்டி

தாளம்: ஆதி

Friday, June 24, 2011

தில்லை நல்லோன் அட்டகம்


அச்சுதம் கேசவம் ராம நாராயணம் என்று தொடங்கும் அச்யுதாஷ்டகத்தின் பொருள் எழுதலாம் என்று இன்று இணையத்தில் கொஞ்சம் துழாவிக் கொண்டிருந்தேன். அப்போது சந்த வசந்தத்தில் இந்த பாடல் கிடைத்தது. முனைவர். அனந்த் எழுதியிருக்கிறார். மனதைக் கவர்ந்ததால் இங்கே இடுகிறேன்.

அந்தமோ டாதியில் லாததோர் வத்துவாய்
விந்தையாய்த் தோன்றிடும் வித்தகா! நர்த்தனம்
தந்திமித் தாமெனத் தில்லையில் ஆடுவாய்
வந்தெனை ஆட்கொள வாய்ப்புமிங் குள்ளதோ? (1)

நிர்மலன் நிர்ப்பயன் நிர்க்குணன் என்பதாய்
வர்ணனைக் கெட்டிடா மாமறை நாயகா!
கர்மமோ யோகமோ ஞானமோ கற்றிலாத்
துர்ச்சனன் மூடனேன் தோத்திரம் செய்யுமோ? (2)

குற்றமே செய்வதைக் கொள்கையாய்க் கொண்டநான்
பற்றுதற் காகுமோ பங்கயத் தாளினை?
கற்றவர் போற்றிடும் சிற்பரா நற்றவா
எற்குமே கிட்டுமோ ஈடிலா இன்னருள்? (3)

புல்லியர் செய்பிழை போற்றிடா நல்லவன்
தில்லையில் உள்ளதாய்ச் செம்மையோர் பன்முறை
சொல்லுதல் கேட்டுனைத் தோத்திரம் செய்குவேன்
ஒல்லையென் தொல்வினை ஓட்டுதல் உன்கடன் (4)

ஏற்றிடும் ஐயனென் றெண்ணியே உன்புகழ்
போற்றிநான் சார்ந்துளேன் பொற்கழல் நீழலில்;
கூற்றினை அன்றுநீ கொன்றவா! இன்றுநான்
தோற்கிலோ உன்னையே தூற்றுவார் யாவரும்! (5)

பிஞ்சிளம் சந்திரன் செஞ்சடை சூடுவோய்
நஞ்சினை உண்ணுவோய் நர்த்தனம் ஆடுவோய்
தஞ்சமாய்ச் சார்ந்தவர் தம்வினை சாடுவோய்
அஞ்சலென் றெண்னையும் ஆதரித் தாளுவாய் (6)

விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர் தம்மகக்
கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும்
நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ!
என்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே (7)

கூத்திடும் நாத!உன் கோதிலா நாட்டியம்
பார்த்திடும் அன்பரைப் பார்த்துநான் உய்குவேன்
மூத்துநான் வீழ்கையில் முந்தியே வந்தெனைக்
காத்துநீ ஆளுவாய் காலனின் காலனே! (8)


அனந்த்
17-10-2009

Friday, April 29, 2011

திருஅங்க மாலை




மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வெண்டறை பொய்கையும் போன்றது
ஈசன் எந்தன் இணையடி நீழலே!










என்று பாடிய அப்பர் பெருமான்





சித்திரை சதயம் தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் குருபூசை நாள். மூவரும் ஒவ்வொரு விதமாக இறைவனைப் பாடினர் அம்மையின் ஞானப்பால் உண்டதாலும் குழந்தை என்பதாலும் ஆளுடையபிள்ளை இறைவனை கொஞ்சு தமிழில் பாடினார். ஆதி காலத்தில் ஜைனராக இருந்து பின் இறைவனால் சூளை நோய் தீர்க்கப்பட்டதால் அப்பர் பெருமான் கெஞ்சு தமிழில் பாடினார். எம்பெருமான் தோழர் என்பதால் சுந்தரர் மிஞ்சு தமிழில் பாடினார். மூவரும் இறைவனை அடைய மூன்று வழிகளை காட்டினர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கோவில் கோவிலாக சென்று உழவாரப்பணி செய்த அப்பர் காட்டியது சரியை மார்க்கம். உழவாரப் படையைத் (புல்,பூண்டு நீக்கும் ஆயுதம்) தாங்கி, இறைத்தொண்டும் திருநாவுக்கரசர் செய்ததால் அவருடைய பாடல்கள் திருக்கோயில் தொண்டினையும், மனிதநேயத்தினையும் வலியுறுத்துவதாக உள்ளன. இவர் தாச மார்க்கத்தால் இறைவனை அடையலாம் என்று காட்டினார். திருஞானசம்பந்தர் கிரியை மார்க்கத்தையும் சுந்தரர் யோக மார்க்கத்தையும் உணர்த்தினர்.






கற்றிணைப் பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே!

என்று நமச்சிவாய என்னும் மந்திரத்தால் தண்ணீரில் மூழ்கும் கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்து வந்து கரை சேர்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள்

சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல்.
கொல்ல ஏவப்பட்ட யானையை அடக்கியது.
கட்டப்பெற்ற கல்லையே தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்து உயிர்பெற்றது.
திருநல்லூரில் இறைவனின் திருவடியைச் சூடிக்கொண்டது.
பாம்பு தீண்டப்பெற்ற அப்பூதியின் மகனின் விடத்தை நீக்கியது.
திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது.
திருமறைக்காட்டில் திருக்கோயில் கதவைத் திறக்கச் செய்தது.
பழையாறையில் உண்ணாநோன்பு இருந்து கடவுட்காட்சி பெற்றது.
இறுதியில் திருப்புகலூரில் இறைவனோடு இரண்டறக் கலந்தது.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று இறுமாப்புடன் முழங்கிய இவர், எம்பெருமானை எட்டு போற்றித்தாண்டகங்களால் பாடி மகிழ்ந்தவர் எனவே இவர் "தாண்டகவேந்தர்" என்று அழைக்கப்பட்டார். அவரது குரு பூசை நாளில் அவரது திருவங்கமாலை பதிகத்தைக் காணலாமா? அன்பர்களே.

தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.

( தலையே! நீ சிவபெருமானை வணங்கு , அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து , பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.)

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும்பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.

( கண்களே! பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.)

மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.

( மூக்கே! நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக! அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை , கௌரி, பார்வதி, உமையம்மை, மலைமகளின் மணாளன்)

வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்,

(வாயே! மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக)

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்

(நெஞ்சமே! சடைமுடியை உடையவனும்,குற்றமற்றவனும், மலைமங்கையின் துணைவருமான ஈசனை நினைத்தபடி இரு.)

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

(கரங்களே! நாகங்களை இடுப்பில் அணிந்திருக்கும் நாதனின் மேல் மலர்களைத் தூவி அவரை வணங்குங்கள்)

ஆக்கையாற் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையாற் பயன் என்?

(சிவபெருமான் வாழ்கின்ற ஆலயங்களை வலம்வந்து பூக்களைப் பறித்து அவரைப் போற்றாத உடலை வைத்துக் கொண்டு என்ன பயன்?)

கால்களாற் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்?

( கடல் நஞ்சையுண்டு கண்டம் கறுத்தவரான சிவபெருமானின் உறைகின்ற அழகான திருக்கோயில்களை அதிலும் குறிப்பாக கோகர்ண ஆலயத்தை வலம் வராத கால்களால் என்ன பயன்?)

உற்றார் ஆருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ.

( திருக்குற்றாலத்தில் நடனமாடும் ஆனந்த கூத்தன் சிவபெருமானைத் தவிர உயிர் பிரியும் தருணத்தில் நம்மோடு இருக்கவல்ல உற்றார் வேறு யார்.?)

இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ.

( இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.)

தேடிக்கண்டு கொண்டேன் - திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.

(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.)

தமிழ் கூறும் நல் உலகில் இதற்கு முன்னர் எந்தப் புலவரும் காட்டிடாத ஒப்பற்ற வழி முறைகளை கூறும் அப்பரின் திருவங்கமாலை அவரை அடையாளம் காட்டும் ஒரு அற்புத பதிகம். தலையில் தொடங்கி கண் செவி, வாய்,நெஞ்சு, கைகள், கால்கள் என்று இறைவன் கொடுத்த இந்த உடலின் அனைத்துப் பாகங்களும் எம்பெருமானின் தொண்டி செய்வதற்கே என்று பாடிய அப்பர் பெருமானின் இந்த அற்புத பதிகத்தை படித்து இன்புறுங்கள் அன்பர்களே.


Saturday, June 26, 2010

நானே கடவுள்! அஹம் ப்ரஹ்மாஸ்மி!



ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம்.
பைரவ ருத்ராய
மகா ருத்ராய
கால ருத்ராய
கல்பாந்த ருத்ராய
வீர ருத்ராய
ருத்ர ருத்ராய
கோர ருத்ராய
அகோர ருத்ராய
மார்த்தாண்ட ருத்ராய
அண்ட ருத்ராய
ப்ரஹ்மாண்ட ருத்ராய
சண்ட ருத்ராய
ப்ரசண்ட ருத்ராய
தண்ட ருத்ராய
சூர ருத்ராய
வீர ருத்ராய
பவ ருத்ராய
பீம ருத்ராய
அதல ருத்ராய
விதல ருத்ராய
சுதல ருத்ராய
மஹாதல ருத்ராய
ரசாதல ருத்ராய
தளாதல ருத்ராய
பாதாள ருத்ராய
நமோ நம:

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

நம: சோமாய ச ருத்ராய ச நம: தாம்ராய ச அருணாய ச நம: சங்காய ச பசுபதயௌ ச நம உக்ராய ச பீமாய ச நமோ அக்ரேவதாய ச தூரேவதாய ச நமோ ஹந்த்ரே ச ஹனீயசே ச நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ நம ஸ்தாராய நம: சம்பவே ச மயோ பவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச நம: சிவாய ச சிவதராய ச

அண்ட ப்ரஹ்மாண்ட கோடி
அகில பரிபாலனா
பூரணா ஜகத் காரணா சத்ய தேவ தேவ ப்ரியா

வேத வேதார்த்த சாரா
யக்ஞ யக்ஞோமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா
சப்த லோக சம்ரக்ஷணா

சோம சூர்ய அக்னி லோசனா
ஷ்வேத ரிஷப வாகனா
சூல பாணி புஜங்க பூஷணா
த்ரிபுர நாச நர்தனா
வ்யோம கேச மஹாசேன ஜனகா
பஞ்ச வக்த்ர பரசு ஹஸ்த நம:

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
சத்ய ப்ரபாவ திவ்ய ப்ரகாச மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் நிஜ பூர்ண போதகம் ஹம்
கத்ய கத்மாகம் நித்ய ப்ரஹ்மோகம் ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம்

சத் சித் ப்ரமானம் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்

கன கன கன கன கன கன கன கன
சஹஸ்ர கண்ட சப்த விஹரதி

டம டம டம டம டும ரும டும ரும
சிவ டமருக நாத விஹரதி

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா

***

அப்பாடா. முழுப்பாடலையும் தட்டிவிட்டேன். தட்டுவதற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. எழுதியவரையும் பாடியவரையும் பாராட்டித் தான் தீர வேண்டும். இந்தப் பாடலின் பொருளழகும் பாடப்பட்ட முறையும் முதல் முறை கேட்டதில் இருந்து ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு வித மோன நிலையைத் தந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதன் பொருளை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இன்று தான் வாய்ப்பு கிடைத்தது.

***

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்


ஓம்.
பைரவ ருத்ராய
- பயங்கரமான ருத்ரன்
மகா ருத்ராய - பெரிய ருத்ரன்
கால ருத்ராய - கால வடிவான ருத்ரன்
கல்பாந்த ருத்ராய - கால முடிவான ருத்ரன்
வீர ருத்ராய - வீர ருத்ரன்
ருத்ர ருத்ராய - ருத்ரர்களில் பெரிய ருத்ரன்
கோர ருத்ராய - பயமுறுத்தும் ருத்ரன்
அகோர ருத்ராய - பயங்கரமில்லாத ருத்ரன்
மார்த்தாண்ட ருத்ராய - ஒளிவீசும் ருத்ரன்
அண்ட ருத்ராய - முட்டை வடிவ அகில ருத்ரன்
ப்ரஹ்மாண்ட ருத்ராய - மிகப்பெரிய அகில ருத்ரன்
சண்ட ருத்ராய - ஆவேசமான ருத்ரன்
ப்ரசண்ட ருத்ராய - மிக ஆவேசமான ருத்ரன்
தண்ட ருத்ராய - தண்டனையான ருத்ரன்
சூர ருத்ராய - பலம் பொருந்திய ருத்ரன்
வீர ருத்ராய - வீரனான ருத்ரன்
பவ ருத்ராய - பிறப்பிறப்புச் சுழலான ருத்ரன்
பீம ருத்ராய - வியப்புக்குரிய ருத்ரன்
அதல ருத்ராய - கீழ் உலகங்களின் முதலான அதல உலக ருத்ரன்
விதல ருத்ராய - இரண்டாவதான விதல உலக ருத்ரன்
சுதல ருத்ராய - மூன்றாவதான சுதல உலக ருத்ரன்
மஹாதல ருத்ராய - நான்காவதான மஹாதல உலக ருத்ரன்
ரசாதல ருத்ராய - ஐந்தாவதான ரசாதல உலக ருத்ரன்
தளாதல ருத்ராய - ஆறாவதான தலாதல உலக ருத்ரன்
பாதாள ருத்ராய - ஏழாவதான பாதாள உலக ருத்ரன்
நமோ நம: - போற்றி போற்றி

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்

சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

(அடுத்து வருவது ஸ்ரீருத்ரம் என்னும் வேத மந்திரத்தின் பகுதி)

நம: சோமாய ச - உமையுடன் கூடியவனுக்கு வணக்கம்
ருத்ராய ச - அழுகையைத் தருபவனுக்கும் வணக்கம்
நம: தாம்ராய ச - தாமிர நிறம் கொண்டவனுக்கு வணக்கம்
அருணாய ச - சிவந்த நிறம் கொண்ட சிவனுக்கும் வணக்கம்
நம: சங்காய ச - மகிழ்ச்சியைத் தருபவனுக்கு வணக்கம்
பசுபதயௌ ச - எல்லா உயிர்களின் உரிமையாளனுக்கும் வணக்கம்
நம உக்ராய ச - உக்கிரமானவனுக்கு வணக்கம்
பீமாய ச - பயமுறுத்துபவனுக்கும் வணக்கம்
நமோ அக்ரேவதாய ச - அருகில் இருந்து அழிப்பவனுக்கு வணக்கம்
தூரேவதாய ச - தூரத்தில் இருந்து வதைப்பவனுக்கும் வணக்கம்
நமோ ஹந்த்ரே ச - அழிப்பவனுக்கு வணக்கம்
ஹனீயசே ச - அனைத்தையும் அழிப்பவனுக்கும் வணக்கம்
நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ - பசுமையான முடி கொண்ட மரங்களாக இருப்பவனுக்கு வணக்கம்
நம ஸ்தாராய - தாரக மந்திரமான ஓம்காரமானவனுக்கு வணக்கம்
நம: சம்பவே ச - அனைத்து இன்பத்திற்கும் பிறப்பிடமானவனுக்கு வணக்கம்
மயோ பவே ச - இம்மையும் மறுமையும் ஆனவனுக்கு வணக்கம்
நம: சங்கராய ச - இயல்பாகவே இன்பத்தைத் தருபவனுக்கு வணக்கம்
மயஸ்கராய ச நம: - பேரின்பத்தை மறுமையில் தருபவனுக்கும் வணக்கம்
சிவாய ச - மங்கல வடிவான சிவனுக்கு வணக்கம்
சிவதராய ச - எல்லோரையும் விட மங்கலமானவனுக்கு வணக்கம்

(ஸ்ரீருத்ர மந்திரப் பகுதி முடிந்தது)

அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா - கோடி கோடி உலகங்களாக நிற்கும் முட்டை வடிவான பிரபஞ்சத்தை நன்றாக நடத்துபவனே
பூரணா - முழுமையானவனே
ஜகத்காரணா - உலகத்தின் பிறப்பிடமே
சத்ய தேவ - உண்மைக்கடவுளே
தேவ ப்ரியா - தேவர்களுக்குப் பிரியமானவனே

வேத வேதார்த்த சாரா - வேதங்களுக்கும் வேதப் பொருளுக்கும் அடிப்படையானவனே
யக்ஞ யக்ஞோமயா - வேள்விகளின் உருவானவனே
நிஷ்சலா - சலனம்/அசைவு இல்லாதவனே
துஷ்ட நிக்ரஹா - தீமையை அகற்றுபவனே
சப்த லோக சம்ரக்ஷணா - ஏழுலகையும் நன்கு காப்பவனே

சோம சூர்ய அக்னி லோசனா - சந்திரன், சூரியன், தீ என்னும் மூன்று கண்களை உடையவனே
ஷ்வேத ரிஷப வாகனா - வெள்ளை விடை வாகனனே
சூல பாணி - திரிசூலம் ஏந்தியவனே
புஜங்க பூஷணா - பாம்புகளை அணிந்தவனே
த்ரிபுர நாச நர்தனா - மூவுலகையும் அழித்து ஆடுபவனே
வ்யோம கேச - மேலே தூக்கி முடித்த சடையை உடையவனே
மஹாசேன ஜனகா - தேவசேனாபதியான முருகனின் தந்தையே
பஞ்ச வக்த்ர - ஐந்து முகத்தோனே
பரசு ஹஸ்த நம: - மழுவேந்தியவனே போற்றி

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

கால - காலமே
த்ரிகால - மூன்று காலமே
நேத்ர - கண்ணே
த்ரிநேத்ர - முக்கண்ணனே
சூல - சூலனே
த்ரிசூல தாத்ரம் - திரிசூலம் தாங்கியவனே
சத்ய ப்ரபாவ - உண்மைப் பெருமையுடையவனே
திவ்ய ப்ரகாச - தெய்வீகமான ஒளியை உடையவனே
மந்த்ர ஸ்வரூப மாத்ரம் - மந்திர உருவமாக மட்டும் இருப்பவனே

நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் - உலகமும் அதன் குறைகளும் இல்லாதவன் நான்
நிஜ பூர்ண போதகம் ஹம் - உண்மையான முழுமையான அறிவு உடையவன் நான்
கத்ய கத்மாகம் - படிக்கவேண்டியவற்றை எல்லாம் படித்தவன்
நித்ய ப்ரஹ்மோகம் - என்றும் பிரம்மமானவன்
ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம் - கனவுகள் இல்லாதவன் நான் நான் (வாழ்க்கை என்னும் பெருங்கனவு இல்லாதவன்)

சத் சித் ப்ரமானம் ஓம் ஓம் - உண்மையும் அறிவுமே ஆதாரங்கள் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம் - உலகமே அறிவது ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - இதுவே கடவுள் ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - நானே கடவுள் ஓம் ஓம்

கன கன கன கன கன கன கன கன சஹஸ்ர கண்ட சப்த விஹரதி - கன கன என்று ஆயிரம் குரல்களின் ஒலி கேட்கிறதே

டம டம டம டம டும ரும டும ரும சிவ டமருக நாத விஹரதி - டம டம டும ரும என்று சிவனின் உடுக்கை ஒலி கேட்கிறதே

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்

சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!

இயற்றியவர்: கவிஞர் வாலி
இசையமைத்தவர்: இசைஞானி இளையராஜா
பாடியவர்: விஜய் ப்ரகாஷ்

Thursday, March 18, 2010

அருட்சோதி தெய்வம்! எனை ஆண்டுகொண்ட தெய்வம்!

லபதே சுதராம் பக்திம்
அநதே விஷ்ணு பதம் பவேத்!
துளசீ பூ மகாலக்ஷ்மீ
பத்மினி ஸ்ரீஹரிப் ப்ரியா!

துளசி ஸ்ரீசகி சுபே
பாபஹாரிணி புண்யதே!
நமஸ்தே நாரதனுதே
நாராயண மனப்ரியே!


(பூமியில் பக்தியைத் தருபவளே! இறுதியில் மாலோன் பதம் அருள்பவளே! துளசீ! பூமியில் மகாலக்ஷ்மி! தாமரையாளே! ஹரிப்ரியையே! துளசீ! திருவின் துணைவியே! மங்கலமானவளே! பாவங்களை அழிப்பவளே! புண்ணியத்தை அருளுபவளே! நாரதரால் வணங்கப்படுபவளே! நாராயணனின் மனப்ரியையே! உனக்கு வணக்கங்கள்!)

அருட்சோதித் தெய்வம் - எனை
ஆண்டுகொண்ட தெய்வம்!
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்!!

பொருட்சாரும் மறைகள் எலாம்
போற்றுகின்ற தெய்வம்!
போதாந்தத் தெய்வம் - உயர்
நாதாந்தத் தெய்வம்!!



இருட்பாடு நீக்கிஒளி
ஈந்தருளும் தெய்வம்!
எண்ணியநான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்!!

தெருட்பாடல் உவந்து எனையும்
சிவமாக்கும் தெய்வம்!
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்!!


வடமொழிப்பனுவல்: புண்டரீக முனிவர் இயற்றிய துளசி ஸ்தோத்ரம்
தமிழ்ப்பனுவல்: அருட்சோதி வள்ளலார் இயற்றிய திருவருட்பா, ஆறாம் திருமுறை, பரசிவ நிலை முதல் பாடல்
பாடலை வலையேற்றியது: நண்பர் இராகவன்!

Friday, January 22, 2010

பொன் ஊசல் ஆடாமோ ! ! !

திருமயிலை

கபாலீஸ்வரர்



கற்பகாம்பாள் பொன் ஊசலில்

மாதங்களில் சிறந்த மார்கழியில் சகல சிவாலயங்களிலும் அதிகாலையில் மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் இறைவன் முன்னர் இசைக்கப்படுகின்றன. மேலும் பல ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி பத்து நாள் திருவெம்பாவை விழா நடை பெறுகின்றது. திருமயிலையில் இந்த திருவெம்பாவை விழாவின் நிறை மூன்று நாட்கள் கபாலீஸ்வரரரும், கற்பகாம்பாளும் பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். அந்த அற்புத அனுபவத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

இத்துடன் மாணிக்கவாசக சுவாமிகளின் தேனியும் இனிய திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் சிறப்புடைய திருவாசகத்தின் "திருப்பொன் ஊசல் பதிகத்தையும்" காண்போம்.

மகளிர் விளையாட்டில் ஊசலாடுதலும் ஒன்று. சோலைகளில் கொடிகளாகிய ஊசலிலும், இல்லத்தில் சங்கிலியால் கோர்க்கப்பட்ட பலகைகளிலும் ஏறி ஊசலாடுவர் பெண்டிர். அவ்வாறு ஆடும் போது இனிமையானதொரு பாடலைப் பாடிக்கொண்டே ஊசலாடுவர். ஊசலாட்டில் பாடும் பாடல் "ஊசல்வரி" என்று அழைக்கப்படும். ஊசல் வரியில் தலைவி இறைவன் மேல் பேரின்பம் கொண்டு இறைவனின் அறக்கருணையை பாடி பொன் ஊசல் ஆடுகின்றபடியால் இப்பதிகம் "அருட்சுத்தி" என்றழைக்கப்படுகின்றது. அருட் சுத்தி என்பது அருளால் உண்டாகிய தூய்மை. தற்போது ஊசல் ’உஞ்சல்” என்றும் ஊஞ்சல்” என்றும் வழங்கப்படுகின்றது.

பொன் ஊசலில் கபாலீஸ்வரர்

பூரண ஆபரண மற்றும் மலர் அலங்காரத்தில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பூஜை கண்டருளி திருக்கோவில் வலம் வந்து ஊஞ்சல் மண்டபம் வந்தடைகின்றனர். முதலில் கற்பகாம்பாள் பொன் ஆட அம்மையின் ஊடலை தணிக்கும் வண்ணம் கபாலீஸ்வரப் பெருமான் பெருங்கருணையினால் அம்மையின் முன்னர் நடனமாடுகின்றார். மொத்தம் மூன்று சுற்றுகள் ஆடுகின்றார், முதல் சுற்றில் தேவாரப் பாடலுடனும், இரண்டாம் சுற்றில் கொட்டு தாளத்துடனும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இசையுடன் நடனமாடுகிறார் ஐயன் பின் அன்னையின் சினம் தணிந்த பின் இருவரும் எதிரெதிராக பொன் ஊசல் ஆடுகின்றனர். அப்போது ஓதுவார் மூர்த்திகள் அற்புத பொன் ஊசல் பதிகத்தைப் பாட அன்பர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து பொன் ஊசல் பாடுகின்றனர். ஐயனும் அம்மையும் அகங்குழைந்து அன்பர்களுக்கு அருள பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். பின் தீபாதரனை முடிந்து யதாஸ்தானம் எழுந்தருளுகின்றனர். இந்த இனிய பொன் ஊசலின் படங்களை இப்பதிவில் காண்கின்றீர்கள். அத்துடன் பொன் ஊசல் பதிகத்தையும் அதன் பொருளையும் படித்து அருள் பெறுங்கள்.


திருமயிலைக் கற்பகம்

திருப்பொன் ஊசல் - அருட் சுத்தி


சீர் ஆர் பவளம்கால் முத்தம் கயிறு ஆக;

ஏர் ஆரும் பொன்பலகை ஏறி இனிது அமர்ந்து;

நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு

ஊர் ஆகத் தந்து அருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடி

போரார் வேல் கண்மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ! (1)

போருக்கு அமைந்த கூரிய வேலைப் போன்ற கண்களையுடைய பெண்களே! மேன்மை பொருந்திய பவளத்தையே கால்களாகவும், முத்து வடத்தையே கயிறாகவும் கொண்ட அழகு பொருந்திய பொன்னால் செய்த ஊஞ்சல் பலகையில் மேலேறி இனிதாக எழுந்தருளி நாயினுங்கடையேனாகிய அடியேனுக்கு திருமாலும் காணா தாமரை மலர் போல பிரகாசிக்கின்ற திருவடியினை வாழும் ஊராக கொடுத்து அருளுகின்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளி யாவர்க்கும் தெவிட்டாத அமிர்தம் போன்றவனாகிய சிவபெருமானது அருளைக் கொடுக்கின்ற இரண்டு இணையார் திருவடிகளைப் புகழ்ந்து பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத

வான்தங்கு தேவர்களும் காணா மலர் அடிகள்

தேன்தங்கித் தித்தித் அமுதுஊறித்தான்தெளிந்து அங்கு

ஊன்தங்கி நின்று உருக்கும் உத்தர கோசமங்கைக்

கோன்தங்கு இடைமருது பாடி குலமஞ்ஞை

போன்று அங்கு அனநடையீர்! பொன்ஊசல் ஆடாமோ! (2)

மயிலைப்போன்ற சாயலைப்பெற்று, அன்னப்பறவையின் நடையுடைய ஆரணங்குகளே! விளங்குகின்ற சூரியன் சந்திரன், அக்னி ஆகிய மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமானது (அமுதமுண்டமையால்) மூப்படையாத விண்ணுலகில் தங்கி வாழ்கின்ற தேவர்களும் காணா தாமரை போன்ற திருவடிகளையும், தேனொடு கலந்து , இனிமைபெற்று ஊற்றெடுத்துத் தெளிவடைந்து என் உடற்கண்ணே பொருந்தி உருகுவிக்கும் திருஉத்தரகோசமங்கைக்கு அரசனாயிருக்கும் இறைவன் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருவிதைமருதூரைப் பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

முன் ஈறும் ஆதியும் இல்லான்; முனிவர்குழாம்

பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப

தன்நீறு எனக்கு அருளித் தன்கருணை வெள்ளத்து

மன் ஊற மன்னும் மணி உத்தர கோசமங்கை

மின் ஏறும் மாடம் வியல்மா ளிகைபாடிப்

பொன் ஏறு பூண்முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ! (3)

மாற்று ஏற்றப்பட்ட பொன் ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய மங்கை நல்லீரே! தோன்றிய பொருளுக்கு முற்பட்ட முடிவும் அதன் மேற்பட்ட தோற்றமும் இல்லாத சிவபெருமான் பற்பல நூறுகோடித் தொகையினராகிய முனிவர் கூட்டங்களும், இமையா தேவர்களும் நிற்க, தனது கருணையாகிய பால் வெண்ணீற்றை எனக்கு தந்தருளிய , தன் மகிமை வளர நிலை பெற்ற அழகிய திருஉத்தரகோசமங்கையிலுள்ள மின்னலைப் போல் பிரகாசிக்கின்ற மேல் மாடங்களையுடைய திருக்கோவிலைப்பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!


நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத் தவர்நாதன்;

மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை

அம் சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்

நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணைசெய்து

துஞ்சல் பிறப்பு அறுப்பான்; தூய புகழ்பாடி


புஞ்சம் ஆர் வெள்வளையீர் பொன் ஊசல் ஆடாமோ! (4)


தொகுதியாக பொருந்திய வெண்மையான சங்கு வளைகளை அணிந்த பெண்காள்! விடம் தங்கிய மணிகண்டத்தையுடையவன், அனைத்து தேவர்களுக்கும் இறைவன், கருத்த மேகங்கள் தவழுகின்ற நெடிதுயர்ந்த மாடங்களையுடைய அழகு பொருந்திய திருஉத்தரகோசமங்கையில் இனிய மொழியாளாகிய மலையரசன் பொற்பாவை உமையம்மையுடன் சேர்ந்து அடியவரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமிர்தம் சுரந்து அருள் கொடுப்பவனும், பிறப்பு இறப்பு என்னும் தளையை அழிப்பவனும் ஆகிய சிவபெருமானின் பரிசுத்தமாகிய புகழைப்பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர்

காணாக் கடவுள்; கருணையினால் தேவர்குழாம்

நாணாமே உய்ய ஆட் கொண்டருளி நஞ்சுதனை

ஊண் ஆக உண்டு அருளும் உத்தர கோசமங்கைக்

கோண் ஆர் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்

பூண் ஆர் வனமுலையீர்! பொன்னூசல் ஆடாமோ! (5)

ஆபரணங்கள் நிறைந்த மிகு அழகாகிய தனங்களையுடைய நங்கையரே! ஆண் இனமோ, பெண் இனமோ அல்லது அலி இனமோ என்று திருமாலும், நான்முகனும் தேடியும் காணாப்படா பெருங்கடவுளும் தன் மாப்பெரும் கருணையினால் தேவர் கூட்டம் நாணமடையாமல் பிழைக்கும்படி அடிமை கொண்டருளி, பாற்கடலிலிருந்து தோன்றிய ஆலகால விடத்தை உணவாக உட்கொண்டருளின திருஉத்த்ரகோசமங்கையிலுள்ள வளைவுள்ள மூன்றாம் பிறைச் சந்திரனை தன் ஜடாமுடியில் ஆபரணமாக அணிந்த கூத்தனாகிய சிவபெருமானது பெருங்குணத்தைப் பாடித் துதித்து பொன் ஊசல் ஆடுவோமாக!


மாது ஆடு பாகத்தன்; உத்தர கோசமங்கைத்

தாது ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்

கோது ஆட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்பிறவித்

தீது ஓடா வண்ணம் திகழப் பிறப்பு அறுப்பான்

காது ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்

போது ஆடு பூண்முலையீர்!
பொன் ஊசல் ஆடாமோ! (6)

தாமரை அரும்புகள் போல அசைகின்ற திருவாபரணங்களை பூண்ட தனங்களையுடையீர்! மலைமகளை தன் ஒரு பாகம் வைத்த உமையொருபங்கன்; திருஉத்தரகோசமங்கையில் உள்ள மகரந்தப் பொடி பொதிந்த பொன் கொன்றைப் பூமாலையை அணிந்த சடையையுடையவன்; தன் திருத்தொண்டர்களுக்குள்ளே நாயினும் கடையேனை ஒருவனாகப் பாராட்டி அடிமை கொண்டு, எனது பழைய பிறவித்துன்பங்கள் பெருகாவண்ணம் நான் ஞானத்தோடு விளங்கும்படி எனது பிறவித்தளையை அறுப்பவனுமாகிய சிவபெருமானின் காதில் அசைந்து ஆடும் அழகிய குண்டலங்களை அன்பினாற் கசிந்துருகிப் பாடி பொன் ஊசல் ஆடுவோமாக!


அருள் வாரி வழங்கும் அம்மையும் அப்பனும்

உன்னற்கு அரியதிரு உத்தர கோசமங்கை

மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

பன்னிப் பணிந்து இறைஞ்சப் பாவங்கள் பற்றுஅறுப்பான்

அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணி மயில்போல்

என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான்; எழில்பாடி

பொன் ஒத்த பூண்முலையீர்!
பொன் ஊசல் ஆடாமோ! (7)

அணிகளையணிந்த பொன்னொத்த தனங்களையுடைய பாவையரே! நினைத்தற்கரிய திருவினையுடைய திருஉத்தரகோசமங்கையில் நிலைபெற்று பொலிவுடன் விளங்குகின்ற வேதியனும்; தனது புகழினையே பல காலும் சொல்லி தாழ்ந்து வணங்க, பாவங்களின் பிடிப்பை ஒழிப்பவனும், எனக்கு அப்பனாகி என்னை ஆட்கொண்ட வள்ளல் ஆனவனும், என்னையும் ஒரு பொருளாக அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, பேரழகினைப்பாடி அன்னப்பறவையின் மீது ஏறி ஆடுகின்ற அழகிய மயிலைப் போன்று நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து ஆடுவோமாக!

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்

சால அமுது உண்டு தாழ்கடலின் மீது எழுந்து

ஞாலம் மிகப்பரிமேல் கொண்டு நமை ஆண்டான்;

சீலம் திகழும் திருஉத்தர கோசமங்கை

மாலுக்கு அரியானை வாயார நாம்பாடிப்

பூலித்து அகங்குழைந்து
பொன் ஊசல் ஆடாமோ. (8)

உலகம் உய்யும்படியாக அழகிய திருக்கயிலை மலையின் உச்சியினின்றும் குவலயத்து நிலவுலகில் இறங்கி வந்தருளி, வந்தி தரும் பிட்டினை நிரம்ப உண்டும், மிக ஆழந்த கடலில் வலைஞனாய்க் கட்டு மரத்தின் மீது ஏறி வலை வீசி மீன் பிடித்தும், பரிமேலழகனாய்க் குதிரை மீது வந்தும், நம்மை ஆண்டருளினவனாகிய நல்லொழுக்கம் விளங்குகின்ற, திருஉத்தர கோச மங்கையிலுள்ள, திருமாலுக்கும் காணுதற்கு அருமையான இறைவனை நாம் வாய் நிரம்பப் பாடி உடல் பூரித்து, மனம் நெகிழ்ந்து, பொன் ஊசல் ஆடுவோமாக!


தெங்குஉலவு சோலைத் திருவுத்தர கோசமங்கைத்

தங்குஉலவு சோதித் தனிஉருவம் வந்து அருளி

எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்;

பங்குஉலவு கோதையும் தானும் பணிகொண்ட

கொங்குஉலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்

பொங்குஉலவு பூண்முலையீர்!
பொன் ஊசல் ஆடாமோ! (9)

விளக்கம் பொருந்திய பிரகாசம் பொருந்திய ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய கன்னியரே! தென்னஞ்சோலைகள் சூழ்ந்த திருஉத்தரகோசமங்கையில் தங்கி, பொருந்திய ஒளி மயமான ஒப்பற்ற திருவடிவையுடைய இறைவன் வந்தருளி, எளி வந்த கருணையினால் எங்கள் பிறவித் தொடர்பை அறுத்து எங்கள் இனத்தையும் அடிமை கொள்ளும் பொருட்டு இடது பாகத்தில் சோதிமயமான பரமேஸ்வரியும் தானுமாகி வந்தருளி என் குற்றேவலைக் கொண்டு எனை ஆளாக்கிக் கொண்ட, மணம் நிறைந்த பொன் கொன்றைமலர் மாலையைத் தரித்த சடைமுடியுடையவனாகிய சிவபெருமானது மங்கள குணங்களைப் புகழ்ந்து பொன் ஊசல் ஆடுவோமாக!



Saturday, January 2, 2010

வருகலாமோ ஐயா...

வருகலாமோ ஐயா - நான் அங்கே
உந்தன் அருகில் நின்று
கொண்டாடவும் பாடவும் (நான் அங்கே வருகலாமோ)

பரமக்ருபாநிதி அல்லவோ - இந்த
பறையன் உபசாரம் சொல்லவோ - உந்தன்
பரமானந்த தாண்டவம்
பார்க்கவே (நான் அங்கே வருகலாமோ)

பூமியில் புலையனாய் பிறந்தேனே - ஒரு
புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே - பவ
சாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா எந்தம்
பரிதாபமும் பாவமும் தீரவே (நான் அங்கே வருகலாமோ)



இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதியார்
பாடியவர்: தண்டபாணி தேசிகர்
படம்: நந்தனார்
ராகம்: மாஞ்சி
தாளம்: மிஸ்ரதாபு


***

பாடல் வரிகளுக்கு நன்றி: தி.ரா.ச. ஐயா.