Sunday, May 24, 2009

காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி


பங்குனிப் பெருவிழாவின் போது மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளும் அந்த அழகைக் கண்டு பாபனாசம் சிவன் அவர்கள் " காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாடிய அந்த சௌந்தர்யத்தை அந்த அதிகார நந்தி வாகனத்தின் தாத்பரியத்தை இக்கட்டுரையில் காண்போம் மற்றும் அந்த பாடலை கேட்போம்.


ஒரு நந்தி தனில் இவர்ந்து ஒரு நந்தி தலைச் சூடி உலகமெல்லாம்
தரு நந்தி உமையுடனே சார்ந்த பெரும் கயிலைதனில் காவல் பூண்டே
கரு நந்தி இட அருள்வான் கர நான்கும் கண் மூன்றும் கலந்த ஞானத்
திரு நந்தி தலைவன் உயர் சிவாகமங்கள் ஓர்ந்தானை சிந்தை செய்வாம்.



பொருள்: நந்தியாகிய இடப வாகனத்தில் அமர்ந்து, பாம்பை தலையில் சூடி, உலகிலுள்ளவர்களூக்கெல்லாம் நன்மையைத் தந்து உமா தேவியாருடன் இருக்கும் சிவபெருமானின் கயிலை மலைக்கு காவலனாக இருக்கும் அதிகார நந்தி தேவர், நான்கு தோள்களும், மூன்று கண்ணும் கொண்டவராக உள்ளார். சிவபெருமானிடமிருந்து ஆகமங்களை அறிந்து உலகிற்கு ஞானம் வழங்கிய அந்த நந்தி தேவரை சிந்தை செய்வோம் என்று புலியூர்ப் புராணம் அதிகார நந்தி தேவரின் புகழைக் கூறுகின்றது.

கபாலீஸ்வரரின் அதிகார நந்தி சேவை முன்னழகும் பின்னழகும்

சிவபெருமானைப் காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி போற்றி வணங்கி, அந்த காருண்ய மூர்த்தியைப் போலவே சாரூப நிலை பெற்றவர்கள் அனேகராவர். இவர்கள் முக்கண் சுடர் விருந்தினைப் போலவே தலையில் ஜடாமகுடமும் அதில் தாரமர் கொன்றையும், ஊமத்தையும், சந்திரப்பிறையும் தாங்கும் பேறு பெற்றவர்கள். நான்கு கரங்கள் கொண்டு மேற்கரங்களில் மான், மழு ஏந்துபவர்கள். இவர்களில் முதன்மையானவர், எம்பெருமானின் முழு முதல் தொண்டரான நந்தியம்பெருமான் ஆவார். அப்போது அவர் அதிகார நந்தி என்று வழங்கப்படுகிறார். இவர் சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும், வெண்மை நிறமும் கொண்டவர். இறைவனின் ஞான வாளையும், பொற்பிரம்பையும் தாங்கி நிற்பவர். இவருடைய தேவியின் பெயர் சுயம்பிரபா என்பது ஆகும்.


நந்தி முகமும், மனித உடலும் கொண்டு , வலது காலை மடக்கி, இடது காலை ஊன்றி மண்டியிட்ட நிலையில் கீழ் திருக் கரங்கள் இரண்டிலும் ஐயனின் பாதங்களைத் தாங்கி, நான்கு தோள்களிலும் எம்பெருமானை சோமாஸ்கந்தராக தாங்கி வீதி வலம் வருவது " அதிகார நந்தி சேவை " எனப்படுகின்றது. அதிகார நந்தி ஞானத்தின் திருவுருவம். நந்தீ என்பதற்கு வளர்வது என்று பொருள். நமது அறிவையும் செல்வத்தையும் வளர்ப்பவராக இருப்பதால் தான் சிவபெருமானுக்கும் நந்தி என்ற பெயர் வழங்கப்படுகின்றது. நந்தி நாமம் நமச்சிவாயவே என்னும் தொடரும் இதனையே உணர்த்துகின்றது. அவர் தன் சார்பாக அறிவு செல்வம், இன்பம் ஆகியவற்றை தடையின்றி வழங்கும் அதிகாரத்தை நந்தியம்பெருமானுக்கு அளித்துள்ளார். அதிகாரம் பெற்ற வல்லமை மிக்க நந்தி தேவர் அதிகார நந்தி எனப்படுகின்றார்.
கந்தர்வி வாகனத்தில் கற்பகவல்லி


ந்தருவன் வாகனத்தில் சிங்கார வேலவர்

சோமஸ்கந்தர்


விரைமலர் குழல்வல்லி
மறைமலர் பத வல்லி
விமலி கற்பகவல்லியே

யோக சாஸ்திர பிரகாரம் அதிகார நந்தியின் விளக்கம், அதிகார நந்தி என்பது ஒரு உவமை மனிதனின் கபாலத்தில் மூளைக்கு நடுவில் இருக்கும் ( pineal gland) என்னும் சுரப்பியை குண்டலினி சக்தி அடையும் போது ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. காலம் தாண்டின அறிவு ஏற்படுகின்றது. உடம்பு வஜ்ரமாகின்றது. சித்தர்கள் இதை நந்தி என்று சொல்கின்றனர். இந்த உடலோடு ஆத்ம தரிசனம் அதாவது சிவ தரிசனம் அடைய நந்தியின் அனுமதி தேவை. அதற்குத்தான் சிவனை மனிதனுக்கு காட்டும் அதிகாரம் உள்ளது. இவ்வாறு உடலுக்குள் இருக்கிற ஆன்மாவே உலகமெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியிருப்பதை அந்த நந்தி காட்டுகின்றது. இறை அனுபவம் எளிதல்ல. மனிதான் யோகம் பயின்ற வஜ்ரம் போன்ற உடம்போடு கம்பீரமான பணிவோடு இடைவிடாத எருது உழைப்போடு முயன்றால், யோக வழியில் முயன்றால் நந்தி என்னும் சுரப்பி திறந்து தலைக்கு மேலே இறை தரிசனம் பெறலாம் என்பதை குறிப்பதே அதிகார நந்தி வாகனம் என்று ஆன்றோர்கள் இவ்வாகனத்தின் தாத்பரியத்தை விளக்குகின்றனர்.

வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர்




வெள்ளி மயிலை அதிகார நந்தியின் கண்ணில் இறைவனைத் தாங்குகின்ற பேறு பெற்றதின் மிகப் பெரிய சந்தோஷம் தெரியும். மண்டியிட்ட உடலில் பணிவு தெரியும்.பளபளப்பில் சுத்தம் தெரியும். உயரமும் அகலுமுமான உருவத்தில் உறுதி தெரியும். அதுபோல நாமும் உறுதி, சுத்தம், பணிவு, கனிவு கொள்ள வேண்டும் என்பதைத்தான் அதிகார நந்தி நமக்கு உணர்த்துகின்றதோ?

அதிகார நந்தி சேவை காண்பதால் தெளிந்த அறிவு, உடல் வலிமை, குறைவற்ற செல்வம், நிறைந்த மன மகிழ்ச்சி, சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு , பெரியோர்கள் நன்மதிப்பு முதலியன உண்டாகும்.




இசையில் மயங்கி பவனி வரும் சிங்கார வேலவர்




கயிலையே மயிலை எனப்படும் திருமயிலப்பூரிலே எம்பெருமான் உமையம்மையின் ஞானப்பாலுண்டு தீந்தமிழ் பதிகங்கள் பாடி இம்மயிலையிலேயே சாம்பரை அங்கம் பூம்பாவை ஆக்கிய ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தருக்கும் அவரது தந்தையாராம் சிவபாத இருதயருக்கும் அதிகார நந்தி சேவை அருளுகின்றார். சோமாஸ்கந்தராக வெள்ளி அதிகார நந்தியிலே ஈரேழு புவனங்களுக்கும் ஈசனான எம்பெருமான் செங்கோல் தாங்கியும், வெள்ளி மூஷிக வாகனத்திலே நர்த்தன வினாயகரும், கந்தர்வி வாகனத்திலே ஆடும் மயிலாய் அன்று இறைவனை அர்ச்சித்த கற்பக வல்லியும், கந்தர்வ வாகனத்திலே வள்ளி தேவசேனா சமேத சிங்கார வேலவரும், வெள்ளி இடப வாகனத்திலே சண்டிகேஸ்வரரும் அன்று சேவை சாதிக்கின்றனர். அதிகாலை 6 மணிக்கு கோவிலை விட்டு கிளம்பும் பஞ்ச மூர்த்திகள் 11 மணியளவில் திருக்குளத்தின் தென் மேற்கு மூலையில் உள்ள பந்தலில் வந்து தங்குகின்றனர், நாம் எல்லோரும் உய்ய சேவை சாதித்த பின் 1 மணி அளவில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு 4 மணியளவில் திருக்கோவிலை அடைகின்றனர்.



கம்பீர திருமயிலை வெள்ளி அதிகார நந்தி

அதிகார நந்தி சேவை ஓவியம்

எம்பெருமானுக்கு நடனத்தின் போது மத்தளம் இசைப்பவர் நந்தியம்பெருமான், கந்தர்வர்களும் இசை மரபினர் ஆகவே இன்றைய தினம் ஒரே இசை மயம் தான், ஐயனை தோளிலே தாங்கி அன்பர்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து ஆடி வரும் அழகை எப்படி வர்ணிப்பது. நேரில் கண்டால் மட்டுமே அந்த தெய்வீக உணர்வைப் பெற முடியும். பாபநாசம் சிவன் அவர்கள் பக்திபரவசத்துடன் பாடிய பாடல் இதோ.

ராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.

பல்லவி

காணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)

அனுபல்லவி

மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்

மணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்

மதியோடு தாராகணம் நிறையும் அந்தி

வானமோ கமலவனமோ என மனம்

மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க

அபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)

சரணம்

மாலோடு அயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

நமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி

கருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்

காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்

சிவகணமும் தொடர கலைவாணி

திருவும் பணி கற்பகநாயகி வாமன்

அதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)

(பாடலுக்கு நன்றி மௌலி மற்றும் ஜீவா வெங்கட்ராமன்)

Friday, May 22, 2009

எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே


எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
(எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படி பாடினரோ)






டி.எம்.எஸ். குரலில்

இயற்றியவர்: கவியோகி திரு. சுத்தானந்த பாரதியார்
வயலினில் இசைத்தவர்: குன்னக்குடி திரு. வைத்தியநாதன்
பாடியவர்: சிக்கில் திரு. குருசரண், டி.எம்.எஸ்.
இப்பாடலை தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. கிருஷ்ணமூர்த்தி

அனைவருக்கும் நன்றி.

நடராஜர் படத்திற்கு நன்றி: குந்தவை (மோகன் தாஸ்)