Wednesday, March 5, 2008

இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே!!!


இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே

படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்தலி கண் குளிர
தில்லையிலே (இடது)

திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என
திகுதிமிதகுதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையொடு (இடது)

பாடலை இங்கே கேட்கலாம்.

பாடியவர்: சுதா இரகுநாதன்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: கமாஸ்
தாளம்: ஆதி

Tuesday, March 4, 2008

தில்லை அம்பல நடராஜா!!!


முதன்முதலில் என் மனத்தில் தங்கிய இசைப்பாட்டு இது தான் என்று நினைக்கிறேன். சிறு வயதில் பற்பல நாட்கள் நாங்கள் (நானும் என் தம்பியும்) தூங்குவதற்காக எங்கள் தந்தையார் பாடிய பாடல் இது. எங்களுக்குத் தாலாட்டாக அமைந்தது. அந்தப் பழக்கம் தான் இன்று நான் என் மக்களுக்குத் தாலாட்டாக இறைப்பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறேன் போலும்.

என் தந்தையாரின் பெயர் நடராஜன். நாங்கள் மதுரைக்காரர்கள். அதனால் பல முறை ஏன் இந்தப் பாடல் என் தந்தையாருக்குப் பிடித்தது என்று சிந்திக்கும் போது ஒருவேளை 'நடராஜா' என்று வருவதால் இருக்குமோ, 'பாண்டிய ராணி நேசா' என்று வருவதால் இருக்குமோ என்றெல்லாம் எண்ணியதுண்டு. :-)

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!


தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா (தில்லை)



எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை)

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா (தில்லை)


இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
படம்: சௌபாக்கியவதி
இசை: பெண்ட்யால நாகேஸ்வரராவ்
வெளிவந்த வருடம்: 1957

முதல் வணக்கம்

நண்பர்களே!

முருகனருள், கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு குழுப்பதிவுகளைத் தொடர்ந்து சிவபெருமான் பாடல்களுக்காக இந்த வருட சிவராத்திரியை முன்னிட்டு இந்தப் பதிவைத் தொடங்குகிறேன். இதுவும் ஒரு குழுப்பதிவாக அமையும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
குமரன்.